ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு-அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

Nakkeeran Gopal
சென்னை: நக்கீரன் வார இதழ் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேசமயம், நக்கீரன் வார இதழ் அலுவலம் மீது தாக்குதல் நடத்திய அதிமுக எம்எல்ஏ அசோக் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதில் மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான் என்ற தலைப்பில் சசிகலா தரப்பு கூறியதாக கட்டுரை இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் நேற்று நக்கீரனைக் குறி வைத்து கடும் தாக்குதலில் இறங்கினர்.
தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் தலைமையில் திரண்டு வந்த 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அலுவலகததிற்குள் புகுந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். அசோக் அலுவலக கேட்டை மூடி விட்டு உள்ளே புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அலுவலகம் பெரும் சேதத்தை சந்தித்தது. அவர்களைப் போலீஸார் வெகு தாமதத்திற்குப் பின்னர் கைது செய்து பின்னர் விடுதலை செய்து விட்டனர்.

இந்த நிலையில் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அதிமுக பிரமுகர் அன்பு ஒரு புகார் கொடுத்தார். அதில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கை மீதும், அதன் ஆசிரியர் கோபால் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்தப் புகாரை ஏற்று உடனடியாக போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். அதன்படி நக்கீரன் கோபால் மீது கொலை மிரட்டல், மன உளைச்சலை ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது, கையால் தாக்குதல், ஆயுதம் வைத்திருத்தல், சட்ட விரோதமாக கூடுதல் என 6 பிரிவுகளைப் போட்டுள்ளனர்.

அதேபோல நக்கீரன் வார இதழ் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் எம்எல்ஏ அசோக் உள்ளிட்ட அதிமுகவினர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், அவதூறான வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்தி சேதப்படுத்துதல், ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

தாக்குதலின்போது செயல்படாத போலீஸார் தற்போது எல்லாம் நடந்து முடிந்த பின்னர் நக்கீரன் அலுவலகத்திற்குப் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக