செவ்வாய், 6 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணை: மத்தியப் படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. தமிழர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர். தமிழக வாகனங்களும் தாக்கப்படுகின்றன. தமிழக தொழிலாளர்களையும் நேற்று சிறைப்பிடித்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையைக் குறி வைத்து தற்போது ஆயுதங்களுடன் வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கை விடுத்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதற்கு பிரதமரிடமிருந்து இதுவரை பதிலே வரவில்லை.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அதில், முல்லைப்பெரியாறு அணையை சேதப்படுத்தி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக, 200 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்து இருப்பதால், அணையின் பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் படையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே, தொடர் நில நடுக்கங்கள் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக வதந்தியை பரப்பி, கேரளாவில் பீதி ஏற்படுத்தி வருவதை தடுத்து நிறுத்தக்கோரி, கடந்த 1-ந்தேதி அன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருப்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக