ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!

தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், முதல்வர் சக்தி, மக்கள் தொடர்பு அலுவலர் குஞ்சிதபாதம், துணை முதல்வர் தொல்காப்பியன் ஆகியோர் ஒரே குரலில், “நிர்வாகம் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் மாற்ற முடியாது, ஸ்மார்ட் கிளாஸ்க்கு  ரூ.10000 த்தில் பாதி கொடுத்தால் அரையாண்டு தேர்வு தாள் மதிப்பெண் பட்டியல் தருவோம், அரசு கட்டணம் செலுத்துவேன் என்பவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்” என ஜெயலலிதா சொந்தகாரர் போல் பேசினார்கள். பள்ளி தாளாளரின் உறவினர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஆனால் 24-2-12 செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பாக பெற்றோர்களை அணிதிரட்டி  முற்றுகை  போராட்டம் நடத்தி தேர்வு விடைத்தாளை வாங்கி கொடுத்து சாதித்துள்ளது, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம். பத்திரிக்கை நிருபர்கள் வேடிக்கை பார்க்க கூட வரவில்லை. அந்த அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் இந்த பள்ளி முதலாளி. மீறி எழுதும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. மேலும் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தன் கடலார் மாவட்ட தனியார் மெட்ரிக்  பள்ளி முதலாளிகளின் சங்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி நிர்வாகம் ஏற்கனவே கூடுதல் கட்டணத்திற்காக கட்டாய டி.சி. அனுப்புவது மதிப்பெண் பட்டியல் தரமறுப்பு என்ற அடாவடிக்கு  எதிராக  நாம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்தை பம்பரமாக சுழல வைத்தோம். அரசு நிர்ணயித்த  கட்டணத்தை மட்டுமே கட்டுவோம், ஸ்மார்ட் கிளாசுக்கு எவ்வளவு என சி.இ.ஓ.விசாரித்து சொன்ன பிறகு தான் கட்டுவோம் என சிதம்பரம் ஆர்.டி.ஓ.முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் எழுத்துப் பூர்வமாக முடிவு செய்யபட்டது. உரிய கட்டணத்தை டி.டி.எடுத்து பதிவுத் தபாலில் நமது சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனுப்பினர். பள்ளி நிர்வாகம் மூன்று மடங்கு (6000 ம் என்றால் 18000 ரூ கேட்கிறார்கள்) கேட்பதை நாம் மறுத்து விட்டோம்.
மேலும் கடந்த ஆண்டு இதே போல் பல மடங்கு வசூலித்ததை திரும்ப பெறவும், இந்த ஆண்டு கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்துவதை தடுக்கவும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி சிங்கார வேல் கமிட்டி முன்பாக நமது சங்கம்  ரசீது ஆதாரங்களுடன் புகார் ஆனுப்பியுள்ளது. 2-2-12  அன்று விசாரணைக்கு வர உள்ளது.
கூடுதல் பணம் கட்டாத மாணவர்களை தனியே தரையில் அமரவைப்பது, தேர்வு வினாத்தாள் தர மறுப்பது, மதிப்பெண் பட்டியல் தரமறுப்பது என மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளச்சலுக்கு ஆளாக்குவதும் துன்புறுத்துவதும் பற்றி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பினோம். மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் விசாரணைக்கு வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சினார், கதறினார். ஆனால் தாளாளர் தர முடியாது என்று மறுத்து விட்டார்.
நமது பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரான மேடம் என்ன சொன்னார் என கேட்டனர். பள்ளித் தாளாளர் எதையும் ஏற்க மறுக்கிறார், நான் இயக்குநரிடம் சொல்கிறேன்  என அமைதியாக சென்றார். மேடம் ஏற்கனவே இருந்த பள்ளி ஆய்வாளரை உள்ள விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என காவல் துறையில்  தாளாளர் மீது புகார் கொடுத்து விட்டு போய்விட்டார். அதனால் தான் அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளர் – முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடு என்று போஸ்டர் ஒட்டினோம்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு
சிதம்பரம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், பொருளாளர் நடராசன், மாவட்ட தலைவர் அய்யா வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் புஷ்ப தேவன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பாக 24-2-12 அன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. அனைத்து பள்ளிகள் முன்பாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வெளிகேட்டில் பெரும்பகுதி பெற்றோர்களும் உள்புறம் சில நிர்வாகிகளும் முழக்க அட்டையை பிடித்து கோசம் போட்டனர். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சிக்கும் தெரிவித்தோம் யாரும் வரவில்லை.
தினமணி நிருபர் நமது வேண்டுகோளை ஏற்று  ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் எனும் தலைப்பில் செய்தியினை மாற்றி நமது படத்துடன் செய்தி வெளியிட்டார்.
காவல்துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தாசில்தார் என அனைவரும்  பெற்றோர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் பணிய மறுத்தது. நாமும் வினாத்தாள் வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தோம். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், தாளாளரிடம் போனில் பேசி அதிகாரிக்கு பதில் சொன்னார்கள். இறுதிவரை தாளாளர் வர வில்லை. மதியத்திற்கு மேல் ஏதோ சாவு என காரணம் சொல்லி முதல்வரும் ஒளிந்துகொண்டார். பல வழிகளில் பெற்றோர்களை பேசி சமாதான படுத்த முயன்றனர் அதிகாரிகள். ஆனால் பெண்கள் உட்பட அனைவரும் வினாத்தாள் வாங்காமல் போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தனர்.
போலீசார் எங்களுக்கு ஒன்றும் இல்லை 4 பேரை உட்கார வைத்து போய்விடுவோம் என அலட்சியமாக பேசினர். சாமியானா போடப்பட்டது. மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. பெற்றோர்கள் அனைவரும் பள்ளி அமைந்திருக்கும் வேங்கான் தெருவை வால்ஸ்ட்ரிட் போராட்டமாக மாற்றுவோம் என முழக்கமிட்டனர். இரவு உணவு தயார் செய்ய அடுப்பு பாத்திரம் விறகு வந்திறங்கியது. அதிகாரிகள் ஓடத்தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆர்.டி ஓ.விடம் பேசினார். தாளாளருக்கும் முதல்வருக்கும் உடனே வரச்சொல்லி விசாரணைக்கு சம்மன் அனுப்ப பட்டது. துணை முதல்வரை தவிர வேறு யாரும் பள்ளியில் இல்லை.
இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை துண்டி போட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களிடம் வசூலித்துதான் அவர்களுக்கு சம்பளம் தரமுடியும் என நியாயம் பேச வைக்கப்பட்டனர். அதனால் குழந்தைகள் அனைவரும் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை, குடிநீர் இல்லை என்று திடலில் வெயிலில் அமர வைக்கப்பட்டனர். இதனால் போராடும் பெற்றோர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடியது. அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தேநீர் பிஸ்கட் வழங்கியது. போராட்டத் திடலிலேயே நாம் தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம். இரவு உணவுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டது.
போராட்டத்தின் ஒற்றுமையை கண்டு திகைத்து அதிகாரிகள் தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். மாலை ஆர்.டி.ஓ. நேரில் வந்து 2 நாள் அவகாசம் கொடுங்கள் என கேட்டார்.வினாத்தாள் வாங்காமல் செல்லமாட்டோம் என ஒரே குரலில் அறிவித்தனர். பள்ளி தாளாளர் யார் உத்திரவையும் மதிக்க மாட்டார்.நாங்கள் செய்வது தவறு என்றால் எங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள்.இல்லையென்றால் மாணவர்க துன்புறுத்தும் பள்ளி தாளாளரையும்  முதல்வரையும் கைது செய்யுங்கள், என நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தாசில்தார், டி.எஸ்பி. அனைவரும் கடுங்கோபத்துடன்  பள்ளி உள்ளே சென்று துணை முதல்வரை வெளியே அழைத்து வந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் போராடும் பெற்றோர்களிடம் நாளை மாலைக்குள் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது மணி இரவு 7 ஆகிவிட்டது. என கூறினர். அதற்கும் பெற்றோர்கள் தாளாளர் லட்சுமிகாந்தனை நம்ப முடியாது. நாளை வரை போராடி இருந்து வாங்கியே செல்கிறோம் என கூறினர். அதிகாரிகள் நீங்கள் நம்பலாம் ஆனால் நாங்கள் நம்பத்தயாராக இல்லை என போராட்டம் நீடித்தது.
ஆர்.டி.ஓ. நான் உத்திரவாதம் தருகிறேன். நாளை விடைத்தாள் தராவிட்டால் போராட்டத்தை தொடருங்கள் என மன்றாடினார். பிறகு அனைவரும் பேசி குறிப்பிட்டபடி நடக்க வில்லையென்றால் குடியரசு தினத்தன்று பள்ளி முன்பாக கருப்பு கொடி ஏற்றி போராடுவோம் என முடிவு செய்யப்பட்டு கலைந்து சென்றோம். மறுநாள் விடைத்தாள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சென்றனர். தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களாக மதிக்காமல் இருப்பதும் அவர்கள் மீது சிறு நடவடிக்கை எடுக்க கூட அரசு விரும்புவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 4 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன் கொடுமைக்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் சி.பி.சி.ஐ.டி.யும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என குறிப்பிட்டு மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ஐ.க்கு மாற்றி உத்திரவிட்டுள்ளார். இது மற்றுமொரு சான்றாகும். தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக