செவ்வாய், 3 ஜனவரி, 2012

அஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!

அஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்…’ இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. 
ஆங்கில நாளிதழ்களின் துணுக்குச் செய்தியாக வந்திருந்ததை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் காரணுங்களுக்கு நம் நாட்டிலா பஞ்சம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. போராடி வாழ முயன்ற அஞ்சலி குப்தா, பெண் என்ற காரணத்தினாலேயே தனது போராட்டத்தையும் தொடர முடியாமல், வாழவும் முடியாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அந்தப் பெண்ணின் கதையை படியுங்கள்.
டெல்லியை சேர்ந்த அஞ்சலி குப்தா, மூன்று பெண்களில் இரண்டாவது பெண்ணாகப் பிறந்தவர். புத்திசாலியான பெண்ணும்கூட. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றிருந்தார். தனது தாயைப் போல ஆசிரியராக அவர் விரும்பவில்லை. ஆசிரியை பணி என்பது பெண்களுக்கான பணியாக இருப்பதாகவும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியது என்று சொல்லப்படும் துறையொன்றில் பணியாற்றவே, தான் விரும்புவதாகவும் அடிக்கடி தனது தாயிடம் சொல்லுவாராம். விமானப்படை பாதுகாப்புப் பிரிவு அவரது எண்ணத்துக்கு உகந்ததாக இருந்தது.

அலங்காரப் பதுமையாக பிரபலமடைவதற்கு சமூகம் வைத்திருக்கும் அடிமைத்தன ஆளுமைகளை வளர்த்துக் கொண்டு, அதன்படி நடப்பவர்களே, வாழ்பவர்களே, முன்னுதாரணமானப் பெண்கள் என்று ஊடகங்கள் போற்றுவதை பார்த்திருக்கிறோம். இந்த இலக்கணப்படி தென்படும் பல பெண்கள், ஆளுமைகளாக இருப்பதையும் கவனித்திருக்கிறோம். ஆனால், அஞ்சலி அதற்கு எதிராக, சமூகம் தடை விதித்திருக்கும் துறையில் பெண்கள் நுழைய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இத்தகைய பெண்களை பொதுவாழ்வில் காண்பது அரிது. அப்படி அரிதாக வருபவர்களும் தமது இருப்பை சுலமாக கொண்டிருப்பதில்லை என்பதையே அஞ்சலியின் கதை உணர்த்துகிறது.
டேராடூனில் பயிற்சி முடித்ததும் அஞ்சலி குப்தா விமானப்படை பிரிவின் பெண் அதிகாரியாக 2001ல் பெங்களூருவில் சேர்ந்தார். அங்கு அவர் ஒருவர் மட்டுமே பெண் அதிகாரி. எனவே மூன்று ஆண் அதிகாரிகள் அஞ்சலியை மனதளவிலும், உடலளவிலும் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்திருக்கின்றனர். இதை யாரிடம் புகாராக சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை. விமானப்படை பிரிவின் விதிகளின்படி புகார்கள் அவரது கமாண்டிங் அதிகாரி வழியேதான் வெளிவர வேண்டும். ஆனால், அந்த கமாண்டிங் அதிகாரி மீதுதான் அஞ்சலியின் புகார் இருந்தது.
பொதுவாக இந்திய விமானப்படை, ஆண்கள் நிறைந்த ஒரு துறை. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தால் அதனை முறையாக விசாரணை செய்திருக்க வேண்டும்.  ஆனால், உயரதிகாரிகளை காப்பாற்றும் பொருட்டு அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க பல்வேறு முறைகேடுகள் செய்திருக்கிறது இந்திய விமானப்படை. ஒரு குற்றமும் இழைக்காத பெண், பாலியல் புகார் கொடுத்த ஒரே குற்றத்திற்காக மட்டுமே தண்டிக்கப்படுவது கேடுகெட்ட செயல்.
உயரதிகாரிகளின் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட அஞ்சலி குப்தா, 2005ல் ஒரு குற்றசாட்டை தாக்கல் செய்தார். விமானப்படைக்கென்றே தனியாக உள்ள இராணுவ நீதிமன்றம்தான் அங்குள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். பெரும்பாலும், இந்த இராணுவ நீதிமன்றங்களைத் தாண்டி சிவில் நீதிமன்றங்களுக்கு எந்த வழக்கும்  செல்வதில்லை. அஞ்சலி குப்தாவின் குற்றசாட்டு மனுவும் அவ்வாறே விசாரிக்கப்பட்டது.
நீதிபதி பண்டோபாத்யாயாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று விசாரணை நடத்தியது. ஆர்.எஸ்.சௌத்ரி, சிரியக் மற்றும் சோப்ரா என்ற மூன்று அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார் அஞ்சலி குப்தா. ஆனால், அவரால் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அவர் புகார் அளித்திருந்த மூன்று அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதோடு மட்டும் விடவில்லை. அஞ்சலி குப்தாவின் குற்றச்சாட்டுகளை எல்லாம் நிராகரித்ததோடு அவரை டிஸ்மிஸ் செய்து தண்டிக்கவும் செய்தது இந்திய விமானப்படை. அதாவது, அஞ்சலி குப்தா உயரதிகாரிகளிடம் பணிவாக நடக்கவில்லை, பொய்யான பயண ரசீதுகளை கொடுத்தார், சீனியர் அதிகாரியின் உணவுப் பொட்டலத்தை வீசி எறிந்தார் என்பதுதான் அவர் மீது இந்திய விமானப்படை வைத்த பொய்க் குற்றச்சாட்டுகள். இந்திய விமானப்படையால் அதிகபட்சமாக அவர் மீது சுமத்தக் கூடிய குற்றச்சாட்டுகளின் தரம் இதுதான். இவ்வளவு மலிவாகவே ஒரு பெண்ணை பழிவாங்க முடியும் என்பதை கவனியுங்கள்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளின் லட்சணம் இப்படியிருக்க, உண்மை நிலவரமோ வேறாக இருந்தது. அதாவது, உயரதிகாரிகளோடு ஒத்துழைப்பு கொடுத்து நடந்துக் கொள்ளாத போதெல்லாம் அவர் தொல்லைகளுக்கு ஆளானார். இரவு நேர பார்ட்டிகளில் சேர்ந்துக் கொள்ளாதபோது, பணி நியமனம் போன்றவற்றில் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது ஒத்துப் போகாதது போன்றவை சில காரணங்கள். அதைக் குறித்து அவர் புகார் தெரிவித்தபோதோ ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு மாற்றப்பட்டுக் கொண்டேயிருந்தார். அதாவது ஒரே வருடத்தில் ஆறு தடவைகள் கூட மாற்றல்களை சந்தித்திக்கிறார்.
அஞ்சலி குப்தா வெறுமனே பாலியல் வன்முறைகளை மட்டும் எதிர்த்தால் கூட அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அவர் தனது துறையில் நடக்கும் அதிகார முறைகேடுகளையும் எதிர்த்துக் கேட்டிருக்கிறார். ஒரு பெண் இப்படி உண்மையாக நடந்து கொள்வது விமானப்படை அதிகார வர்க்கத்திற்கு பிடிக்கவில்லை.
இந்தநிலையில்தான், அஞ்சலி குப்தாவை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது இராணுவ மற்றும் விமானப்படைகளுக்கான நீதிமன்றம். ஆனால், அஞ்சலியின் புகார் குறித்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டது. அதோடு, பல பெண்ணுரிமை அமைப்புகளின் தனிப்பட்ட விசாரணைக்கும் இந்திய விமானப்படை அனுமதி மறுத்தது.
உலகின் மிகப்பெரிய விமானப்படைகளுள் ஒன்றாக விளங்கும் இந்திய விமானப் படைபிரிவில், 800க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களுள் அஞ்சலியின் புகார் மட்டும்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இராணுவக் கோர்ட்டால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முதல் பெண் விமானப்படை அதிகாரி அஞ்சலிதான் என்று ஊடகங்கள் எழுதின. வேறு சில பெண் அதிகாரிகளும் புகார்கள் கொடுத்திருக்கலாம். ஆனால், அதன் விபரங்கள் வெளிச்சதுக்கு வரவில்லை. இப்படி வரவில்லை என்பதாலேயே வேறு யாரும் புகார் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அஞ்சலி குப்தாவிடம் விமானப்படைப் பிரிவு நடந்ததுக் கொண்ட விதம் அதைத்தான் உணர்த்துகிறது.
2005ல் இந்தத் தீர்ப்பு வந்தபோது அஞ்சலிக்கு 29 வயது. அப்போது அவர் விமானப்படையின் பயிற்சிப்பிரிவு நிர்வாகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தப் பணிநீக்கத்தை அஞ்சலி குப்தா ஏற்க மறுத்தார். அப்போதும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. விமானப் பிரிவுக்கான இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென்று தீர்ப்புகொடுக்கும் பட்சத்தில் சிவில் நீதிமன்றதுக்கு செல்லப்போவதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். ஆனால், காவல்துறையோ, இந்தப் பிரச்சினை விமானப்பிரிவின் உள்ளார்ந்தது என்றும் சீனியர்களுடனே பேசித்தீர்த்துக் கொள்ளும்படியும் கூறி கை கழுவிவிட்டது.
காவல்துறை மனுவை கண்டுக்கொள்ளாமல் விடவே, அஞ்சலி குப்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரினார். அதோடு கர்நாடகாவின் பெண்கள் அமைப்பையும் அணுகினார். அஞ்சலி குப்தா புகார் கொடுத்திருந்த அதிகாரிகளுக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மூலமாக சம்மன்கள் பறந்தன. அஞ்சலி கொடுத்த புகார் மனுவினால்தான் இராணுவ கோர்ட் அவரை பணிநீக்கியதென்று குப்தாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
தனது மானம் காற்றில் பறப்பதை தடுக்க விரும்பிய இந்திய விமானப்படை பிரிவு, தனியான ஸ்பெஷல் கோர்ட் மூலம் விசாரிப்பதாக கூறியது. அதில் இரண்டு பெண் அதிகாரிகளும் இருப்பார்களென்றும் சொன்னது. மேலும், அஞ்சலி குப்தா தற்கொலை செய்துக்கொள்வேன் என்று சொன்னதாக காரணம் காட்டி அவரை வீட்டுச்சிறையிலும் அடைத்தது. அவருக்கு மனரீதியாக பாதிப்புகள் இருக்கலாமென்று பொய்யாக ஒரு கதையை எழுதி, பெங்களூரு நிம்ஹான்ஸில் அவருக்கு பரிசோதனையும் நடத்தியது.
அநீதிக்கெதிராகவும், ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் பெண்களை மனநலம் குன்றியவர்கள் என்று ஒதுக்கும் சமூகத்தின் தாக்குதலை அஞ்சலியும் சந்தித்தார்.
அதன்பின் அவர் மீது 15 சார்ஜ் ஷீட்டுகள் பதியப்பட்டு அவை பின்பு ஏழாக குறைக்கப்பட்டன. இறுதியில், ஒழுக்கமின்மை, பணத்தை சரியாக கையாளாதது, வேலையில் ஒழுங்கின்மை, தவறான ரசீதைக்காட்டி ரூபாய் 1080 பயணப்படியாகப் பெற்றது போன்ற பொய்யான காரணங்களை பட்டியலிட்டு அவரை பணியிலிருந்து நீக்கியது ஸ்பெஷல் கோர்ட்.
அஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!இதன்படி பார்த்தால், இந்திய விமானப்படையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியே கூறவே முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படிச் சொன்னால் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் முதலில் நிராகரிக்கப்படும். பின்பு, புகார் மனு அளித்தவரின் பாதுகாப்புக்காக என்று கூறி அவரை வீட்டுச் சிறையில் அடைப்பார்கள். பிறகு, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் பொய்யான தகவல்களையும் சேர்த்து குற்றம்சாட்டியவரையே பணியிலிருந்து நீக்கம் செய்துவிடுவார்கள். இறுதியில், அதிகார வர்க்கத்தின் திமிரோடும் ஆணாதிக்கக் கொழுப்போடும் விமானப்படையை விட்டு துரத்திவிட்டு குற்றத்தின் நிழல் கூட படாமல் இந்திய தேசக்கொடியை பெருமையுடன் பட்டொளி வீசி பறக்க விடுவார்கள்.
போராடும் பெண்களின் ஒழுக்கத்தை சிதைப்பது நமது சமூகத்தில் இயல்பாகவே நடக்கும் ஒன்றுதான். ஐஎம்எஃப் தலைமை நிர்வாகி ஸ்ட்ரௌஸ் கான் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் மீது சந்தேகங்களை எழுப்பி அந்த சந்தேகங்களின் அடிப்படையில் அப்பெண்ணின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக்கி அவனை தப்பவிட்டது அமெரிக்க நீதிமன்றம். இங்கு அஞ்சலி மீது குற்றத்தை திருப்பி குற்றவாளிகளை பாதுகாக்கிறது இந்திய இராணுவ நீதிமன்றம்.
முறை தவறி நடந்துக்கொள்வது மட்டுமே பாலியல் முறைகேடு என்று ஆகாது. பெரும்பாலான சமயங்களில் ஆணாதிக்கம் நுட்பமாகவே வெளிப்படுகிறது. மனதளவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் முறைகேடுதான். சாதாரணமாகவே வெளியில் வரும் பெண்கள் இதனை அன்றாடம் அனுபவிக்கிறார்கள். பேருந்தில், மார்க்கெட்டில், பணியிடங்களில், சாலைகளில் என்று எல்லா இடங்களிலுமே இது வியாபித்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பொதுமக்களின் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. பெரும்பாலான சமயங்களில் அதன் பரிமாணம் வெளியில் தெரியாதபோது பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே உள்ளுக்குள் வைத்து குமையும்படியாக இருக்கிறது.
முக்கியமாக பெண்கள் தமது உரிமைக்காக உரத்து குரல்கொடுப்பதை, தைரியமாக எதிர்த்து நிற்பதை பெரும்பாலான ஆண்கள் சகித்துக் கொள்வதில்லை. அவர்களை விரட்டிவிடவே முனைகின்றனர்.
பொய்யான ரசீது கொடுத்து பயணப்படி பெறுவது என்றால் இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளாஇயும்  அல்லவா பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்? அஞ்சலி பொய்யாக பயண ரசீது கொடுத்தார், அதன் மதிப்பு 1080 ரூபாய்தான் என்பதும் இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட மலிவான குற்றசாட்டு என்பதை நிரூபிக்கிறது. அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும் தேசபக்தி பொங்கியா வழிகிறது? போலிச் சான்றிதழ் கொடுத்து ஆதர்ஷ் வீட்டு மனையில் இடம் பெற்றவர்கள் யார்? அரசியல்வாதிகளோடு சேர்ந்து இராணுவ உயரதிகாரிகளும்தானே! இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை நிகழ்த்துவதும் இதே இராணுவ அதிகாரிகள்தானே!
அஞ்சலியின் வழக்கில் அவர் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டதே தவிர அவர் கொடுத்த குற்றச்சாட்டுகள் எதுவும் தீர விசாரிக்கப்படவே இல்லை. அஞ்சலி பெண் என்பதாலேயேதான் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. புகார் கொடுத்த அவர் மீதே வழக்கு திருப்பப்பட்டு அவரையே குற்றவாளியாக்கியது இந்த அதிகார அமைப்பு.
இந்திரா நூயி, பிரதிபா பாட்டீல் என்று பெண்கள் சாதிக்க ஏதோ தடையேயில்லாதது போல உருவம் கொடுக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் இருண்ட முகம் இதுதான்.
பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த ஒடுக்குமுறைகளை நம்முன் நிறுத்தப்படும் ‘சாதித்துக்காட்டிய பெண்கள்’ எதிர்க்கொள்வதில்லையா? அவர்களும் நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை தமது சாமர்த்தியமாகவும் சாதனையாகவும் கருதிக்கொண்டு பேட்டிகள் கொடுக்கிறார்கள். சாதிக்க விரும்பும் பெண் சமூகத்துக்கு அறிவுரையும் கொடுக்கிறார்கள். அவர்களில் எவரும் இதனை அம்பலப்படுத்தவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ தயாரில்லை. அதனால்தான் முன்னுதாரணமான பெண்களாகப் போற்றப்படுகிறார்கள்.
ஏனெனில் இதனை அம்பலப்படுத்த அஞ்சலியைப் போன்ற மனஉறுதியும் ,தைரியமும் தேவைப்படுகிறது. அதற்கு அஞ்சலிகள் தங்களை பலிகொடுக்கவும் வேண்டியிருக்கிறது.  விடாமல் போராடிய அஞ்சலியின் தைரியமும், எதிர்த்து நிற்கும் உறுதியும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால், விமானப்படை பிரிவில் அஞ்சலியின் வழக்கு மட்டும்தான் இதுவரை வெளிவந்திருக்கிறது என்றால் இன்னும் எத்தனைப் பெண்கள் வெளியில் சொல்லக்கூட திராணியற்று உயரதிகாரிகளுக்கு பணிந்து நடக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி குமுறிக் கொண்டிருக்கிறார்களோ? பொதுவெளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறையை உரத்துச் சொல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அவர்களையே குற்றவாளிகளாக்குவது என்ன நியாயம்?
———-
பணிநீக்கம் செய்யப்பட்டபின் அஞ்சலிகுப்தா பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று போபாலில் அவரது குரூப் கேப்டன் அமித் குப்தாவின் வீட்டுக்கு சென்றார். தங்கினார். தங்கள் மகனது திருமண வேலைகள் தொடர்பாக அமீத் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் வெளியே சென்ற சமயத்தில் அஞ்சலி குப்தா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.
விசாரணையில், 51 வயதான அமீத் குப்தா, அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்வதாக நீண்ட நாட்கள் கூறிவந்ததும், இருவரும் ‘லிவிங் டு கெதர்’ அடிப்படையில் ஒன்றாக வாழ்க்கை நடத்தியதும் தெரிய வந்தது. தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்வதாகவும் அமீத் குப்தா வாக்களித்திருக்கிறார். அதை நம்பிய அஞ்சலி, ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தை மிகைப்படுத்தி இதனால் மட்டுமே அஞ்சலி தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களும், விமானப்படையும் கூறி வருகின்றன. இது அஞ்சலி உடைந்து போவதற்கு ஒரு முகாந்திரமாக மட்டுமே என்பதை மறைக்கின்றன. விமானப்படையில் இருந்து அநீதியாக நீக்கப்பட்டதும், அதற்கெதிரான போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததுமே அஞ்சலியின் தற்கொலைக்கு அடிப்படையான காரணம் என்பதை குழி தோண்டிப் புதைக்கின்றன. போராட்டக் குணம் கொண்ட பெண்கள் கூட தனிப்பட்ட வாழ்வில் எதிர்பார்க்கும் அன்பும், காதலும் கிடைக்காதபோது உடைந்து போகத்தான் செய்கிறார்கள் என்பதை உணர மறுக்கின்றன.
காலம் காலமாக இப்படித்தான் பெண்கள் வீழ்த்தப்படுகிறார்கள். இதற்காகவே பல கதைகளை புனைந்திருக்கிறார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் நடனத்தில் போட்டி வந்ததாகச் சொல்லப்படும் கட்டுக் கதையையே எடுத்துக் கொள்வோம். போட்டியில் பார்வதி வெற்றி பெற்று விடுவாள் என்ற நிலையில், ஒரு பெண்ணிடம் தோற்பதா என்று நினைத்த சிவன், தனது இடதுகாலை சற்றே தூக்கினான். அதற்கும் ஈடு கொடுத்து ஆடினாள் பார்வதி. உடனே தன் வலது காலை ஊன்றியபடி, தன் ஆணுறுப்பு வெளியே தெரியும் வகையில் இடது காலை உயரே தூக்கிக் கொண்டே போனான் சிவன். பார்வதி சட்டென்று ஆடுவதை நிறுத்தி விட்டாள். தன் இடது காலை இந்தளவுக்கு உயர்த்த அவள் விரும்பவில்லை. எந்தப் பெண்ணால் இப்படிச் செய்ய முடியும் பார்வதி தோற்றுப் போக, சிவன் வெற்றி பெற்று நடனத்துக்கு ராஜாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். இதுதான் ஆணாதிக்கத்தை ஏற்றிப் போற்றும் சிதம்பர ரகசியம்.
பார்வதி ஏமாற்றப்பட்டது புராணக்கதை, பழங்காலக்கதை. ‘நிலமை இன்று தலைகீழ். திறமையிருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் இல்லாத துறைகள் என்று ஏதாவது இருக்கின்றனவா…’ என்றுதானே நமக்குத் தோன்றுகிறது? சாதிக்க இன்று பெண்களுக்கு தடைகளுமில்லை, எந்த நிபந்தனைகளுமில்லை என்றுதான் விளம்பரங்கள் முதல் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப உரத்துச் சொல்கின்றன.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில், பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் ஆணுக்கிணையாக உயரத்தைத் தொட்ட பெண்களின் படங்களை விதவிதமான போஸ்களில் போடுவார்கள்.  கட்டுரைகள் எழுதுவார்கள். விமானப்படை அதிகாரியாக, கப்பல்படை அதிகாரியாக, தொழில் முனைவோராக, வைஸ் பிரசிடெண்டுகளாக, தலைமை செயலர்களாக, வங்கிகளில், நாடாளுமன்றத்தில் என்று வகைக்கொன்றாக அந்தப் படங்கள் இருக்கும். நாமும் அவற்றை வியந்து பார்த்துக்கொண்டிருப்போம். அவை சொல்ல வருவதெல்லாம் என்ன?
இன்றைய தேதியில் பெண்கள் நுழைய முடியாத துறை என்று ஏதாவதொன்று இருக்கிறதா என்ன? பெண்கள் எல்லாத்துறைகளில்முன்னேறி சாதனை புரிந்துவிட்டார்கள். இனி அவர்களை சமையற்கட்டுக்குள் அடைத்துப் பூட்டி வைக்க முடியுமா? பெண்கள் சாதிக்க இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது, இனி அவர்கள் சாதிக்க வேண்டியதுதான் பாக்கி…’
இதுதான் உண்மையா?
பெண்கள் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் முன்பைவிட அதிகமாக இருக்கிறார்கள், இன்றைய நவநாகரிக சமூகத்தில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் நுழைந்துவிட்டார்கள். ஆணுக்கு சரிசமமாக போட்டியிடுகிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.
அதனினும் உண்மை, நாம் வியப்புடன் பார்ப்பதற்காகவே நம் கண்முன் நிறுத்தப்படும் அந்த பொம்மை பிம்பங்களின் பெருமைக்குப் பின்னே இருப்பது அப்பட்டமான ஆணாதிக்க – அதிகார வர்க்கத்தின் கோர முகம் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இந்த உண்மை முகம் அந்தப் பிம்பங்கள் ஏற்படுத்தும் கண்கூசும் பிரகாசத்தில் மறைந்து ஒளிந்துக் கொள்கிறது.
ஆம். எதிர்த்து போராடும் பெண்கள் பற்றி வெளியில் அவ்வளவாக தெரிவதில்லை. அவர்கள் மௌனமாக பழிவாங்கப்படுகிறார்கள். விரட்டிவிடப்படுகிறார்கள். பெண்கள் அதாகிவிட்டார்கள், இதாகிவிட்டார்கள் என்று சொல்லப்படும் பெருமைக்குப் பின்னால் இருக்கும் இன்றைய உண்மைநிலை இதுதான். அஞ்சலி குப்தா – ஆணாதிக்க வக்கிரத்தை, அதிகார வர்க்கத் திமிரை, அதன் இழிநிலையை சகித்துக்கொள்ளாமல் போராடியவர். முடிவில், வாழத்தகுதியில்லாத இச்சமூகத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டவர்.
அந்த வகையில் அஞ்சலி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அவராக வாழ விடுவதற்கு இந்த சமூகம் விரும்பவில்லை. இந்திய விமானப்படை எதிரிகளை குண்டு போட்டு அழிக்கிறதோ இல்லையோ, தனது படையில் இருக்கும் போராட்ட குணம் கொண்ட பெண்ணை எந்த குண்டையும் வீசாமலேயே துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறது.
அஞ்சலி குப்தா மறைந்து விட்டார். ஆனால், இடைவிடாது இறுதி வரை போராடிய அவரது போராட்டத் தருணங்கள் நம்மை கேலி செய்கின்றன. வெட்கப்படுவோர், வேதனைப்படுவோர் அத்தகைய போராட்டங்களை சாகவிடமால் காப்பதற்கு முனையட்டும்.
www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக