திங்கள், 23 ஜனவரி, 2012

கேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா திட்டம்?

ஊட்டி: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் முரண்டு பிடிக்கும், கேரள அரசுக்கு "செக்' வைக்க, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கு, தமிழக அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாண்டியாறு புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் முழு வடிவம் பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மரப்பாலம் பகுதி வரை, இதற்கான பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் ஓடும், 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, பாண்டியாறு புன்னம்புழா நீரை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்த அணைகள் கட்ட திட்டமிடப்பட்டன. மரப்பாலம் பகுதியில், 42 மீ., உயரத்திலும், பாண்டியாறு பகுதியில், 62 மீ., உயரத்திலும், சோலாட்டி புழா பகுதியில், 65 மீ., உயரத்திலும், மூன்று அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்படும் போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர், நீர்மின் திட்ட பணிகளுக்காக, மாயாருக்கு திருப்பி விடவும் திட்டமிடப்பட்டது. மின் உற்பத்தி பணிகளை, மசினகுடி அருகேயுள்ள சீகூர் மேற்கொள்ளவும், மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை, கீழ் பவானி திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும், 14 டி.எம்.சி., தண்ணீரை, தமிழக, கேரள மாநிலங்கள் சரி சமமாக பங்கிடுவது என்றும், இதன் மூலம், 260 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், அப்போது கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு, 1,600 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அப்போது மதிப்பிடப்பட்டது.

கேரள அரசின் எதிர்ப்பும், அச்சமும்: கேரள அரசு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு காரணம், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் என்றும், அச்சம் தெரிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பந்தலூர், இளம்பிராலி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள், கேரள எல்லையில் இணைந்து சாலியார், கரியம்புழா, பேப்பூர்புழா என, மூன்று நதிகளாக பிரிந்து, அரபிக் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அரபிக் கடலில் வீணாகும் தண்ணீரைத் தேக்கி வைத்து, நீர்மின் திட்டத்திற்கும், நீர்ப்பாசன தேவைகளுக்கும் பயன்படுத்தவே, தமிழகம் தரப்பில் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணமாக இருந்தது.

கிடப்பில் போடப்பட்டது ஏன்? பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஆய்வாளர்களை கொண்டு முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அரசுக்கு சமர்ப்பித்த தகவல்களின் படி, "நீலகிரியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் 5000 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் முழ்கும். இதில், 2500 ஏக்கர் வனப்பகுதியாகவும் இருக்கும். ஆதிவாசிகளின் குடியிருப்புகளும் பாதிக்கப்படும். தவிர, முதுமலை காப்பகத்தில் 27 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் போது வனவிலங்குகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளது' என ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டதை தொடர்ந்து, பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.

முல்லைப் பெரியாறு பிரச்னை: அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வரும் நிலையில், பாண்டியாறு- புன்னம் புழா திட்டம் உள்ளிட்ட பிற முக்கிய அணை திட்டங்களையும் மாநில அரசு நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும், கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளை போல, அணை விஷயத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணைக்கும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எனினும், தற்போது எழுந்துள்ள அணைப் பிரச்னையால், மக்கள் மத்தியில் பாண்டியாறு அணை பற்றி பேசப்படுகிறது. அதேவேளையில், அரசின் சார்பில் இது குறித்து ஆய்வுகள் நடத்த எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை' என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக