செவ்வாய், 10 ஜனவரி, 2012

ஒரு தேசிய அவமானம்!!

Hunger
டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,
நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந்தைகள் உள்ளனர். நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் எடை குறைவாக உள்ளன.

நமது நாட்டின் எதிர்காலம் இவர்கள் தான். இவர்களது நலனைப் பேணாவிட்டால் நாட்டின் எதிர்கால நலன் நிச்சயம் பாதிக்கப்படும்.

நான் முன்பே கூறியது போல, ஊட்டச் சத்து குறைபாடு என்பது தேசிய அவமானமாகும். இதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெறவில்லை.

73,000 தாய்மார்களிடம் நேரடியாகப் பேசி 1 லட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வருத்தத்தையும் தருகிறது, ஒரு நல்ல விஷயத்தையும் சொல்கிறது.

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த 112 மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது என்பது தான். இதற்கு இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிய சில நலத்திட்டங்களும் காரணம்.

அதாவது ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதில் நாம் 20 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், நாட்டின் இன்னும் 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக, ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன என்பது தான்.

தாயின் கல்வி நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, சுகாதாரம், தாய்ப்பால், குடும்பத்தில் பெண் நடத்தப்படும் முறை ஆகியவை, குழந்தைகளின் நலனில் முக்கிய பங்கு வகிப்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

1975ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போதும் அமல்படுத்தப்பட்டு வரும் Integrated Child Development Services திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த ஊட்டச் சத்து குறைபாடு விஷயத்தை தீர்த்துவிட முடியாது. குழந்தைகள் விஷயத்தில் மிக மோசமான நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தியாக வேண்டும்.

முதல்கட்டமாக ஊட்டச் சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ள நாட்டின் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் பிரதமர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக