வியாழன், 12 ஜனவரி, 2012

காங்.,கை கழற்றிவிட தி.மு.க., முடிவு? நேருவின் சூசக பேச்சால் பரபரப்பு

திருச்சி: ""மேற்கு வங்கத்தில் நடப்பது போல் தமிழகத்திலும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டும்,'' என்று முன்னாள் அமைச்சர் நேரு சூசகமாக பேசினார்.

திருச்சி மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் நேரு பங்கேற்று பேசியதாவது: தி.மு.க.,வினர்,தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும். மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும், மம்தா அதெல்லாம் முடியாது என்றுகூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல், இங்கும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு நேரு பேசினார்.

விஜயகாந்த் மீது தாக்கு: கூட்டத்தில் பேசிய நேரு, ""நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார். அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க., அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது. தே.மு. தி.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக்கொண்டுள்ளார்,'' என்று பேசினார்.

தி.மு.க., தோல்விக்கு காரணம்: கடந்த எம்.பி., தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும் தோற்று, திருச்சி எம்.பி., தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க., வும் ஆட்சிக்கு வந்திருக்காது. தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமை பெற்ற, 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம் நம்மைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம் தவறிவிட்டோம். ஆகையால், மாற்றத்தை எதிர்பார்த்த, அந்த இளம் வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக