சனி, 14 ஜனவரி, 2012

புதிய காப்பீட்டுத்திட்டத்தை கலைஞர் வரவேற்கிறார்

  தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மூடிவிட்டு, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். நான் தொடங்கிய திட்டம் மூடப்பட்டு விட்டதில் எனக்கு வருத்தமில்லை. எந்தப் பெயரிலோ, எப்படியோ திட்டம் நடைபெற்று மக்கள் பயன்பெற்றால் போதுமென்று எண்ணுகிறேன்.
திமுக அரசால் தொடங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 642 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டதுக்கு மாறாக, இப்போது 1,016 வகையான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போகின்றனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருந்து பழைய அட்டைகளை வைத்திருப்பவர்களும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதைப்போல திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் உதவி என்று இருந்ததை மாற்றி குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு 4 லட்ச ரூபாய் உதவி என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதற்காக இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன்.

இந்த நேரத்தில் திமுக அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களையும் பகைமை நோக்கோடு பார்க்காமல் முதல்வர் ஜெயலலிதா சற்று பரந்த நோக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஏனென்றால் அந்தத் திட்டங்கள் எல்லாம் என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்தோ, திமுகவின் பணத்திலிருந்தோ நிறைவேற்றியது இல்லை. அரசின் பணத்தில் தான் நிறைவேற்றப்பட்டன.

திமுக ஆட்சி வந்த நேரத்தில் எல்லாம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களையும் வரவேற்று செம்மைப்படுத்தியிருக்கிறோம் என்பதற்கு பல சான்றுகளைக் கூற முடியும். எந்தத் திட்டத்தையும் திமுக அரசின் திட்டம் என்றோ, அதிமுக அரசின் திட்டம் என்றோ தனித்துப் பார்ப்பது நல்லதில்லை.

முதல்வர் ஜெயலலிதாவே பேரவையில் பல முறை தலைமைச் செயலகம் ஒன்று புதிதாகக் கட்டப்படவேண்டும் என்று கூறியுள்ளார். அந்த எண்ணம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதற்காக அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் யாருக்கு நஷ்டம்?

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், அலுவலர்களும் இடப்பற்றாக்குறை காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதல்வரின் பிடிவாதத்தின் காரணமாகத்தான் அவதிக்கு ஆளாகிறோம் என்றும் அவர்கள் பேசிக் கொள்கின்றனர்.

ஆட்சி இன்று வரலாம். அடுத்த தேர்தலில் வராமல் போகலாம். ஆனால் ஆட்சியில் இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சியைப் பற்றியே குறுகிய நோக்கில் எண்ணிச் செயல்படாமல் மக்களின் நல் வாழ்க்கைக்காகவே நேரத்தைச் செலவிடுவதுதான் ஜனநாயகம்.

இதனை இனியாவது முதல்வர் ஜெயலலிதா புரிந்துகொண்டு பெருந்தன்மையோடு செயல்பட வேண்டுமென்று விரும்புகிறேன், செயல்படுவார் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக