சனி, 21 ஜனவரி, 2012

வருணாசிரம மோகத்தால் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றான்

வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
-சுந்தரவடிவேலன். திருப்பூர்
வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.
இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.
ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.

பார்ப்பன ஜாதி உயர்வுக்கும். அதை பாதுக்காக்கிற சனாதன தர்மத்திற்கும் எதிரானவர்களாக ஆங்கிலேயர்களை தவறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கொலையும் தற்கொலையும் அது.
வெள்ளைக்காரர்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையை கடைபிடிக்காமல் ராணுவம், சமையல் (மாட்டுக்கறியும் சமைப்பது) போன்ற தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்தான், வாஞ்சிநாதன் போன்ற சனதனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கும், கோபத்திற்கும் காரணம்.
இதை நிரூபிப்பதுபோல், ஆஷை 17-6-1911  அன்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம், வாஞ்சியின் சனாதனத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
அதில்,
ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்
கோ (பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு’ என்ற இந்த வரி, வாஞ்சிநாதனை சுதந்திர போராட்ட வீரனாக அல்ல, ஜாதி வெறியனாகத்தான் காட்டுகிறது.
வெள்ளைக்காரனை திட்டுவதற்குக்கூட, தாழ்த்தப்பட்டவரை (பஞ்சமன்) இழிவான குறியிடாக பயன்படுத்துகிற, புத்திக்குப் பேர்தான், விடுதலை உணர்வா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியர்கள் இல்லையா?
காந்தியை கோட்சே என்ன காரணத்திற்காக கொன்றானோ, அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் ஆஷை வாஞ்சிநாதன் கொன்றான்.
http://mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக