திங்கள், 30 ஜனவரி, 2012

திரைப்பட இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்களின் ஊதிய உயர்வை

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குநர்களின் சம்பள உயர்வை நேற்று சங்கத்தின் செயலர் அமீர் அறிவித்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்குநர் அமீர் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசி புதிய ஊதியங்கள் மற்றும் பணிகளுக்கான வரைமுறைகள் குறித்து 10-04-2008 அன்று கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தம் 3 ஆண்டுகள் முடிந்து காலாவதியாகி விட்டது.
அதனால், எங்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்களின் நலன் கருதி ஊதியத்தை உயர்த்தி, முறைப்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் 27-05-2011 அன்று கொடுத்தும், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஒரு வருட காலத்துக்கும் மேலாக காத்திருந்தும் எந்த தீர்வும் எட்ட முடியாத நிலை உள்ளது.

எனவே, தற்கால சூழலுக்கு ஏற்றாற்போல் இயக்குனர்கள் மற்றும் முக்கியமாக இணை, துணை, உதவி இயக்குனர்களின் நலன் கருதி புதிய ஊதிய உயர்வை நாங்கள் அறிவிக்கிறோம்.

அதன் விவரம்:

தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில், திரைப்படத்தில் சிக்கல் ஏற்படும்போது, அந்த படத்தின் ஊதியமாக இயக்குனருக்கு ரூ.10 லட்சம் தரப்பட வேண்டும். இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு ஏற்படும் பட்சத்தில் இணை இயக்குனருக்கு ரூ.4 லட்சம், துணை இயக்குனருக்கு ரூ.3 லட்சம், முதல் நிலை உதவி இயக்குனருக்கு ரூ.2 லட்சம், 2-ம் நிலை உதவி இயக்குனர்களுக்கு ரூ.1 லட்சம் என்று தரப்படவேண்டும்.

இயக்குனர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்கள் படப்பிடிப்பில் பணிபுரியும் நேரங்களில் கீழ்க்கண்டவாறு தினப்படி வழங்க வேண்டும்.

இயக்குநருக்கு உள்ளூராக இருந்தால் (நாளொன்றுக்கு) ரூ.1,000, வெளியூராக இருந்தால் ரூ.1,200, இணை இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.500, வெளியூராக இருந்தால் ரூ.600, துணை இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.400, வெளியூராக இருந்தால் ரூ.500, முதல் நிலை உதவி இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.300, வெளியூராக இருந்தால் ரூ.400, 2-ம் நிலை உதவி இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.200, வெளியூராக இருந்தால் ரூ.300 வழங்கப்படவேண்டும்.

தலைப்பு பதிவு

தயாரிப்பாளர் சங்கம், வர்த்தக சபை, கில்டு ஆகிய இடங்களில் திரைப்படங்களின் தலைப்பை பதிவு செய்வதை போல் இனி வரும் காலங்களில், இயக்குனர்களின் சங்கத்திலேயே படத்தலைப்பை பதிவு செய்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது," என்றார்.

இயக்குநர்கள் சங்க துணைத்தலைவர் சமுத்திரகனி, பொருளாளர் ஜனநாதன், இயக்குநர்கள் பிரபு சாலமன், ஸ்டான்லி, ஜெகன், அஸ்லாம், பாலசேகரன் ஆகியோர் இந்த அறிவிப்பின் போது உடனிருந்தனர்.

அமீரின் அறிவிப்பு பின்னர் தீர்மானமாக கையெழுத்திடப்பட்டு தரப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக