புதன், 7 டிசம்பர், 2011

கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்கலாம்- தமிழகத்திற்கு கேரளம் அழைப்பு


Oommen chandy
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கோர்ட்டுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசித் தீர்க்கலாம் என்று தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேசமயம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அதில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோர்ட்டுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்க்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்குக் கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

கேரள மக்களின் பாதுகாப்பு, தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உடனடியாக 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துத் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

வரும் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் டெல்லியில் மத்திய அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது சுமூக முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சாண்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக