வெள்ளி, 27 ஜனவரி, 2012

குறுகிய காலத்திலேயே கொழுத்து செழித்த வேலு'மணி'!


Velumani
சென்னை: அதிமுகவினர் மத்தியில் தங்கச் சுரங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. அதை விட அவரது பெயரிலேயே 'மணி' இருப்பதற்கேற்ப காசு பார்ப்பதில் படு கில்லாடியாம் இவர்.
இவரும் சசிகலா குரூப்பின் மிக முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர்தான். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவருக்கு மிக முக்கிய துறையான தொழில்துறை ஒதுக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர் அமைச்சரான உடனேயே பண வசூலில் இறங்கி விட்டதாக பகீர் தகவலை வெளியிடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். பரம்பரை ஊழல்வாதி கூட இப்படி பணம் கறக்க மாட்டார், ஆனால் அதை விட படு பயங்கரமாக இருந்ததாம் வேலுமணியின் கரன்சி வேட்டை.எல்லா வழியிலும் இவர் பணம் கறந்து வந்தாராம். தொழில்துறையைப் பொறுத்தவரை எதைத் தொட்டாலும் பணம்தானாம். குறிப்பாக கிரானைட் குவாரி உரிமையாளர்களிடமிருந்து பெருமளவில் பணத்தை வாரி வாங்கியுள்ளார் வேலுமணி என்கிறார்கள்.

வாங்கும்போதே, இதெல்லாம் எனக்காக இல்லை, அம்மாவுக்காகத்தான் (இந்த அம்மா சசிகலா) என்று கூறி வாங்குவாராம் வேலுமணி.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வசூல் மழையில் வேலுமணி குதித்ததால் அவரது சொத்துக்களின் குவியலும் எகிறிப் போய் விட்டதாக கூறுகிறார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே பெருமளவில் பணம் சேர்த்த ஒரே அமைச்சர் இவராகத்தான் இருக்க முடியும் என்றும் அதிமுவினர் மலைக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 400 கோடி அளவுக்கு வேலுமணிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் இன்னொரு பரபரப்புத் தகவல் கூறுகிறது. மேலும் திமுகவினருடன் இவருக்கு மறைமுகமாக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு ஒரு பெரிய உதாரணமாக அவர்கள் கூறுவது ஆனந்த் என்பவரை. இவர் பழைய இரும்பு வியாபாரத்தில் மிகப் பெரிய ஆளாக இருப்பவர். இவர் வேறு யாருமல்ல, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுக்கு மிக மிக வேண்டப்பட்டவராம். ஆனந்துக்கும், வேலுமணிக்கும் இடையே கூட நல்ல தொடர்பு இருக்கிறதாம்.

சேர்த்த பணத்தையெல்லாம் சேஃபாக லாக் செய்ய முடிவு செய்த வேலுமணி நகைக் கடைகளைத் தொடங்கி நடத்தி வருகிறாராம். ஏவிஆர் ஸ்வர்ண மஹால் என்ற பெயரிலான இந்த நகைக் கடைகளை கோவை, திருப்பூர், சேலத்தில் பார்க்கலாம். இந்தக் கடைகள் 6 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டவை. அதாவது வேலுமணி அமைச்சரான உடனேயே கடைகள் திறந்து விட்டார் என்றால் அவரது வேகத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கடையின் பங்குதாரர்கள் வேலுமணி, அன்பு, ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது.

வேலுமணி மீது கார்டனுக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்று கொண்டிருந்தபோதும் தொடர்ந்து அவர் தப்பி வர சசிகலா குரூப்பின் செல்வாக்கே காரணம். ஆனால் தற்போது சசிகலாவே இல்லை என்றாகி விட்டதால் வேலுமணியும், தீவிர விசாரணைகள் மற்றும் கணக்கெடுப்புகளுக்குப் பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்டு விட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக