புதன், 7 டிசம்பர், 2011

சென்னை, தஞ்சை, கோவை, குடந்தையில் கேரளக் கடைகள் தாக்கப்பட்டன- ஆலுக்காஸும்


சென்னை: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரளாக்காரர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தாக்கி முற்றுகைப் போராட்டம் நடந்தது.
குமுளியில் தமிழர்கள் மீது கேரளத்தினர் சிலர் வெறித் தாக்குதலில் ஈடுபட்டு கடைகளை அடித்து நொறுக்கினர். பெண்களையும் மானபங்கப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. திராட்சைத் தோட்டத்திற்கும் தீவைக்கப்பட்டது.தஞ்சாவூரில் டீக்கடைகள் சூறை
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கி சூறையாடினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கி சூறையாடப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை மூடி விட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கேரளாவில் தமிழர்களையும், அவர்களது கடைகளையும் தாக்கியதற்கு இது பதிலடி என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில்

இதேபோல சென்னையிலும் தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கேரள வியாபாரிக்குச் சொந்தமான ஸ்வீட் ஸ்டாலை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து தாக்கி அங்கிருந்த ஷோ கேஸ்களை அடித்து உடைத்தது. இதில் கண்ணாடி குத்தி கடை ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடைக்குப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

ஜாய் ஆலுக்காஸ் கடை முற்றுகை

இதேபோல தி.நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கோவையில் தடியடி

கோவையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையையும் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டனர். கடை மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பேக்கரி உடைப்பு

இதேபோல கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கே.ஆர். பேக்கரி என்ற கடை உள்ளது. இது கேரளாக்காரர்கள் நடத்தும் கடையாகும். இங்கு மாணவர் கழகத்தினர், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கோடம்பாக்கத்தில் மலபார் டீக்கடை நாசம்

அதேபோல சென்னை கோடம்பாக்கத்தில் மலபார் டீக்கடை என்ற கேரளாக்காரர்களின் டீக்கடையை சிலர் அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.

இதேபோல தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு குளிர்பானக் கடையை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்து சூறையாடியது. இதனால் கடையே சின்னாபின்னமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக