திங்கள், 5 டிசம்பர், 2011

Cong BJP CPM முல்லைப் பெரியாறு காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்


முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.
இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும்.
ஒரு வேளை கேரள மக்கள் அனைவரும் கேரள அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரத்தில் சிக்குண்டிருந்தாலும் நாம் அவர்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்?
அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள். ஆம். கேரளாவில் இந்த மூன்று கட்சிகளும்தான் மக்களிடையே பீதியூட்டி அதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.
சமீப நாட்களாக கேரள இளைஞர் காங்கிரசு குண்டர்கள் முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகில் நின்று கொண்டு அதை இடிப்போமெனவும், பா.ஜ.க குண்டர்கள் அணைக்கு அருகில் உள்ள பேபி டேமில் அத்துமீறி நுழைந்து இடிப்போமெனவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை அச்சுதானந்தன் தலைமையில் புதிய அணை கட்டுமாறு உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதை போக மக்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சிகளே பின்னணியில் இருந்து இயக்குகின்றன.
கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இதற்காக தில்லி பிர்லா இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரம் இருக்கிறார். ஆக முல்லைப்பெரியாறு அணை ‘இடிந்து’ போனால் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதில் அங்கு ‘கொலவெறி’ போட்டியே நடக்கிறது.
இந்திய ஒற்றுமை பேசும் இந்த மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஊளையிடுவதின் பலனாக கேரள மக்களும் இந்த அவதூறு பிரச்சாரத்தில் பலியாகியிருக்கின்றனர். உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதா என்று எப்படி சோதித்தறிவது? அது பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே உத்தரவாதமளித்தாலும் இவர்கள் ஏற்பதாக இல்லை. அதைக் கண்டிக்க வக்கற்ற மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மீண்டும் மீண்டும் நிபுணர் குழு, பேச்சு வார்த்தை என்று இழுத்தடிக்கிறார்கள்.
ஒரு கட்டிடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாக சோதனை செய்து ஒரு முடிவைத்தான் தர முடியும். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? மேலும் தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.
மேலும் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி அழுத்தமானி கருவி கொண்டு அளந்தால் அது பாதுகாப்பான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன்றி அணையின் பாதுகாப்பை எப்படி நிரூபிப்பது?
உண்மை இவ்வாறிருக்க பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.
ஹீரோயிசம்தான் பிரச்சினை என்றால் அரபிக் கடலோரம் இருக்கும் கேரளமாநிலத்தை சுனாமி வந்தால் கடல் முழுவதும் முழுங்கிவிடும் என்று வீடியோ கிராபிக்ஸ் மூலம் தயாரித்து பிரச்சாரம் செய்யலாமே? அரபிக் கடலை வில்லனாக்கினால் அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையே? இப்படி தேவையின்றி தமிழக விவசாயிகளின் வாழ்வோடு ஏன் விளையாட வேண்டும்?
இப்படி இல்லாத பிரச்சினையை கிளப்பியிருப்பதோடு, அந்த இல்லாத பிரச்சினையை தீர்ப்பதற்கு தடையாக இருப்பதோடு, அந்த தடை மூலம் இரு மாநில மக்களிடம் முரண்பாட்டை முற்றவைக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் இவர்களது கிரைம் ரேட் தொடர்ந்து எகிறிக் கொண்டே இருக்கிறது.
இந்த மும்மூர்த்திகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று இவர்கள்தான் கூப்பாடு போடுவார்கள். தமிழக இளைஞர் காங்கிரசு தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன் இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்து சதியா?
இவர்களது கேரள பங்காளிகள்தானே அந்த உரிமையை தட்டிப் பறித்திருக்கிறார்கள். கண்டிப்பதாக இருந்தாலும், தண்டிப்பதாக இருந்தாலும் அவர்களைத்தானே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க வேண்டும்? அதை விடுத்து இவர்கள் யாரிடமிருந்து உரிமையை வாங்கித் தரப்போகிறார்கள்? சூடு, சொரணை, உண்மை, நியாயம் இருந்தால் தத்தமது அகில இந்தியக் கட்சிகளின் அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக மிரட்டியிருக்கலாம். இல்லை டெல்லி தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டு கேரள கட்சி அமைப்புகளை கலைக்குமாறு கோரியிருக்கலாம். அதையெல்லாம் செய்யத் துப்பில்லாத ஜென்மங்கள் இங்கே தமிழனுக்காக அழுகிறது என்றால் யாரை ஏய்க்கிறார்கள?
ஆக இந்த இந்திய தேச ஒற்றுமை பேசும் கட்சிகளின் நோக்கம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் சென்டிமெண்டுக்கு ஜால்ரா போட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதே. இதை காவிரிப் பிரச்சினையின் போது கார்நாடகாவிலும் பார்த்திருக்கிறோம். இப்போது கேரளாவில் பார்க்கிறோம். மேலும் தமிழக காங், பா.ஜ.க கும்பல் இரண்டுமே தமது கேரள பிரிவையோ, அரசையோ இதுவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு பாரத ஒற்றுமை குறித்த டியூஷனும் எடுக்க வில்லை. அந்த வகையில் கேரளாவில் சண்டித்தனம் செய்யும் காங், பா.ஜ.க பெருச்சாளிகளுக்கு தீனி போட்டு அடை காப்பது தமிழக பெருச்சாளிகள்தான். இந்த பெருச்சாளிகளை அடித்து விரட்டினால் கேரள பெருச்சாளிகளின் கொழுப்பு பறிக்கப்படும்.
அந்த வகையில் தமிழன ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சத்தியமூர்த்தி பவன், கமலாலயம் இரண்டையும் முற்றுகை இட்டு அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு செய்ய வேண்டும். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு சிறையில் அடைக்க வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க கொடிகளோ, கிளை அலுவலகங்களோ இல்லாதவாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தக் கட்சிகளின் டெல்லித் தலைமைக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு அது கேரளா வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும்.
இதை விடுத்து அப்பாவி மலையாள மக்களை எதிர்ப்பதில் என்ன பயன்? அவர்களா தினந்தோறும் அறிக்கை விட்டோ இல்லை அணைக்கு சென்றோ ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? அப்படி மக்களே நடத்தினாலும் அதன் பின்னணி இவர்கள்தானே? ஆனால் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு துளியுமில்லாத நிலையில் அகில இந்திய தலைமை செல்வாக்கு உள்ள கேரளாவின் பக்கம்தான் சாயுமென்பது தமிழகப் பெருச்சாளிகளுக்கு தெரியாதா என்ன?
இதில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகளின் நிலை மிகவும் சந்தர்ப்பவாதமானது. இவர்கள் ஒரு பேச்சுக்கு கூட முல்லைப் பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் உரிமை பற்றி பேசமாட்டார்கள்.
இந்தியாவில் அரசியல்ரீதியாக காலாவதியாகி வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் பரிதாபத்திற்குரிய தமிழக இணைய அவதாரமான மாற்று இணைய தளம் இந்தப் பிரச்சினை குறித்து, ” முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!” என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
அதில்,
“முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல்  ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக  ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது. (அழுத்தம் எம்முடையது)
மேலும், இதில் மார்க்சிஸ்டு கட்சி இரு கோட்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுகிறதாம். ஒன்று தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமாம், இரண்டு கேரள மக்களின் அச்சத்தை போக்க வேண்டுமாம், அதன்படி உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பின்படி இரு மாநில அரசுகளும் பகைமை இன்றி பேசித் தீர்க்க வேண்டுமாம்.
அட, வெளக்கெண்ணெய் வெண்ணைகளா! இதில் இருமாநிலமும் பகைமையுடன் ஈடுபடுகின்றன என்பதில் இருந்தே உங்களது வண்டவாளம் பல்லிளிக்கிறதே! முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் எப்போது, என்ன தவறிழைத்திருக்கிறது அல்லது சண்டை போட்டிருக்கிறது? அணை பாதுகாப்பாக இல்லை என்று ஒரு புரளி கிளம்பியதும், தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அணையை பலப்படுத்தியிருக்கிறது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?
ஆனால் உச்சநீதிமன்ற உத்திரவை மதிக்காமல் 136 அடிதான் வைத்திருக்க வேண்டுமென்றும், தற்போது 120 அடிதான் முடியும், பிறகு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று யார் கோரியது?
எல்லாம் உங்கள் அச்சுதானந்தன் ஆட்சியில்தானே புழுதி கிளப்பி பிரச்சாரம் செய்யப்பட்டது?
அதன்படி பகைமையை கிளப்பிவிட்டதே உங்களது தோழர்கள்தானே? இதில் ஏன் இரு மாநிலம் என்று குற்றமிழைத்தவனையும், குற்றமிழைக்கப்பட்டவனையும் ஒரே தராசில் நிறுத்துகிறீர்கள்? இதுதான் நீங்கள் பின்பற்றி வரும் மார்க்சியமா இல்லை சந்தர்ப்பவாதமா? இவ்வளவு செய்த பிறகும் தமிழகம் சும்மா இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இனவெறியை கிளப்பும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சிகளை கண்டிப்பதற்கு வக்கற்ற நீங்கள் அதை மடை மாற்றி இருமாநில மக்களும், கட்சிகளும் சுமூகமாக பேச வெண்டும் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுகிறீர்களா, இல்லை சந்தர்ப்பவாதத்தையே ஃபுல் மீல்சாக முழுங்குகிறீர்களா?
தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு, பா.ஜ.க கும்பல்களாவது தமிழக மக்களின் நலனை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடவாவது செய்கின்றன. அந்த ‘தரம்’ கூட இல்லாத வெத்து வேட்டாக போயிருக்கும் உங்கள் முட்டாள்தனத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாவது புரிந்து  கொள்வீர்களா?
உங்கள் நோக்கம் புதிய அணை கட்டும் கோரிக்கைக்கு தமிழகத்தை தயார்படுத்துவதுதான். அப்படி அந்த அணை கட்டும்பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் இல்லை, காற்று கூட வராது என்பதை பொறியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நீர் வராத பட்சத்தில் நீங்களும் தமிழகத்திலிருந்து காலி செய்து விட்டு உங்கள் கேரள தோழர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி இனவெறியுடன் செயல்படக்கூடாது என்பது சரிதான். மேலும் இங்கே எழுந்திருப்பது இன முரண்பாடு அல்ல. இது கேரள ஓட்டுப்பொறுக்கிகளின் அவதூறுப்பிரச்சாரம். அதை முறியடிப்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலையாக இருக்க முடியுமே அன்றி, அந்த அவதூறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது அல்லை. அந்த வகையில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகள்தான் கேரள கட்சிகளின் ஊளையை ஆதரித்து இருமாநில மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு உதவி புரிகிறார்கள்.
இந்த இலட்சணத்தில் பகைமை வேண்டாம், சுமூகமாக பேசுவோம், நீதிமன்றத்தை மதிப்போம் என்ற உபதேசம் யாருக்கு பயன்படும்?
ஒருவேளை கேரள மக்கள் அவர்களது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்ப் பிரச்ச்சாரத்திற்கு பலியாகி இருந்தாலும் அங்கே இருக்கும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தன் நியாயத்தை சொல்லித்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் அங்கே அவர்களது செல்வாக்கு குறையுமென்றாலும் நீண்ட கால நோக்கில் அது மாறும்.
புரட்சி கூட தனிப்பட்ட நலன்களை விடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நலனை வைத்துத்தானே நடக்க முடியும்?அப்போது அதற்கு ஆதரவாக வரும் மக்கள் முல்லைபெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வார்கள். அது வேறு இது வேறு அல்ல.
ஆனால் புரட்சி நடத்துவதை என்றோ தூக்கி எறிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இன்றைய நோக்கம் சில பல எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் கிடைத்து அணிகளுக்கு மாலை நேரத்து மயக்கத்தை காட்டுவதுதான்.
அதிலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருந்திருப்பதாலும், அங்கேதான் ஒரளவுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு முல்லைப் பெரியாறு விசயத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.
இங்கே அம்மா தயவில் ஒரு சில எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பதைத் தாண்டி வேறு ஒன்றும் பிடுங்க முடியாது. ஆனால் அகில இந்திய அளவில் வங்கத்தைப் பார், கேரளாவைப்பார் என்று அணிகளிடம் பீலா விடுவது முக்கியம். அதிலும் வங்கம் பஞ்சராகியும், கேரளம் பிரேக் டவுணாகியும் இருக்கும் நிலையில் அப்படி ஒரு பிரேக் டவுன் வண்டியாவது இருக்கிறதே என்று சீன் காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலிருந்துதான் போலிகளின் முல்லைப்பெரியாறு சந்தர்ப்பவாதம் பொங்கி வழிகிறது.
அந்த வகையில் முல்லைப்பெரியாறு விசயத்தில் துரோகம் புரிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளையும் நாம் குறிவைத்து எதிர்க்க வேண்டும்.
கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் தமிழின ஆர்வலர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் ஆதரித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக பா.ஜ.க இல கணேசனை மேடையேற்றியவர் பழ நெடுமாறன். அதற்காக பால்தாக்கரேவிற்கு பல்லக்கும் தூக்கியிருக்கிறார். மன்மோகன் சிங், வாஜ்பாயி இருவரையும் முதுகில் சுமந்தவர் வைகோ. போலிக்கம்யூனிஸ்டுகளை இங்கே யாரும் சீந்துவாரில்லை என்றாலும் இவர்களும் சில சமயம் தமிழின ஆர்வலர்களுக்கு இனிப்பான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் மும்மூர்த்திகளின் சந்தர்ப்பவாதம் இங்கே கண்டிக்கப்படாமல் வேடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும் இங்கே போராட்டம் என்ற அளவில் கூட கண்டிக்கப்படவில்லை.
சுருங்கக் கூறின் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உடனடிக் கவனம் இந்த மும்மூர்த்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதின் மீதே இருக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கிற அடி கேரளாவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக