சனி, 24 டிசம்பர், 2011

கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!

1990களில் வந்த பந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பணக்கார, பாசமுள்ள, கண்டிப்பான, முன்னாள் ராணுவ தளபதியாக வருவார். செல்லமாக வளர்த்த மகள் தனது விருப்பத்துக்கு மாறாக காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து, அவள் நினைவு கூட மிஞ்சாத படி, வீட்டில் தொடர்புடைய எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து விடுவார். ஒரு கட்டத்தில் மகளின் கணவன் விபத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொல்லி தனது வெறுப்பை வெளிப்படுத்துவார்.
அதற்கு முன்பும், பின்பும் பல தமிழ் படங்களில் பணக்கார, ஆதிக்க சாதி தகப்பனார்கள், தமது அந்தஸ்துக்கு பங்கமாக, சாதிப் பெருமைக்கு இழுக்காக, மதத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்ட மகள்களை பல்வேறு விதமாக மனரீதியாகவும், நடைமுறையிலும், உடல் ரீதியாகவும் அழித்து விடுவதைப் பார்த்திருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காதல் திரைப்படத்தில் மெக்கானிக் இளைஞனுடன் ஓடிப் போய் விட்ட மகளை திரும்ப அழைத்து வரச் செய்து வன்முறை தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டுவார் சாராய வியாபாரி தந்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் இத்தகைய கௌரவக் கொலைகளைப் பற்றிய அதிகார பூர்வமான அரசாங்க புள்ளிவிவரங்கள் இல்லா விட்டாலும், இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி ஹரியானா, பஞ்சாப், உபி மாநிலங்கள் ஆண்டுக்கு 900 கௌரவக் கொலைகளுக்கும் நாட்டின் பிற பகுதிகள் சுமார் 100 முதல் 300 கொலைகளுக்கும் களமாக விளங்குகின்றன.
1. உத்தர் பிரதேசத்தின் பர்சானா போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட மேஹ்ரானா கிராமத்தின் ஜாட் சாதியைச் சேர்ந்த ரோஷ்னி என்ற 14 வயது பெண் ஜாதவ் சாதியைச் சேர்ந்த விஜேந்திர ஜாதவ் மற்றும் ராம் கிஷ்ன் உடன் 1991 மார்ச் 21ஆம் தேதி ஓடிப் போனார். மார்ச் 24ம் தேதி ரோஷினி ஊருக்குத் திரும்பிய பிறகு பஞ்சாயத்து விசாரணைக்கு அமர்ந்தது.
பஞ்சாயத்தில் ரோஷ்னி விஜேந்திரவுடன் வாழ விருப்பம் தெரிவித்ததை ஏற்காத பஞ்சாயத்து, அந்த இளைஞர்கள் மாற்று சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் மூன்று பேரையும் கொல்வதற்கு உத்தரவிட்டது. கிராம மக்கள் மூன்று பேரையும் அடித்து ஒரு மரத்தில் தூக்கில் போட்டார்கள். இதை தடுக்க முயன்ற போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் படுகாயமடைந்தார்கள். தடயங்களை அழித்து விடுவதற்காக மூன்று பேரின் உடல்களும் எரிக்கப்பட்டன.
போலீஸ் விசாரணை குழு, கொலைக்கு உத்தரவிட்ட தலைவர்களையும் சேர்த்து 53 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 13 பேர் இயற்கையாக இறந்து போனார்கள்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரா நீதிமன்றம் ஒன்று அந்த தம்பதியையும் அவர்களது நண்பரையும் கொலை செய்த குற்றத்துக்காக 8 பேருக்கு மரண தண்டனையும், இன்னும் 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்ட இன்னும் மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை சிறுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. அவர்கள் குற்றம் நடந்த சமயத்தில் 18 வயதுக்கும் குறைவானவர்கள். தண்டனை வழங்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் 60 வயதைத் தாண்டியவர்கள்.
2. 2010-ல் விமலா என்ற பெண் நியூ ்பிரெண்ட்ஸ் காலனியில் அவரது தந்தை மற்றும் கட்டிட காவலரால் கொல்லப்பட்டார். ஜலந்தரைச் சேர்ந்த ஹரியுடன் விமலா தொடர்பு வைத்திருந்ததால் இந்தக் கொலையை செய்திருக்கிறார்கள்.
3. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேனகா என்பவரை அவரது விருப்பத்துக்கு மாறாக காளிதாஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு மேனகா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் சிவகுமாருடன் வாழப் போய் விட்டார். மானாமதுரை நகரத்துக்கு அருகில் வாழ்ந்த அவர்களை திருப்பி வரும்படி அன்பொழுகப் பேசி சிவகங்கைக்கு வரவைத்த பெற்றோர்களும் உறவினர்களும் சிவகுமாரை கொலை செய்தனர். அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேனகா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேனகா, சிவகுமார் இரண்டு பேருமே அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அது கௌரவக் கொலை இல்லை என்று காவல்துறை வாதிட்டது.
4. மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இளம் தம்பதியினர் தமது குடும்பத்தினரின் தாக்குதலுக்கு அஞ்சி காவல்துறை பாதுகாப்புடன் திருமணம் செய்து கொண்டனர். போலீஸ் கவனம் இருந்தும், அப்படி சாதிக்கு வெளியே திருமணம் செய்யத் துணிந்ததற்காக இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இது நடந்தது நாட்டின் தலைநகரமான புதுதில்லியில்.
கௌரவக் கொலை என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் அல்லது கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அல்லது ஒரே உட்பிரிவுக்குள் (கோத்ரம்)  திருமணம் செய்து கொள்ளும் அல்லது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வழங்கப்படும் மரண தண்டனை என்று வரையறுக்கப்படுகிறது.
பாரத ஞானமரபின் பாரம்பரிய பெருமைகளில் ஒன்றான இந்த கௌரவக் கொலைகள், 1947 இந்திய பிரிவினையின் போது பஞ்சாபில் பெருமளவில் நடந்தன. இந்திய பெண்கள் பாகிஸ்தானிய ஆண்களையும் பாகிஸ்தானிய பெண்கள் இந்திய ஆண்களையும் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அப்படி கட்டாய மணமுடிக்கப்பட்ட பெண்களை வேட்டையாடி ‘வீட்டுக்கு’ அழைத்து வந்து குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவர்களைக் கொல்வது பல இடங்களில் நடந்தது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 கௌரவக் கொலைகள் சராசரியாக அந்த காலகட்டத்தின் நடந்தன என்று சொல்லப்படுகிறது.
இப்போதெல்லாம் பெண்ணைக் கொல்வதோடு அவளை திருமணம் செய்யத் துணிந்த மருமகனையும் கொன்று போடுவது வழக்கமாக வளர்ந்திருக்கிறது.
இந்த கௌரவக் கொலைகள் கிராமங்களில் மட்டும்தான் நடக்கின்றன என்று நினைத்து விடக் கூடாது. பெரும்பான்மை கொலைகள் கிராமங்களில் நடந்தாலும், மேலே பார்த்த உதாரணங்களைப் போல பாரத தலைநகர் தில்லியிலும், முன்னேறிய மாநிலம் என்று கொண்டாடப்படும் தமிழ்நாட்டிலும் கூட இத்தகைய கொலைகள் அவ்வப்போது நடக்கின்றன. இந்தக் கொலைகள் குறிப்பிட்ட மதத்தில் மட்டும் நடக்கின்றன என்றும் சொல்ல முடியாது. முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களிடையேயும் இந்த கொடூர பாரம்பரியம் இருக்கிறது.
இதற்கு ஆதரவாக, நவீன இந்தியாவின் முன்னேறிய பிரிவினர், இணையத்தில் விவாதம் செய்யும் அளவுக்கு வளர்ந்தவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். மாதிரிகள் சில:
‘தனது மாணவன் பணிவாக, புத்திசாலித்தனமாக, திறமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசிரியர் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களோ, குழந்தைகளோ தவறான வழியில் போகும் போது, திரும்பி வர முடியாத வழியில் தவறிப் போகும் போது, கோபம் கட்டுமீறி போகிறது. பெற்றோர்களின் மனம் என்ற நீதிமன்றம் தவறிப் போனவர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதை நிறைவேற்றுவதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராகி விடுகிறார்கள்’
‘ஒரு பயங்கரவாதியையோ, கொலையாளியையோ, தேசத் துரோகியையோ, சமூக விரோதியையோ ஒரு பெண் தேர்ந்தெடுத்தால் அதன் விளைவுகளை அவள் எப்படி எதிர் கொள்ள முடியும். கௌரவக் கொலைகள் சட்டப்படி தவறாயிருந்தாலும் தர்மப்படி சரிதான்’
‘தவறு செய்யும் குழந்தைகளை கொல்வது சமூகக் குற்றம் என்றால் அப்படி தவறான வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்ந்தெடுப்பதும் சமூகக் குற்றம்தான். பெற்றோர்களுக்கு பணிந்து நடப்பதுதான் எதிர்கால பாதுகாப்புக்கு நல்லது.’
‘பெற்றோர்களுக்கு எதிராக நடந்து கொண்டு, திருமணம் போன்ற சென்சிடிவான விஷயத்தில் பெற்றோரின் விருப்பத்துக்கு செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்த பெற்றோராலும் அந்த நேரத்தில் தமது கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாது. தமது பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை செய்வதுதான் ஒரே வழி என்று அவர்கள் நினைக்கலாம். அவர்களின் கௌரவத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற நாம் வேறு என்ன வழி காட்ட முடியும்?’
‘கௌரவக்கொலைகளை தடுக்கிறோம் என்ற போர்வையில் சமூகத்தில் ஒழுக்கமின்மையை ஊக்குவிக்கக் கூடாது. அனுபவமில்லாத குழந்தைகள் தமது  மனம் போன போக்கில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தில் போய் மாட்டுவதை தடுக்க வழிகள் காணப்பட வேண்டும். பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர்கள் உடன் இருந்தால் மட்டும்தான் கோவில் பூசாரிகள் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் சட்டவிரோதமானவையாகவும், திருட்டுத் திருமணமாகவும் கருதப்பட வேண்டும்.’
‘பாரம்பரியம், குடும்ப கௌரவம் இவற்றைப் புறக்கணித்து செய்யப்படும் திருமணங்கள், இரண்டு தரப்பு குடும்பத்திலும் உணர்ச்சிகளை உசுப்பி விடுகின்றன. அவர்கள் கௌரவக் கொலைகள் செய்யவும் துணிகிறார்கள். பழக்க வழக்கங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க முடியாவிட்டாலும், அவற்றுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமை’
‘ஒரு மனைவி அமைதியாக இருந்தால் எந்த கணவனும் அவளை அடிக்கப் போவதில்லை. படிப்பறிவின்மையாலும், பேராசையாலும் பெண்கள் ஒத்துழைத்து நடக்காத போது, கணவன் மனைவியை அடிக்கிறார். இப்படிப்பட்ட நிலைமைகள் அத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றன”
“சவுதி அரேபியாவில் தாலிபான்கள் வேற்று மனிதனுடன் போனதற்காக ஒரு பெண்ணை பிடித்து அடித்துக் கீழே தள்ளுகிறார்கள். அதன் பிறகு கல்லெறியப்பட்டு அவள் கொல்லப்படுகிறாள். அது போல நமது நாட்டில் நடக்கிறதா? நாம் அவர்களை விட நாகரீகம் அடைந்தவர்கள். இத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்”
“பெண் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவளாக இருக்கும் போது இப்படி நடக்கிறது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவரை பெண் திருமணம் செய்யும் போது அவளது குடும்பம் தாழ்ந்த சாதி குடும்பத்துடன் உறவாட வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர்கள் தமது சாதியினரிடம் எப்படி புழங்க முடியும்? அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் யார் செய்வார்கள்? குடும்ப வட்டங்களில் அவர்களின் அந்தஸ்து தாழ்ந்து விடுகிறது, அது வரை இருந்த மதிப்பை இழக்க நேரிடுகிறது. அந்த மதிப்பை மீண்டும் ஈட்டுவதற்கு என்ன வழி? இந்த தாழ்ச்சிக்கு காரணமான களையைப் பிடுங்கி எறிவதுதான் ஒரே வழி. அதனால் நான் கௌரவக் கொலைகளை எதிர்க்க மாட்டேன். இது பெற்றோர்களின் இயல்பான எதிர்வினைதான்”
“நம்முடைய சட்ட அமைப்பில் பாரம்பரிய பழக்கங்களும் சட்டமாக மதிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. யாராவது அவற்றை மீறும் போது அவர் அதற்காக தண்டிக்கப்படுவது நியாயம்தான். நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் ஏன் நம்மை கொல்ல வேண்டும்? என்பது முக்கியமான கேள்வி? தற்கால தலைமுறை அவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்? அதனால் கௌரவக் கொலைகள் ஓரளவுக்கு நியாயமானவைதான். சமூகத்தின் சட்டங்களை பின்பற்ற விரும்பாத ஒருவர் அந்த சமூகத்தில் வாழும் உரிமையை இழக்கிறார். இது சமூகத்தின் அடிப்படை கோட்பாடு”
சமூகத்தில் குடும்பத்தின் அந்தஸ்தை பாதுகாக்க குழந்தைகளை பலி கொடுப்பது போன்ற இத்தகைய கேடு கெட்ட பழக்கங்கள் முதலாளித்துவ நாடுகளில் இருந்தால் அது பரவலாக கண்டனம் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்கப்படுவதற்கான தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விடும். அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு வளர்ச்சி வெகுவாக முன்னேறி விட்டது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் நாட்டில், அந்த ஒளிரும் தகவல்களுக்குக் கீழே கொடூரமான அழுகிப் போன சமூகக் கட்டமைப்பின் கீழ் இத்தகைய பழமைவாத கொடூரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏன்?
‘சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பியாச்சு, பொக்ரானில் அணுகுண்டு வெடித்து வல்லரசு கிளப்பில் அங்கம் வாங்கியாச்சு? இந்த காலத்தில யார் சார் சாதி பார்க்கிறாங்க?’ என்று பேசுவதன் அபத்தம் இன்னும் ஏன் நீடிக்கிறது?
‘தகவல் தொழில் நுட்பத் துறையில் உலக அளவில் முன்னேற்றம், 8% வளர்ச்சி, பழைய மகாபலிபுரம் சாலையில் விண்ணை முட்டும் பளபளக்கும் கட்டிடங்கள், பெரு நகரங்களின் கிடுகிடு விரிவாக்கம் முன்னேற்ற ஒளி வீச, இன்னொரு பக்கம் பஞ்சாப்/அரியானாவில் பெண் குழந்தைகள் விகிதம் கடுமையாக சரிவு, தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் சாதீய படுகொலைகள், கௌரவக் கொலைகள்’ என்று பழமை இருள் சூழ்ந்திருப்பது ஏன்?
அறிவியல் வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட பிரம்மாண்ட தொழிற்புரட்சியில் பங்கேற்கும் ஒரு நாடு, தகவல் தொழில்நுட்ப புரட்சியில் முன்னணி பாத்திரம் வகிக்கும் ஒரு நாடு, இத்தகைய பழமையான பிற்போக்கு சமூக பழக்கங்களை உடைத்தெறிந்து நவீன விஞ்ஞான உலகத்துக்கு ஏன் வந்து விடவில்லை? ஹரியானா பிபிஓவில் வேலை செய்யும் இளைஞனுக்கு, காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது சகோதரியை கொன்று போடும் பொறுப்பு எப்படி ஏற்படுகிறது?
நம் பள்ளி வரலாற்றுப் பாடத்தை நினைவு படுத்திக் கொள்வோம்.
19ஆம் நூற்றாண்டில் நவீன ஆயுதங்களுடனும் படைப்பிரிவுகளுடனும் நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் அதிகாரத்தில் இருந்த வந்த பிற்போக்கு அரசுகளை முறியடித்து வென்று, தமது பொருளாதார ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது பிற்போக்குத் தனமான சமூக பழக்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.  ராஜா ராம் மோகன் ராய் போன்ற இந்திய சீர்திருத்த வாதிகளின் துணையுடன் உடன் கட்டை ஏறுவதை தடை செய்வது, குழந்தை மணத்தை எதிர்ப்பது என்று சமூகத்தின் கசடுகளை ஒழிக்கும் கடமை அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பின்பற்றி வந்த அரசுக்கு இயல்பாகவே போய்ச் சேர்ந்தது.
இப்படி ஆங்கிலக் கல்வியும், போராடுவதற்கான ஆயுதங்களும் பெறப்பெற்ற படைவீரர்களும், பொது மக்களும் 1857ல் முதல் சுதந்திர போரில் இறங்கினார்கள். மக்கள் எழுச்சியை சமாளிக்கத் திணறி ஒருவழியாக மீண்ட ஆங்கிலேய வர்த்தக ஆட்சியாளர்கள், அறிவியலும் பகுத்தறிவும் தொழிலுக்கும் வர்த்தகத்துக்கும் சரி, சமூகத்தை மதம், சாதி, மூட நம்பிக்கைகளின் பிடியிலேயே விட்டு வைப்பதுதான் தங்களுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார்கள்.  விக்டோரியா ராணியின் நேரடி ஆட்சிக்கு இந்தியாவை எடுத்துக் கொண்டு, மக்களை பழமை சங்கிலிகளில் கட்டுவித்து, அவர்களது உழைப்பைச் சுரண்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார்கள்.
பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை வைத்து நிலப்பிரபுத்துவ கசடுகளை ஒழித்துக் கட்டியது போல இந்தியாவில் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார்கள்.
1947-ல் ‘சுதந்திரம்’ பெற்ற, இந்திய/பன்னாட்டு முதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரசு அரசுகளும் பாதுகாப்பான அதே கொள்கைகளை பின்பற்றின. இந்திய சட்ட அமைப்பும், நீதி மன்றங்களும் மக்களின் நம்பிக்கைகளுக்கும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வகுத்துக் கொண்டார்கள்.
தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளியும், பிபிஓவுக்கு வரும் ஊழியரும் 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்துடன் உறவாடினாலும், வீட்டுக்குத் திரும்பியதும் அவரை கட்டிப் போட பழங்கால அடிமைச் சங்கிலிகளை விட்டு வைத்ததோடு அவற்றை உறுதி படுத்துவதற்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள். நிறுவனத்திலேயே டபுள் சிறீ ரவிசங்கர் ஆன்மீக வகுப்பு, அலுவலகத்தில் சாதிரீதியான குழு சேர்ப்புகளை கண்டு கொள்ளாமல் விடுவது, ஆயுத பூஜைக்கு பரிசுகள் வழங்குவது என்று நவீன தொழில் நுட்ப சூழலில் அறிவியலுக்கு விரோதமான கொள்கைகளை தடையின்றி அனுமதிக்கிறார்கள்.
அதுதான் ஊழியர்கள் முழுமையான அறிவியல் பார்வை பெற வைத்து தமக்கு எதிராக போய் விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி. நீண்ட கால நோக்கில் அதுதான் இலாபகரமானது. ‘பிரீ மார்கெ’ட்டில் ஆகக் கூடிய லாபம் ஈட்டுவதுதானே உச்ச கட்ட நோக்கமாக இருக்க வேண்டும்!
இப்படியாக நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கொடுமைகளை ஒழித்துக் கட்டும் தகுதியையும் நேர்மையையும் மறுக்கும் இன்றைய முதலாளித்துவ அமைப்பு அவற்றுடன் கள்ளக் கூட்டு ஏற்படுத்தியுள்ளது.
அதனால்தான் நோக்கியாவைத் தொடும் கைகள் தாலியையும் விடாது பிடித்திருக்கின்றன. மவுசை இயக்கும் விரல்கள் அதற்கு ஆயுத பூசையையும் செய்கின்றன. மல்டி மீடியாவை களிக்கும் கண்கள் ஆதிக்க சாதி திமிரை விடாது கொண்டிருக்கின்றன. சமூக ரீதியான போராட்டமின்றி வளர்ச்சியின்றி வெறுமனே தொழில்நுட்பமும், பொருளாதார வளர்ச்சியும் மட்டும் முன்னேற்றத்தை சாதித்து விடாது. அந்த முன்னேற்றமும் எளியோரை வதைத்து வரும் முன்னேற்றம் என்பது வேறு விசயம்.
நம்நாட்டில் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் என்று தம்மைத்தாமே நினைத்துக் கொள்ளும் மேட்டுக்குடி துவங்கி நடுத்தர வர்க்கம் வரை இந்த கௌரவக் கொலைகளை செய்தோ இல்லை மறைமுகமாக நியாயப்படுத்தியோ வருகின்றன. இவர்கள்தான் வட மாநிலங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.கவிற்கும் அடித்தளமாக இருக்கின்றனர். இந்த மாநிலங்களில் இருக்கும் அரசு, அதிகார, நீதிமன்ற, காவல்துறை அமைப்புகள் எல்லாம் கௌரவக் கொலைகளுக்கு தோதான முறையிலேயே செயல்பட்டு வருகின்றன.
அரசியல், பொருளாதார அரங்குகளில் மட்டும் போராடினால் போதாது சமூக அரங்கிலும் நாம் விடாப்பிடியாக போராடியாக வேண்டும் என்பதையே தொடரும் கௌரவக் கொலைகள் நமக்கு சொல்கின்ற உண்மை.
________________________________________________
- அப்துல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக