புதன், 14 டிசம்பர், 2011

பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி அமெரிக்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா பாகிஸ்தானின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவியில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமையைப் பார்த்தால், இது வெறும் ஒரு ஆரம்பம் போலவே தோன்றுகின்றது. மேலும் மேலும் பாகிஸ்தானுக்கான நிதியுதவிகள் வெட்டப்படுவதற்கு சான்ஸ் அதிகமாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு வருடாவருடம் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் நிதியுதவியில் இந்த 700 மில்லியன் டாலர் ஒரு சிறு பகுதிதான். அமெரிக்கா வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியில் மிகப்பெரிய பங்கு செல்வதே பாகிஸ்தானுக்குதான். ஒருவகையில் சொன்னால், பில்லியன் கணக்கில் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் நிதியுதவியிலேயே பாகிஸ்தான் என்ற நாடே இயங்குகிறது.
சமீபகாலமாக பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. ராணுவ ரீதியில் பாகிஸ்தான் அமெரிக்காவை முறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. இரு நாட்டு உளவுத்துறைகளுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம். தவிர, பாகிஸ்தானிய மக்கள்வேறு அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை நடாத்தத் தொடங்கியுள்ளனர்.
இவை எல்லாம் ஒன்று சேர்ந்தே, அமெரிக்க நிதியுதவிகளுக்கு வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க நிதியுதவிகள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும்போது, சும்மா வழங்கப்படுவதில்லை.
வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில், வெவ்வேறு அமெரிக்க பட்ஜெட்களில் இருந்து வழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தே, வருடத்துக்கு மொத்தம் எத்தனை மில்லியன், அல்லது பில்லியன் டாலர் என்று வெளியே கூறப்படுகின்றது. (இந்தியாவுக்கு மில்லியன்கள், பாகிஸ்தானுக்கு பில்லியன்கள்)
தற்போது நிறுத்தப்பட்டுள்ள 700 மில்லியன் டாலர், அமெரிக்க செனட்சபையின் அப்ரூவலுடன், வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கப்பட்டுவந்த நிதி. இதற்கான நிபந்தனைகளில் ஒன்று, நாட்டுக்குள் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கான சப்ளை-லைனை துண்டிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை என்று கூறியே நிதியை நிறுத்தி வைத்துள்ளது செனட்சபை.
ஐ.இ.டி. (Improvised Explosive Devices -IED) வெடிப்பொருட்கள் பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்காக தயாராவதை அரசு நிறுத்த முயற்சி செய்வதாக தெரியவில்லை என்று காரணம் கூறியுள்ளது செனட்சபை. இந்த ஐ.இ.டி. வெடிப்பொருட்களை வைத்தே லோக்கலில் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடிகளை தலிபான்களும் மற்றைய தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் தயாரிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினர் மீது வீசப்படும் குண்டுகளில் உள்ள ஐ.இ.டி. வெடிப்பொருள்கள், பாகிஸ்தானிலேயே தயாரிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக