வியாழன், 5 ஜனவரி, 2012

நாயை விட கேவலமாக நடத்துகின்றனர்' : இந்தியர்கள் கதறல்: சீனா மறுப்பு

பீஜிங்: சீனாவின் இவு நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தங்களை சீனர்கள் நாயை விடக் கேவலமாக நடத்துவதாகவும், மத்திய அரசு காப்பாற்றா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கதறியுள்ளனர்.
சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில் இவு நகரில் உள்ள ஓட்டலில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தீபக் ரஹேஜா மற்றும் ஷ்யாம் சுந்தர் அகர்வால் இருவரும், விரைவில் ஷாங்காய் நகருக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுடன் பாதுகாப்பு கருதி, இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரும் செல்வர் என, அவர் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில், இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரனுக்கு உணவு, மருந்து வழங்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு, நேற்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.

அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ இதுகுறித்துக் கூறியதாவது: இவு நகரில், இந்தியத் தூதரக அதிகாரிக்கு உணவு, மருந்து வழங்கப்படவில்லை என்ற செய்தி தவறானது. இவ்விவகாரம் வர்த்தகத்தால் விளைந்த சிக்கல். அதனால், சீன சட்டப்படி இவ்வழக்கு நடக்கும். இவ்வழக்கின் வித்தியாசத்தை உணர்ந்து, இதை முறையாக நடத்த இந்தியா உதவும் எனவும், சீனாவில் உள்ள இந்திய வர்த்தகர்கள் சீன சட்டப்படி நடக்க வேண்டும் என, அவர்களுக்கு இந்தியா அறிவுறுத்தும் எனவும் நம்புகிறோம். இவ்வாறு ஹோங் லீ தெரிவித்தார்.

அதேநேரம் இவ்வழக்கில், இந்திய வர்த்தகர்களை சிறை பிடித்து வைத்த ஐந்து சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இவு நகரில் இருந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தீபக் ரஹேஜா,"இங்கு ஓட்டலுக்குள்ளேயே சீன வர்த்தகர்கள் வந்துவிட்டனர். எங்களின் உடைகளைக் களைந்து விட்டு, அடிக்கின்றனர். பொருட்களை தூக்கி வீசுகின்றனர். மிருகங்களைப் போல நடத்துகின்றனர். எங்களைக் காப்பாற்றாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில், இந்திய வர்த்தகர்களை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் எனவும், வழக்கு முடியும் வரை அவர்கள் சீனாவில் தங்க வைக்கப்படுவர் எனவும் இந்தியத் தூதரகம், சீனாவுக்கு உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தொலைபேசியில் பேசிய ரஹேஜா,"நாங்கள் ஏழைகள். எங்களால் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசுதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' எனக் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக