வியாழன், 12 ஜனவரி, 2012

ஜெயலலிதா: பிராமண முதல்வர் மாட்டுக்கறி உண்பாரா?

சென்னை: பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா.
நக்கீரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் மீது முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேற்று தாக்கல் செய்த மனுவில், "என்னைப் பற்றி வெளியிடும் செய்திகள் தவறு என்று தெரிந்தே தொடர்ந்து தவறான மற்றும் அவதூறான தகவல்களை நக்கீரன் கோபாலும், காமராஜும் வெளியிட்டு வருகின்றனர்.
பத்திரிகை விற்பனைக்காக கீழ்த்தரமாக செயல்படுகின்றனர்.
இதுபோன்ற 21 அவதூறு செய்திகளை 2003-ம் ஆண்டு அவர்கள் தொடர்ந்து வெளியிட்டதால், அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதாகிவிட்டது. என்னைப் பற்றி செய்தி வெளியிடுவதற்கு நிரந்தர தடையும், அவதூறு விளைவித்ததற்காக நிவாரணமும் கேட்டு அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தேன்.
அந்த வழக்கிலும் நக்கீரன் கோபாலும், காமராஜும்தான் பிரதிவாதிகள். எனது வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பித்து, என்னைப்பற்றி அவதூறு செய்தி எழுதக்கூடாது என்று கூறியது.

இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த நீதிமன்றம், சில நிபந்தனைகளை விதித்து 6.4.06 அன்று உத்தரவுகளை பிறப்பித்தது.

36 மணி நேரத்துக்குள்...


அந்த உத்தரவில், 'ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையை வெளியிட வேண்டும் என்றால் அந்த கட்டுரை பற்றிய சம்பந்தப்பட்ட கேள்விகள் அல்லது அந்த கட்டுரையின் சாராம்சத்தை அவருக்கு பேக்ஸ் எண் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு ஜெயலலிதா பதிலளிக்கலாம். அவரிடம் இருந்து 36 மணி நேரத்துக்குள் பதில் கிடைக்கவில்லை என்றால் நக்கீரனில் அந்த கட்டுரையை வெளியிடலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

கொள்கை பரப்புச் செயலாளர்

இந்த நிலையில் என்னைப் பற்றி கடந்த 7-ந் தேதி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மற்றும் போஸ்டரில், 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நான் அ.தி.மு.க.வில் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, அதற்கு கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் எனது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், அந்த செய்தியை பொன்னையன் வன்மையாக மறுத்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளார்.

எம்ஜிஆரும் நானும் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை

எம்.ஜி.ஆரும், நானும் எந்த நேரத்திலும் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை. எம்.ஜி.ஆர். அவர் வாழ்நாள் முழுவதும் ஒருநாள் கூட அதை உட்கொண்டதில்லை. நானும் இதுவரை மாட்டுக்கறியை தொடவில்லை. இந்த நிலையில் இப்படி ஒரு முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான கட்டுரையை வெளியிட்டது, குற்ற உள்நோக்கம் கொண்டது.

இந்த கட்டுரை பொய் என்பதும் அது என்னை அவதூறு செய்யும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதோடு, கடந்த 6.4.06 அன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி வெளியிடப்பட்ட செய்தி இதுவாகும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த செய்தியை வெளியிடுவதற்கு முன்பு எனது கருத்தை கேட்டிருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எனக்கு அப்படி எந்தவொரு நோட்டீசும் வரவில்லை.

தண்டிப்பது அவசியம்


எனவே இது நீதிமன்ற உத்தரவை மீறி வெளியிடப்பட்ட செய்தி என்பதால், அவர்கள் 2 பேரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கோர்ட்டையும் அவமதிப்பு செய்துள்ளதால் அந்த குற்றத்தின் கீழ் அவர்களை தண்டிப்பது அவசியமாகும்.

அந்த அவதூறான செய்தி, எனது நற்பெயருக்கும், மதிப்புக்கும் மட்டுமல்ல, எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் விதமாக அமைந்துவிட்டது. மாட்டுக்கறியை சமைத்து எம்.ஜி.ஆருக்கு பரிமாறினேன் என்பதோடு, நானும் அதை சாப்பிட்டேன் என்று வந்துள்ள இந்த செய்தி, உண்மைக்கு புறம்பானது.

பிராமண சமுதாயத்திலிருந்து வந்த முதல்வர்...

இந்த செய்தி, பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது. ஆகவே, கோபாலும், காமராஜும் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் குணநலன்களை கொச்சைப்படுத்திவிட்டனர்.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதமாக குற்ற உள்நோக்கத்துடன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட அனுமதித்தால் நான் கடுமையாக பாதிக்கப்படுவேன்.

இன்று விசாரணை


ஆகவே, இதுபோன்ற எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகளை எழுதவோ, வெளியிடவோ, விற்கவோ கூடாது என்று நக்கீரன் பத்திரிகைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே, தெரிந்தே அவமதித்த குற்றத்துக்காக இவர்களை தண்டிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (12-ந் தேதி) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக