திங்கள், 30 ஜனவரி, 2012

இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!

கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று உள்ளது.
  கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவ பிரதேசத்தில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக