வெள்ளி, 13 ஜனவரி, 2012

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!


ஸ்ரீ ராம் சேனாவின் முத்தாலிக்
இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசே அறிவிக்கும்படி செய்ய வேண்டுமா? இதன் வழியாக ஓட்டை பொறுக்கி ஆட்சியாளர்களாக மாறி, நாட்டின் வளங்களை கொள்ளையிட வேண்டுமா?
அப்படியானால், பார்ப்பன, பாசிச, இந்துத்துவா கருத்துகளை உங்கள் சிந்தனையின் ஒவ்வொரு துளியிலும் விதைக்க வேண்டும். அப்போதுதான் பொய் பேச முடியும். ஒரு பொருளை தானே திருடிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த முடியும். திட்டமிட்டு மக்கள் குவியும் இடத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு, இந்தக் ‘படுபாதக’ செயலை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புதான் என்று குற்றம்சாட்ட முடியும்.
சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் இப்படித்தான் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் நிகழ்த்த முயன்றுள்ளன.
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.
சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.
ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’  என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர். இதில், ராகேஷ் மத்துக்கு ‘பூசை’யும், மற்றவர்களுக்கு வெறும் ‘தீபாராதனையும்’ காட்டப்படவே, வேறு வழியின்றி இந்தக் கும்பலை பெல்லாரி மாவட்ட சிறைக்கு கடந்த ஞாயிறன்று (08.01.12) மாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (10.01.12) இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இன்னொருவரை கைது செய்து பெல்லாரியில் அடைத்திருக்கிறார்கள். இதன் மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ராம் சேனா அமைப்பினர், ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ஆனால், காவல்துறை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பெயர் வெளியில் வராதபடி பார்த்துக் கொள்கிறது. வேண்டுமென்றே எங்கள் அமைப்பை களங்கப்படுத்த முயற்சிக்கிறது…’ என்று கூறியதுடன், இதற்கு ஆதாரமாக ஏராளமான புகைப்படங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது, ராம் சேனா அமைப்பில் இருப்பவர்கள் ‘ரொம்ப’ நல்லவர்களாம். ஆர்.எஸ்.எஸ். ‘பாய்ஸ்’ மட்டுமே கெட்டவர்களாம். கேழ்வரகில் நெய் வடியும் கதையாக கதறுகிறார்கள் ராம் சேனா அமைப்பினர். கலாச்சார காவலர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, இவர்கள் நிகழ்த்திய – நிகழ்த்தும் வெறியாட்டங்கள் அனைத்தையுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஊடகங்களும் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. எனவே ராம் சேனா – ஆர்.எஸ்.எஸ். என பெயர்கள்தான் வேறு வேறே தவிர, மதக் கலவரங்களை நிகழ்த்துவதில் இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.
என்ன… இந்திய அதிகார வர்க்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊடுருவி இருப்பது போல் ராம் சேனா உறுப்பினர்கள் நுழையவில்லை. அதனால் ராம் சேனா செய்யும் அராஜகங்கள், உடனே வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். செய்யும் வெறிச் செயல்கள் முடிந்தவரை அமுக்கப்படுகின்றன. உண்மை அறிந்து மக்கள் போராடத் தொடங்கியதும் வேறு வழியின்றி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய பித்தலாட்டங்கள் ஊடகங்களாலும், காவலர்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றன.
மாலேகான் (குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலம்) உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்தான் என்பது இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இப்படி எசகுபிசகாக தொண்டர்கள் மாட்டிக் கொண்டதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என கையை விரிப்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நரித்தந்திரங்களில் ஒன்றுதான்.
இதையேதான் இப்போது ராம் சேனாவும் ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல…’ என்று சொல்வதன் வழியாக கடைபிடிக்கிறது. பிரதான ‘தாதா’வுக்கும், பகுதி ‘தாதா’வுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் ‘பங்கீடு’ குறித்த முரண்பாடு போன்றதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பதும். மற்றபடி பார்ப்பன பாசிச இந்துத்துவா கொள்கை உடையவர்கள் அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
இப்போது சிந்தகி பகுதியில் பேரணி நடத்தவும், போராட்டங்கள் நிகழ்த்தவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவாம். அதற்கு பார்ப்பன பாசிச இந்துத்துவா சக்திகளை அல்லவா ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்க வேண்டும்?
விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி கட்டண கொள்ளை… என நாட்டு மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் – அதை திசை திருப்பி அறுவடை செய்வதற்காக இந்துத்துவா சக்திகள் காய் நகர்த்தி வருகின்றன. அதன் ஒரு வடிவம்தான் இந்த பாகிஸ்தான் கொடியை ஏற்றியிருப்பது.
அடுத்து பாகிஸ்தான் கொடியை ஏற்றினால் இந்துக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும் துவேஷத்தையும் கிளப்பி விடலாம் என்று இந்துமதவெறியர்கள் தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்றால் ‘இந்துக்கள்’ அத்தகைய பலவீனத்தை கொண்டிருப்பது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும். இந்தியாவில் அமெரிக்க கொடியெல்லாம் பட்டொளி வீசி பறக்கும் போது பாகிஸ்தான் கொடி பறந்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது? பாகிஸ்தான் மீதான வெறியை வளர்த்து போலி இந்திய தேசபக்தியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையும் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவுதான் சங்க பரிவாரம். எனவே இந்த கொடி முத்திரை தேச வெறியிலிருந்து மக்களை விடுவிப்பதும் நம் பணியாக இருக்கிறது.
எண்ணெய் வளங்களை அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றுவதற்காக, இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய்யாக சொல்லி ஈராக்கையே சுடுகாடாக மாற்றியது அமெரிக்க இராணுவம்.
அமெரிக்காவின் அல்லக்கையாக திகழும் இந்துத்துவா சக்திகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பொய்யை சொல்லி, நாட்டில் மதக் கலவரங்களை நிகழ்த்த முயன்று வருகிறது.
உண்மையில் ‘உடையும் இந்தியா?’வுக்கு காரணம் பார்ப்பன பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகள்தான். ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள்தான்.
_________________________________________________
- அறிவுச் செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக