வியாழன், 29 டிசம்பர், 2011

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸ் கட்டுப்பாடு விடிய விடிய கூடாது.

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டலுக்கு வருபவர்கள் நள்ளிரவு ஒரு மணிக்குள் வெளியேறி விட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, ஓட்டல்களுக்கும் பொதுமக்களுக்கும் சென்னைக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
விடிய விடிய கூடாது
சென்னையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக் கூடாது. ஓட்டல்களில் இருந்து நள்ளிரவு 1 மணிக்குள் அனைவரையும் வெளியேற்றிவிட வேண்டும். ஓட்டல்களுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் இளைஞர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
டிரைவிங் லைசென்ஸ் ரத்து
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மது அருந்தியவர்கள் டிரைவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். மீறினால் கைது செய்யப்படுவர். 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 31 இரவு முதல் விடிய விடிய சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக