வெள்ளி, 23 டிசம்பர், 2011

சிபிஐ சாட்சி ஆச்சாரியை தோண்டித் துருவிய கனிமொழியின் வக்கீல் ஜேத்மலானி!

Ram Jethmalani
டெல்லி: டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் சாட்சியம் அளித்த சாட்சியான ஆசிர்வாதம் ஆச்சாரியை கிட்டத்தட்ட 2 மணி நேரம் கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி தனது கேள்விக்கணைகளால் தோண்டித் துருவி விட்டார்.
ஜேத்மலானியின் கேள்விகளால் ஆச்சாரி தடுமாறிப் போய் விட்டார். ஆச்சாரி வேறு யாருமல்ல, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆவார். கலைஞர் டிவியின் மூளையே கனிமொழிதான் என்பது ஆசிர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலமாகும். இந்தக் கருத்தை நேற்று நடந்த குறுக்கு விசாரணையின்போதும் அவர் ஆணித்தரமாக எடுத்து வைத்தார். அப்போது ஜேத்மலானி அவரிடம் பல்வேறு கேள்விகளாக சரமாரியாக கேட்டு திணறடித்தார்.

இந்த வழக்கில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞரான ராம்ஜேத்மலானி ஆஜராகியுள்ளார். நேற்று அவர் ஆச்சாரியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது ஒரு கட்டத்தில் உங்கள் மீது சிபிஐ, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளதா என்று கேட்டார்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட ஆச்சாரி பின்னர் சமாளித்துக் கொண்டு என் மீது அப்படி எந்தக் குற்றச்சாட்டையும் சிபிஐ சுமத்தவில்லை என்றார். பின்னர் மீண்டும் அவரே தொடர்ந்து, அப்படியே குற்றம் சாட்டியிருந்தாலும், அதிலிருந்து தப்பிக்க நான் சிபிஐ சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும், பேச வேண்டும் என்ற தேவையில்லை என்று கூறினார்.

சற்றும் தளராத ஜேத்மலானி அடுத்த கொக்கியைப் போட்டார். உங்கள் மீது ரயில்வே அமைச்சகம் ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆச்சாரி, எனக்குத் தெரிந்தவரை அப்படி எந்த விசாரணையும் நிலுவையில் இருப்பதாக தெரியவில்லை என்றார்.

இதே போல நேற்று முன்தினமும் ஆச்சாரியிடம் சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டார் ஜேத்மலானி. அப்போது அவர் கேட்கையில், 2007ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு என்ன நடந்தது என்று கேட்டார்.

அன்று நடந்தது குறித்து முன்பு ஆச்சாரி அளித்திருந்த வாக்குமூலத்தில், அன்று இரவு என்னை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வருமாறு அழைத்தார்). அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நானும் சென்றேன். அங்கு பிரதமருக்கு அனுப்ப வேண்டிய ஒரு பதில் கடிதம் குறித்து என்னிடம் ராசா தெரிவித்தார் என்று கூறியிருந்தார். இதைத்தான் ஜேத்மலானி தனது குறுக்கு விசாரணையின்போது கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆச்சாரி, இரவு 8 மணிக்கு மேல் அமைச்சர் ஒருவர் உதவியாளரை அழைப்பது என்பது வழக்கத்திற்கு விரோதமானது. ஆனால் பிரதமருக்குப் பதில் அனுப்ப வேண்டும் என்று ராசா கூறினார். இதுபோல அவ்வப்போது அவர் கூப்பிட்டார் என்றார்.

பிரதமருக்கு அன்று அனுப்பிய கடிதத்தில் என்ன இருந்தது என்று ஜேத்மலானி கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆச்சாரி, நவம்பர் 2ம் தேதி பகலில் ஒரு கடிதத்தை ராசா, பிரதமருக்கு அனுப்பினார். இருப்பினும் அதுகுறித்து இரவு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிடவில்லை என்றார்.

அப்போது ஆச்சாரியிடம் ராசா, பிரதமருக்கு எழுதிய கடிதம் காட்டப்பட்டது. அதைக் காட்டி இது நினைவிருக்கிறதா என்று ஜேத்மலானி கேட்டார். அதைப் பார்த்த ஆச்சாரி, இது இரவில் அனுப்பப்பட்ட கடிதம். பகலில் ராசா அனுப்பிய கடிதம் ஒருவேளை போயிருக்காது என்று நினைத்து இந்தக் கடிதத்தை ராசா இரவில் அனுப்பினார் என்றார்.

ஜேத்மலானி தனது விசாரணையின்போது கலைஞர் டிவி குறித்து மிகச் சில கேள்விகளை மட்டுமே கேட்டார். மேலும், கலைஞர் டிவிக்கும், கனிமொழிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

ராசா தன்னிடம் கூறியதாக ஆச்சாரி தொடர்ந்து கூறுகையில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினை காரணமாக சன் டிவிக்குப் பதிலாக கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ராசா தெரிவித்தார். திமுகவின் பிரசார ஊடகம் கலைஞர் டிவி என்று ராசா கூறியதால் நானும் தொடர்ந்து கலைஞர் டிவியைப் பார்க்க ஆரம்பித்தேன்.

கலைஞர் டிவியில் எத்தனை இயக்குநர்கள் இருக்கிறார்கள், யாரெல்லாம் இயக்குநர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்றார் ஆச்சாரி. ஆனால் இதற்கு முன்பு அவர் கொடுத்த கோர்ட் வாக்குமூலத்தில் சரத்குமார் தான் கலைஞர் டிவிக்காக அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராசாவின் கேம்ப் அலுவலகத்திற்கு அடிக்கடி கனிமொழி வருவார். ராசாவுக்கு அவர் மிகவும் நெருக்கமானவராக இருந்தார். கட்சிப் பணிகள் தொடர்பாக அடிக்கடி ராசாவுடன் வந்து விவாதிப்பார். கலைஞர் டிவியின் முக்கிய மூளைகளில் அவரும் ஒருவராக இருந்தார் என்றும் கூறியிருந்தார் ஆச்சாரி.

இதுகுறித்து ஜேத்மலானி நேற்று ஆச்சாரியிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டார். கனிமொழிதான் முக்கிய மூளை என்று நீங்கள் கருதினால் ஏன் இந்த விவகாரம் தொடர்பாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திய விசாரணையின்போதும், பின்னர் சிவராஜ் பாட்டீல் கமிட்டி நடத்திய விசாரணையின்போதும் அதைச் சொல்லவில்லை என்று ஜேத்மலானி கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ஆச்சாரி, அப்போது என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை. அழைக்காமல் நானாக எப்படிப் போவது என்று போகாமல் இருந்து விட்டேன் என்றார்.

விடாத ஜெத்மலானி, அப்படியானால் சிபிஐயிடம் மட்டும் ஏன் வாக்குமூலம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆச்சாரி, சிபிஐயிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். அதனால்தான் போனேன் என்றார்.

இதைக் கேட்டு ஜெத்மலானி ஆச்சாரியைப் பார்த்து சிரித்தார். விசாரணையின்போது தனது பதட்டத்தை மறைக்க கடுமையாக போராடினார் ஆச்சாரி. இதற்காக ஜேத்மலானி கேட்ட பல கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்காமல், அவரை டென்ஷனாக்கும் வகையில், மறுபடியும் சொல்லுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு ஜேத்மலானி டென்ஷனாகி விட்டார்.

நேற்றைய விசாரணையின்போது நீரா ராடியாவுக்கும், ஆச்சாரிக்கும் இடையிலான 2008ம் ஆண்டு, செப்டம்பர் 18ம் தேதி நடந்த தொலைபேசி உரையாடல் குறித்தும் குறுக்கு விசாரணை செய்தார் ஜேத்மலானி. அந்த உரையாடலின்போது ஓ.கே., அவரிடம் (ராசாவிடம்) நான் கலைஞர் டிவி பிரச்சினையை சரி செய்து விட்டேன் என்று சொல்லுங்கள் எனக் கூறியிருந்தார் ராடியா.

அதுகுறித்து ஜேத்மலானி கேட்டபோது, ராடியா குறிப்பிட்ட அந்தப் பிரச்சினை என்ன என்பது எனக்கு சரியாக தெரியாது. சிபிஐ என்னைக் கூப்பிட்டு விசாரித்தபோதுதான் அதுகுறித்துத் தெரிய வந்தது என்றார்.

விசாரணையின் முடிவில் ஜேத்மலானி இன்னொரு கேள்வியையும் கேட்டார். அது ஆச்சாரி வைத்திருந்த சிஎல்ஆர் மாடல் செல்போனின் விலை என்ன என்பது. அதுகுறித்து ஆச்சாரி பதிலளிக்கையில், எனது மனைவிக்கு லண்டனில் உள்ள அவரது சகோதரர் இந்த போனைப் பரிசாக கொடுத்தார். அதன் விலை ரூ. 4,914 என்றார். ஆனால் ஜேத்மலானி குறுக்கிட்டு இதன் விலை ரூ. 2 முதல் 4.5 லட்சம் என்றார்.

ஜேத்மலானி விசாரணையை முடித்தபோது ஆச்சாரி கிட்டத்தட்ட சோர்ந்து போய்க் காணப்பட்டார்.

இன்று ராசாவின் குறுக்கு விசாரணை

ஜேத்மலானியின் குறுக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஆச்சாரியை ராசா குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்.

இன்றுதான் முதல் முறையாக குறுக்கு விசாரணையை தொடங்குகிறார் ராசா என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக