சனி, 24 டிசம்பர், 2011

புயலால் தனுஷ்கோடி அழிந்த தினம் புகழின் உச்சியில் இருந்த யாத்திரை தலம்

ராமேஸ்வரம்: நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த தீர்த்த யாத்திரை தலமான தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23ல் நள்ளிரவில் வீசிய புயல் இந்நகரை புரட்டி போட்டது. நினைவு சின்னமாகவே மாறிவிட்ட இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா நகராக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு முனையில் 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இலங்கை சென்று சீதையை மீட்டு திரும்பிய ராமர் அம்பை எய்து இவ்விடத்தை அடையாளம் காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.
2000 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த புண்ணிய தலமாகவும், கடந்த நூற்றாண்டில் சிறந்ததொரு துறைமுக நகராகவும் விளங்கிய தனுஷ்கோடி ஒரே இரவில் அழிந்து போனது. கி.பி. 17 ம் நூற்றாண்டில் இருந்து 19 ம் நூற்றாண்டின் இறுதிவரை, பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து இலங்கை, வங்காளம் மற்றும் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு அதிகளவில் கப்பல் போக்குவரத்து நடந்து வந்த நிலையில் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனுஷ்கோடிக்கும் - தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்தை துவக்குவதற்கு ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். 1.3.1914 ல் கப்பல்போக்குவரத்தும் துவக்கப்பட்டது.

இந்திய ரயில்வே கம்பெனிக்கு சொந்தமான "இர்வின்' " கோஷின்' என்ற இரண்டு நீராவி கப்பல்கள் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பயணத்தை துவக்கியது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குறுகிய நேரத்தில் செல்லும் கடல் வழி பயணமாக அமைந்ததால் சென்னை, தூத்துக்குடிக்கு அடுத்து சிறந்த துறைமுக நகராக தனுஷ்கோடி உருவானது. இதனால் தீர்த்த யாத்திரைக்கு பெயர்போன தனுஷ்கோடி ஆங்கிலேயர்களின் முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் விளங்கியது. இங்கிருந்து பருத்தி துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் போன்றவை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1964 டிச., 23 ம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் இரவு 12.30 மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் தனுஷ்கோடியை தாக்கியது. பாம்பனில் இருந்து தனுஷ்கோடி சென்ற ரயில் கடலில் கவிழ்ந்தது. தூக்கத்தில் இருந்த பெங்களுரு கல்லூரி மாணவர்கள் உட்பட பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி பலியாகினர். புகழின் உச்சியில் இருந்த தனுஷ்கோடியை புரட்டி போட்டது புயல். மேற்கூரை இல்லாத ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்கள், போஸ்ட் ஆபிஸ், இடிந்த கோயில்கள், சர்ச், மருத்துவமனை, பள்ளிக்கட்டங்கள் போன்றவைகள் புயலின் எச்சங்களாய் நின்று இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புயலின் சோகத்தை நினைவுபடுத்தி கொண்டிருக்கின்றன.

தற்போது எவ்வித வசதியும் இல்லையென்றாலும், சில மீனவ குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. தனுஷ்கோடியை புனரமைத்து புதிய நகரை உருவாக்க வேண்டும் என்பது இங்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளின் கனவாகும். உயிரோட்டமுள்ள தனுஷ்கோடியில் என்னதான் செய்யலாம்... தனுஷ்கோடியில் கடல் விழுங்கிய பகுதிகளை மீட்டெடுத்து நீர்தேங்கும் பள்ளங்களை சமன்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் கடல் பகுதியில் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சீனர்களின் ஆதிக்கம் உருவாகிவரும் நிலையில் தனுஷ்கோடியில் நிரந்தரமான பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தலாம். சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தினால் மிகச்சிறந்த கடற்கரை நகராகவும் விளங்கும். மீண்டும் ரயில் போக்குவரத்து, ரோடு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கடல் அலைகள் இந்த சிறிய நிலப்பரப்பை விழுங்கி விடாது என்று 2,000 ஆண்டுகள் பழமையான "ரிக்' வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தனுஷ்கோடியை கடல் விழுங்கிவிடவில்லை. தீர்த்த யாத்திரைக்கு பெயர் பெற்ற தனுஷ்கோடியை சுற்றுலா நகராக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக