வெள்ளி, 16 டிசம்பர், 2011

பள்ளி குழந்தைகளுக்கு புதிய ‘யு ட்யூப் ஸ்கூல்’

புதுடெல்லி : முற்றிலும் கல்வி தொடர்பான வீடியோக்களை மட்டுமே பார்க்கக்கூடிய ‘யு ட்யூப் ஸ்கூல்’ என்ற புதிய இணைய தளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை உடனுக்குடன் வீடியோவாக யாரும் இடம்பெறச் செய்யக்கூடிய வகையில் யு ட்யூப் இணைய தளம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற வீடியோ இணைய தளமான அதில் எல்லா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் பள்ளி கல்வியும் அடங்கும்.
ஆனால், நம்நாட்டில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற பெயரில் இணைய தள வழி கல்வி அளிக்கும் பள்ளிகள் இருந்தாலும், யு ட்யூப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு தடை உள்ளது. ஏனெனில், அதில் குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத விஷயங்களும் இடம்பெறுகிறது. எனவே, நல்ல வீடியோக்க ளை குழந்தைகள் வீட்டு கம்ப்யூட்டரிலோ, ஐபேட் போன்ற கருவிகளிலோ தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதை தவிர்க்கும் வகையில், யு ட்யூப் ஸ்கூல் என்ற பெயரில் இணைய தளத்தை கூகுள் இப்போது தொடங்கியுள்ளது.
 அதில் பள்ளிக் கல்வி தவிர மற்ற வீடியோக்களை காண முடியாது. இதனால், உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பள்ளி கல்வி தொடர்பான வீடியோக்களை காட்டி பள்ளிகளின் ஸ்மார்ட் கிளாசில் ஆசிரியர்கள் சொல்லித் தர முடியும். ஐபேட் போன்ற தனிப்பட்ட கருவிகளிலும் மாணவர்கள் பயன் பெற முடியும். இதேபோல, யு ட்யூப் எஜுகேஷன் என்ற இணைய தளத்தில் இருந்து வீடியோக்களை ஆசிரியர்கள் தேர்வு செய்து மாணவர்களுக்கு அளிக்க முடியும். அதில் உள்ள 4.5 லட்சம் கல்வி வீடியோக்கள் யு ட்யூப் ஸ்கூல் இணைய தளத்துக்கு மாற்றப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக