வெள்ளி, 6 ஜனவரி, 2012

நிலுவையில் வழக்குகள்- புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்க ஜெ. ஆலோசனை!


Chief Minister at the meeting on the set up of Multi Super Speciality Hospital at Omandurar Government Estate
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பார்த்துப் பார்த்துக் கட்டிய புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறி விசாரணைக் கமிஷனை அமைத்துள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ததை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதை 300 படுக்கைகள், 8 உயர் சிகிச்சைப் பிரிவுகளுடன் அதி நவீன மருத்துவமனையாக மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அரசினர் தோட்ட வளாகத்தில் அதி நவீனமாக பல நூறு கோடிகளை இறைத்துக் கட்டப்பட்ட கட்டடம்தான் புதிய தலைமைச் செயலகம். இந்தக் கட்டடத்தின் ஒரு பிரிவு தயாரான பின்னர் அங்கு சட்டசபை மாற்றப்பட்டு சில கூட்டங்களும் நடந்தன.

திமுக ஆட்சி போய், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த புதிய தலைமைச் செயலக கட்டடம், அதி உயர் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இந்த கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று விசாரணைக் கமிஷனையும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதேசமயம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மாற்றுவதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இந்தப் பின்னணியில், சர்ச்சைகள் இன்னும் தீராத நிலையில், இந்த கட்டடத்தை எப்படி அதி உயர் மருத்துவமனையாக மாற்றலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தப் புதிய அதி உயர் மருத்துவமனையில், இதய மருத்துவம், இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை, நாளமில்லா சுரப்பி சிகிச்சை, கை மற்றும் உடல் பாகங்கள் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகிய 8 சிறப்பு மருத்துவத்துறை பிரிவுகள் இருக்கும்.

ஏழை, எளியவர்களும் இந்த 8 பிரிவுகளிலும் உயர் சிகிச்சை பெற முடியும். 47,491.48 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த உயர் சிறப்பு மருத்துவமனை அமைகிறது. ஒரு சிறப்பு பிரிவு துறை ஒவ்வொன்றுக்கும் தலா 30 படுக்கை வசதி, அவசர சிகிச்சை பிரிவுக்கு 60 படுக்கை வசதி என மொத்தம் 300 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது.

புதிய மருத்துவமனையாக மாற்றும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 40 கோடி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேல்சபைக்காக கட்டப்பட்ட அரங்கத்தை மினி மாநாட்டு அரங்காக மாற்ற அரசு திட்டமிட்டுலள்ளதாம்.

முதல் 3 மாடிகளில் பல்வேறு துறைகளுக்கான மருத்துவ பிரிவுகள் மற்றும், புறநோயாளிகளை டாக்டர் கள் பரிசோதிப்பதற்கான அறைகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. 4-வது மாடியில் ஆபரேஷன் தியேட்டர்களும், 6-வது மாடியில் மற்ற துறைகளும் இடம் பெறும் என்று தெரிகிறது.

பி பிளாக்கில் 74 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது. இதுவும் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக