புதன், 14 டிசம்பர், 2011

கேரளாவுக்கு எதிராக மூணாறில் தமிழர்கள் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டம்

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில், போலீஸாரின் தடையையும் மீறி நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு, கேரள அரசைக் கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூணாறில் எங்கு பார்த்தாலும் தமிழர்கள்தான். அந்த அளவுக்கு இங்கு தமிழர்கள் அதிகம். முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரச்சினை இருந்து வந்தபோதிலும், மூணாறில் அமைதி நிலவி வந்தது.
இந்த நிலையில், மூணாறைச் சேர்ந்த கார், டாக்சி, ஆட்டோ டிரைவர்களை கேரளாவின் பிற பகுதிகளில் அசிங்கமாக பேசி அவமரியாதை செய்ததாக மூணாறில் தகவல் பரவியது. இதனால் மூணாறில் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மூணாறில் போராட்டம் நடத்த தமிழர்கள் குறிப்பாக கார்,ஆட்டோ டாக்சி டிரைவர்கள் அணி திரண்டனர். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்தனர். ஆனால் அதை மீறி நடத்தப் போவதாக தமிழர்கள் திட்டவட்டமாக கூறியதால் போலீஸார் வேறு வழியில்லாமல் அனுமதித்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடிபேரணி நடத்தினர்.டிரைவர்களுடன் பொதுமக்களும் இணைந்ததால் மூணாறில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்திற்குத் தண்ணீர் கொடு, புதிய அணை கட்டாதே, பீர்மேடு, உடும்பன் சோலை, தேவிகுளத்தை தமிழகத்துடன் இணை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால் பரபரப்பு மேலும் கூடியது.

இந்தப் போராட்டம், ஊர்வலத்தால் மூணாறில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.தமிழ் மக்கள் மீது வன்முறை மூண்டு விடாமல் தடுக்க போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக