புதன், 21 டிசம்பர், 2011

மத்திய அரசை ஹசாரே ஆட்டிப் படைக்க முடியாது- சோனியா


Sonia Gandhi


டெல்லி: மத்திய அரசை அன்னா ஹசாரே போன்ற தனி நபர்கள் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை குறை கூறி வருகிறார் ஹசாரே. இப்போது மீண்டும் ண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் என்று களமிறங்கவுள்ளார்.
இதையடுத்து இனியும் இவரிடம் பணிவதில்லை என்றும், நேருக்கு நேர் மோதலை ஆரம்பிப்பது என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவுக்கு வந்துள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் முதன் முறையாக தனது கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தை சோனியா இன்று கூட்டினார். அதில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்தும், லோக்பால் மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, லோக்பால் மசோதா குறித்து எம்பிக்களுக்கு விளக்கம் அளித்த சோனியா, அமைச்சரவை ஒப்புதல் அளித்த லோக்பால் மசோதாவை ஹசாரே ஏற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசை எந்த தனி நபரும் ஆட்டிப் படைக்க முயல்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

அவர் கூறுகையில், லோக்பால் மசோதா விவகாரத்தில் மட்டுமல்ல பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர். இந்த இரு விஷயங்களுக்காகவும் எந்த மோதலுக்கும் காங்கிரஸ் தயார்.

லோக்பால் விஷயத்தில் எதிர்க் கட்சிகளிடம் ஏதாவது யோசனை இருந்தால் அதைச் சொல்லலாம், அதைவிட்டுவிட்டு அரசியல் செய்ய நினைத்தால், அதை அனுமதிக்க மாட்டோம்.

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக அதை இன்னும் கூட ஜீரணிக்க முடியாமல் தான், நாடாளுமன்றத்தை முடக்குகிறது. இதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதற்காக லோக்பால் மசோதாவையும் கொண்டு வந்தது காங்கிரஸ் தான்.

நாம் நமது தேர்தல் உறுதிமொழிகளில் சொன்னபடி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமலாக்கினோம், இதனால் தான் கடந்த தேர்தலில் வென்றோம். அதே போல, உணவுக்கு உத்தரவாதம் தருவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அந்த சட்டத்தையும் நிறைவேற்றுவோம்.

இதன்மூலம் ஏழை மக்களின் பசியைப் போக்கிக் காட்டுவோம். லோக்பால் மோதலிலேயே நமது நேரத்தை வீணடிக்காமல், பெண்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நாம் சொன்ன உறுதிமொழிகளை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடுவோம். இதற்காக எந்த வகையான மோதலுக்கும் காங்கிரஸ் தயார் என்றார்.

ஆர்எஸ்எஸ்சுடன் ஹசாரேவுக்கு தொடர்பு:

இந் நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி நிருபர்களிடம் பேசுகையில், மதவாத அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்றவற்றுடன் உள்ள தொடர்பை முதலில் அன்னா ஹசாரே துண்டித்துக் கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தியின் பெயரை பயன்படுத்தும் ஹசாரே, முதலில் காந்தியை சுட்டுக் கொன்ற அமைப்புடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக