ஞாயிறு, 1 ஜனவரி, 2012

லோக்பால்: 187 திருத்தங்களை ஏற்க முடியாது: சிதம்பரம்

மும்பை: "லோக்பால் மசோதா தொடர்பாக, ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட 187 திருத்தங்களையும் ஏற்க முடியாது. இதில், ஏதாவது ஒரு சில திருத்தங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

லோக்பால் மசோதா விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மும்பையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா மீதான விவாதத்துக்கு பின், சபை ஒத்தி வைக்கப்பட்டதை பலரும் விமர்சித்துள்ளனர். அரசின் முன் இருந்த, ஒரே ஒரு விவேகமான முடிவு அது மட்டும் தான். லோக்பால் மசோதா விவகாரம் முடிந்து விடவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். பா.ஜ.,வும், மற்ற கட்சிகளும் சேர்ந்து, லோக்பால் மசோதா தொடர்பாக 187 திருத்தங்களை கொண்டு வந்து, அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. திரிணமுல் காங்கிரசும், திருத்தங்களை கூறியது. திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்பு எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இது தொடர்பாக, திரிணமுல் காங்கிரசை சமாதானப்படுத்த முடியாமல் போய்விட்டது. விரைவில் நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும். திரிணமுல் காங்கிரசை இந்த விஷயத்தில் சமாதானப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட 187 திருத்தங்களையும் அரசால் ஏற்க முடியாது. ஒரு சில திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ஜனாதிபதியிடம் புகார்: இதற்கிடையே, லோக்பால் விவாதத்தின்போது ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக ஜனாதிபதி பிரதிபாவிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: லோக்பால் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ராஜ்யசபாவில் நடந்த நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து, சபை ஒத்தி வைக்கப்பட்டதும் எங்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி, ஆலோசனை நடத்தியது. இதில், கட்சித் தலைவர் நிதின் கட்காரி தலைமையில், ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து, இதுகுறித்து புகார் அளிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். மேலும், "ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்; காங்கிரசை அகற்றுங்கள்' என்ற தலைப்பில், வரும் 3ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை, நாடு முழுவதும் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

"அமைச்சரவை கூட்டத்தில் எதிர்த்தோம்': ரயில்வே அமைச்சரும், திரிணமுல் காங்., மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி கூறியதாவது: லோக்சபாவில் லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கு முன், கடந்த 20ம் தேதி, இதுகுறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. லோக்சபாவில் தாக்கல் செய்வதற்கு தயாராக இருந்த மசோதாவை பார்த்தவுடன், இதை நிலைக்குழுவுக்கு திருப்பி அனுப்புங்கள் என்றேன். லோக் ஆயுக்தா தொடர்பாக இடம் பெற்றுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். காங்கிரசைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் என் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. ஆனால், அமைச்சரவை கூட்டத்தின்போது, மசோதாவை நிறைவேற்ற நாங்கள் சம்மதித்ததாக, காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது வருத்தமளிக்கிறது. இவ்வாறு தினேஷ் திரிவேதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக