ஞாயிறு, 4 டிசம்பர், 2011

திருமணம் பிடிக்கவில்லை மணமேடையில் சாமி ஆடிய மணமகள்

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
பண்ருட்டி அருகே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறி மணமேடையில் திடீரென ஆடினார் மணப்பெண். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி சோகத்துடன் திரும்பினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (25), பிளம்பர். இவருக்கும் அழகப்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உஷாராணி (25)க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகையும் அடிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற இருந்தது. அதற்கான பெண் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான உறவினர்கள் திருமணத் துக்காக வந்திருந்தனர்.
பெண் அழைப்பு சடங்குகளை போட்டோ கிராபர்கள் போட்டோ, வீடியோவில் படம் பிடித்து கொண்டிருந்தனர். திடீரென மணமகள் உஷாராணி தனது மணக்கோலத்தை கலைத்துவிட்டு சாமி ஆடுவது போல் ஆக்ரோஷமாக தலைவிரித்து ஆடினார்.

அப்போது இதனை படம்பிடிக்க போட்டோ கிராபர் வரும் போது மணமகள் உஷாராணி அவரிடம் சத்தம் போட்டு தடுத்தார்.

2 குடும்பத்தாரும் செய்வது தெரியாமல் தவித்தனர். மணமகனும் காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை தனியாக அழைத்து சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.
இதற்கு உஷாராணி தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம் என கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. விடியற்காலை 6 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் எப்படியும் திருமணத்தை நடத்தி விடலாம் என உறவினர்கள் நினைத்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திருமணம் நின்றது. திருமணத்துக்கு எடுத்து வந்த அனைத்து பொருட்களையும் வண்டியில் எடுத்துக்கொண்டு இரு குடும்பத்தாரும் சோகத்தோடு வீட்டுக்கு சென்றார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக