செவ்வாய், 31 ஜனவரி, 2012

முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை ‘ஓவர்டேக்’ செய்த தபால் வாகனத்துக்கு அபராதம்

முதல்வரின் பாதுகாப்பு போலீஸ்காரர்கள் செல்லும் வாகனத்தை முந்திச்சென்ற தபால் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் இருந்து அஞ்சல் வேன் (டிஎன் 01; கே 3043) ஒன்று கடிதங்கள், பார்சல்களை சேகரித்து வர ஜன.28ம் தேதி மாலை 5. மணியளவில் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் விரைந்துக் கொண்டிருந்தது. அலுவலகங்கள் மூடும் நேரம் என்பதால், வாகனத்தின் டிரைவர் ஜெயராம் (41) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவசரமாக வண்டியை ஒட்டியிருக்கிறார்.அப்போது, முன்னாடி சென்றுக் கொண்டிருந்த கார் ஒதுங்க, விரைய வாய்ப்பு இருந்து சாலையை அடைத்துக் கொண்டு சென்றது. அதனால், அஞ்சல் வேன் டிரைவர்  ஹாரன் அடித்திருக்கிறார். அப்போது கார் ஒதுங்கவில்லை. மீண்டும் ஹாரன் அடித்த வேன் டிரைவர், திடீரென கிடைத்த இடைவெளியில் முந்திவிட்டார். இதனால் கோபமான காரில் இருந்தவர்கள், வேனை விரட்டிச் சென்று செபி அலுவலகத்தில் மடக்கிப் பிடித்தனர். வேனில் இருந்த டிரைவரை இறக்கி, சிஎம் பாதுகாப்பு போற கார், அந்த காருக்கே ஹாரன் அடிச்சி, வழிவிட சொல்றியா? ஒவர்டேக் பண்றியா? என்று அதிகார தொனியில் கேட்டிருக்கின்றனர்.

பின்னர், வேனுடன் டிரைவர் ஜெயராமை அபிராமிபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்த போலீஸ்காரர் ராமதாசிடம் விவரத்தைச் சொல்லி அபராதம் போடச் சொல்லியிருக்கின்றனர். அப்போது விவரம் தெரிந்து அங்கு வந்த அஞ்சல் துறை ஊழியர் நியாயம் கேட்க, அவர் கையை பிடித்து முறுக்கியிருக்கின்றனர். அதனால் பயந்துப் போய் இரண்டு பேரும் அமைதியாகி விட்டனர். பின்னர், அபாயகரமான முறையில் வாகனத்தை ஒட்டியதற்காக, வண்டியின் உரிமையாளர் (?) என்ற முறையில், ஜெயராமுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியரை இப்படி அச்சுறுத்தலாமா?

இதுகுறித்து, அஞ்சல் துறை தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ’முதல்வர் பாதுகாப்புக்கு செல்லும் வாகனம் என்ற அடையாளம் ஏதும் அந்த காரில் இல்லை. சைரன் விளக்கும் இல்லை. அதனால், வேன் டிரைவர் அது ஏதோ சாதாரண வண்டி என்று நினைத்து, வேலை அவசரம் காரணமாக முந்தியிருக்கிறார். முதல்வர் கூட இப்போது, தான் செல்லும்போது வாகனங்களை நிறுத்துவதில்லை. ஆனால், அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லிக் கொள்பவர்கள், இப்படி அராஜகம் செய்தால் எப்படி? மத்திய அரசு ஊழியரே இப்படி அச்சுறுத்தப்பட்டால் எப்படி?’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக