ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சென்னை, திருப்பூர், கோவையில் குவியும் புகார்கள் - குண்டர் சட்டத்தில் கைதாகிறார் ராவணன்!



Ravanan
சென்னை: சசிகலாவின் உறவினர் ராவணன் விரைவில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான்ட்ராக்டரை கடத்தி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா உறவினர் ராவணன் மீது கடத்தல், கொலை, நில அபகரிப்பு, தாக்குதல் உள்பட பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.
கடந்த மாதம் 19-ம் தேதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த 12 பேரில் ராவணனும் ஒருவர்.இவர்கள் மீது அதிமுகவினர் அடுக்கடுக்காக புகார்களை கூறினர். இதைத்தொடர்ந்து சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான மண்டல தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் பலரது பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலாவின் சித்தப்பா மருமகனான ராவணன், கோவையில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கான்ட்ராக்டரை கடத்தி மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராவணனின் உதவியாளர் மோகனும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசின் அனைத்து துறைகளிலும் இவரது தலையீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் நிலம் அபகரிப்பு, கல்குவாரிக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி பல கோடி மோசடி என ஏராளமான புகார்கள் கூறப்பட்டன.

குண்டர் சட்டம்

நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் செல்வராஜ், கடந்த மாதம் 13-ம் தேதி திருச்சி - கோவை சாலையில் சூலூர் அருகே வாகன விபத்தில் பலியானார். ராவணனால் மிரட்டப்பட்ட என் தந்தை விபத்தில் பலியாகவில்லை, அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் செல்வராஜின் மகன் சதீஷ்குமார் நேரில் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

போலீசார் இன்று விசாரணையை துவக்கி உள்ளனர். சதீஷ்குமாரின் புகார் உண்மையாக இருந்தால், விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அதிலும் ராவணன் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ரூ 5 கோடி நிலம் அபகரிப்பு

மேலும், கோவை பி.என்.புதூரை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ராதாகிருஷ்ணன், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலத்தை ராவணனின் தூண்டுதலின் பேரில் அவரது உறவினர்கள் அபகரித்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த ஜோதிடர் வெற்றிவேல் அளித்த தாக்குதல் புகார் மீதும் விரைவில் வழக்கு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

ராவணனால் பாதிக்கப்பட்ட வேறு சிலரும் புகார் கொடுக்க தயாராகி வருகின்றனர். கான்ட்ராக்டரை கடத்தி பணம் பறித்த சம்பவத்தில் ராவணன் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற புகார்கள் மீதும் விசாரணை தீவிரமடைந்து விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

ராவணன் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராவணன் ஆதரவாளர்கள் நீக்கம்

இதற்கிடையே, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த புத்திசந்திரன் எம்எல்ஏ, ஜெ. பேரவை செயலாளர் சுரேஷ்குமார், மாணவர் அணிச் செயலாளர் நந்தகுமார், ஊட்டி தொகுதி பொறுப்பாளர் அர்ஜுன் ஆகியோரது கட்சிப் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ராவணன் சிபாரிசால் பதவி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலும் மோசடி புகார்

ராவணன் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ஒரு கோடி ரூபாய் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கொடுத்துள்ளார்.

தொழில் அதிபரான இவர், போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கொடுத்துள்ள புகாரில், "கோவையில் மணல் குவாரி லைசென்ஸ் அனுமதி வாங்கித் தர ஒரு கோடி ரூபாய் கேட்டார் ராவணன். எனவே சென்னையில் வைத்து ராவணனின் உதவியாளர் சத்யா மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன்.

ஆனால் லைசென்ஸ் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதற்கிடையில் போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேறிய பிறகு ராவணனைச் சந்தித்துப் பணத்தைக் கேட்டேன். நாங்கள் விரைவில் ஒன்று சேர்ந்து விடுவோம். அதன்பின் லைசென்ஸ் வாங்கித் தருகிறேன் என்றார். ஆனால் பணம் கொடுத்தால் போதும் என்று கூறியதற்கு, அவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவர் மீதும், உதவியாளர் சத்யா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கிரிமினல் சட்டப் பிரிவு 506(1), 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் ராவணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இப்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராவணனை, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக