புதன், 11 ஜனவரி, 2012

பொங்கல்: 2 நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து கனிமொழிக்கு விலக்கு

டெல்லி: பொங்கல் பண்டிகையையொட்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைகளில் பங்கேற்பதிலிருந்து, திமுக எம்பி கனிமொழிக்கு இரண்டு நாட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான அவர், தினமும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வருகிறார். இதனால், அவர் டெல்லியிலேயே தங்கியிருக்கிறார். தனது பிறந்தநாளன்று கூட அவர் நீதிமன்றத்திலேயே இருந்தார்.இந் நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி சென்னை செல்வதற்காக, வரும் ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில், நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது மகனின் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுவதாகவும், அதில், தாம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் தனக்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து, இரண்டு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

கனிமொழியின் மனுவை ஏற்ற நீதிபதி ஓ.பி.சைனி, இரண்டு நாட்களுக்கு அவருக்கு விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக