புதன், 18 ஜனவரி, 2012

ஆந்திராவில் வரலாறு காணாத குளிர் 0 டிகிரியை விட குறைந்து 2 நாட்களில் 15 பேர் பலி

ஆந்திராவில் வரலாறு காணாத அளவு கடுங்குளிர் நிலவுகின்றது. குளிர் தாங்க முடியாமல் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் இந்த ஆண்டு கடுங்குளிர் நிலவி வருகின்றது. ஆந்திராவில் உள்ள 23 மாவட்டங்களில் 3 முதல் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் குளிர் தாங்க முடியாமல் கரீம்நகர் மாவட்டத்தில் 5 பேரும், விசாகப்பட்டினத்திலும், குண்டூரிலும் தலா 4 பேர் பலியாகியுள்ளனர்.
நல்கொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் குளிர் தாங்க முடியாமல் தலா 1 பேரும் பலியாகினர். 13 மாவட்டங்களில் வெப்பநிலை 10 டிகிரியை விட குறைந்து காணப்படுகின்றது.
அதிலும் விசாகப்பட்டினத்தில் உள்ள லம்பாசிங்கி என்ற பழங்குடியின பகுதியில் 0 டிகிரியை விட குறைந்து காணப்பட்டதாக தெரிகின்றது. ஆனால் அப்பகுதியில் வானிலைமானி அமைக்கப்படாததால், இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக 1.5 டிகிரி வெப்பநிலை நிலவுகின்றது. கடந்த 100 ஆண்டுகளில் மகாரஷ்டிராவின் எல்லையில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே குறைபட்சமாக 4.2 டிகிரி வெப்பநிலை நிலவி உள்ளது. மேலும் ஆந்திராவில் கடும் குளிர் தாங்க முடியாமல் 15 பேர் பலியாவது இதுவே முதல் முறை.
இது குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை நிலையத்தினர் கூறியதாவது,

இமயமலையில் இருந்து வீசும் குளிர் காற்று மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் வழியாக ஆந்திராவில் வீசி வருகின்றது. இதனால் ஆந்திராவில் வெப்பநிலை வரலாறு காணாத அளவு குறைந்து, கடும் குளிர் நிலவி வருகின்றது. இந்த தட்பவெப்பநிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக