புதன், 18 ஜனவரி, 2012

இசை மேதை எஸ்டி பர்மன் வாழ்ந்த வீடு இன்று கோழிப்பண்ணை!


எஸ்டி பர்மன்... இந்தியாவின் இசை மேதைகளுள் முக்கியமானவர். நாற்பது ஆண்டுகள் பாலிவுட்டைக் கலக்கிய சாதனையாளர். தேசிய விருது, மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர். அவரது ஒவ்வொரு பாடலும் வைரம் மாதிரி காலத்தை வென்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
ரசிகர்களால் 'தாதா (Dada)' என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா மன்னரின் நேரடி வாரிசு. ஆனால் அரண்மனை அரசியல் காரணமாக, அகர்தலாவிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து இசையமைப்பாளரானார். பத்தோடு பதினொன்றாக இல்லால், இசையமைப்பாளர்களில் மன்னராகத் திகழ்ந்தார். கைடு, ஜூவல் தீஃப், பேயிங் கெஸ்ட், ஆராதனா என வெள்ளிவிழாப் படங்களின் இசையமைப்பாளர் எஸ்டி பர்மன்தான். இவர் மகன்தான் இந்திப் பட இசையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஆர் டி பர்மன்.'காலம் பூரா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் அளவுக்கு பெரிய மேதை எஸ்டி பர்மன்' என்பார் இசைஞானி இளையராஜா அடிக்கடி. அப்பேர்ப்பட்ட இசைமேதை வாழ்ந்த வீடு இன்று கோழிப்பண்ணையாக மாறிப் போயிருக்கிறது!
எஸ்டி பர்மன் வாழ்ந்த வீடு இந்திய - பங்களாதேஷ் எல்லையில் உள்ள கோமில்லா அருகே சார்த்தா என்ற கிராமத்தில் உள்ளது. டாக்காவிலிருந்து 85 கிமீ தூரத்தில் உள்ளது இந்த இடம். இந்தியாவின் அகர்த்தலாவிலிருந்து 50 கிமீ தூரம்.

சமீபத்தில் திருபுராவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவிடம் இதுகுறித்து மாநில அரசின் கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்தனர்.

உடனே, எஸ்டி பர்மனின் அந்த இல்லத்தை பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப் போவதாக ஹஸீனா தெரிவித்தார்.

திரிபுரா கலாச்சார ஒத்துழைப்பு கமிட்டியில் இடம்பெற்றுள்ள கவுதம் தாஸ் கூறுகையில், "அந்த வீடு சேதமடைந்த நிலையில் இருந்தததால், உள்ளூர்க்காரர்கள் சிலர் ஆக்கிரமித்து கோழிப்பண்ணை வைத்துவிட்டார்கள். இதனை பங்களாதேஷ் பிரதமரிடம் தெரிவித்துவிட்டோம். ஆனால் இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பங்களாதேஷை சார்ந்த சிலரும் எங்கள் கமிட்டியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூலம் மீண்டும் நமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். விரைவில் எஸ்டி பர்மனின் வீடு, அவரது அழகிய நினைவில்லமாக மாற்றப்படும் என நம்புகிறோம்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக