செவ்வாய், 17 ஜனவரி, 2012

தி.மு.க.,வில் பரபரப்பை கிளப்பும் "ஹைடெக்' பிரசாரம்

திருச்சி:பொங்கல் விழாவையொட்டி, "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆதரவாளர்கள், "ஹைடெக்' பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்துக்கு பின், 100 நாட்களுக்கும் மேலாக சிறையிலிருந்த கனிமொழி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திகார் சிறையில் உள்ள ராஜா இதுவரை ஜாமின் கோரவில்லை. கனிமொழிக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி வழங்கப்படும் என, பேச்சு அடிபட்டது. இதையடுத்து, இளைஞரணியில் உறுப்பினராக 30 வயது, நிர்வாகியாக 40 வயது என, வயது மேல்வரம்பு குறைக்கப்பட்டது.அரசியலில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது எனவும், தனது மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலர் பதவி பெற்றுத் தரவும் ஸ்டாலின் காய் நகர்த்தி, இந்த வயது வரம்பைக் கொண்டு வந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தி.மு.க.,விலும் இந்த பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தி.மு.க.,வில் உள்ள பலரது அலைபேசிக்கு நேற்று டில்லியிலிருந்து போன் (எண்: 1130174000) வந்தது. பொங்கல் நல்வாழ்த்து கூறும் வகையில், பதிவு செய்யப்பட்ட செய்தி ஒன்று கேட்டது, அதில், ""இந்த 2012 இனிய தமிழ்ப் புத்தாண்டு நாளன்று, தலைவர் கருணாநிதி வழிகாட்டுதலோடு, தளபதி ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம். இந்த கழகத்தின் அயராத பணியில் பெரம்பலூர் தந்த மாவீரன், அண்ணன் ராஜா கரத்தை வலுப்படுத்தி, அவருடன் இணைந்து பணியாற்றுவோம்,'' என்று, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க என்று, குறிப்பிடப்பட்டிருந்தது. மறந்தும் கூட அழகிரி பெயரையோ, கனிமொழி பெயரையோ குறிப்பிடவில்லை. இதை கேட்ட தி.மு.க.,வினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ராஜா ஆதரவாளர்களின் இந்த, "ஹைடெக்' பிரசாரம், தி.மு.க.,வில் மீண்டும் ஒரு புயலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக