சனி, 3 டிசம்பர், 2011

ஸ்டாலின் விவகாரம் பேக்-ஃபயர் புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா

நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தபின், ஸ்டாலினுக்கு இப்படியொரு எழுச்சியை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது. அப்படிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நில அபகரிப்பு புகார் ஒன்றில் ஸ்டாலின்மீது வழக்கு பதிவு செய்து, தி.மு.க.-வின் அடுத்த தலைவராகும் அளவுக்கு செல்வாக்கை எகிற வைத்திருக்கிறார் முதல்வர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று கைது செய்யுமாறு சவால் விட்டுத் திரும்பும்போது..
முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கு தொடுத்தவர்களே எதிர்பாராத ஒரு ட்டுவிஸ்டைச் சந்தித்தது.இதுவரை காலமும், நில அபகரிப்பு புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க. புள்ளிகளை அவர்களது வீடுகளை போலீஸ் முற்றுகையிட்டு, ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு வருவதுதான் செய்தி.
ஸ்டாலின் அதிரடியாக தானே நேரடியாக டி.ஜி.பி. ஆபீஸில் போய் இறங்கி, “ஏங்க, நம்மைக் கைது செய்ய இப்ப வசதிப்படுமா?” என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார்.
போலீஸ்தான் திருதிரு என்று விழித்து, மனுவை வாங்கிக்கொண்டு ஆளை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
ஸ்டாலின் நில அபகரிப்பு செய்தாரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, ஸ்டாலின் அடித்திருப்பது அரசியல் ரீதியாக அட்டகாசமான அடி! கட்சிக்காரர்கள் மத்தியிலும் இதனால் அவரது இமேஜ் எகிறும். பொதுமக்கள் மத்தியிலும் வேறு விதமான ஒரு மெசேஜ் போய்ச் சேரும்.
பொதுமக்களைப் பொறுத்தவரை, தி.மு.க.-வினர் “எங்களை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்” என்று சொல்லி வருவதை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்டாலினே நேரில் போலீஸிடம் சென்று, “முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது, அவர்களுக்கு ஒரு லேசான சந்தேகத்தைக் கிளப்பப் போகின்றது – “ஆகா, இது போலி குற்றச்சாட்டு போலிருக்கிறது. இல்லாவிட்டால் இவர் தைரியமாக போலீஸிடம் போய் கைது செய்யும்படி சொல்லுவாரா? கேஸ் ஸ்ட்ராங்காக இருந்தால், போலீஸ்தான் அவரை திரும்பிச் செல்ல விட்டிருப்பார்களா?”
கடசிக்காரர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு ஏற்படக்கூடிய இமேஜைப் பாருங்கள்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்கூட, ஜெயிலுக்குப் போகப் பயந்து தலைமறைவாகத் திரிந்த சூழ்நிலையில், ஸ்டாலின் போலீஸை தேடிச் சென்றது, அவருக்கு கட்சிக்குள் ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்திவிடும். கட்சியின் அடுத்த தலைவர் என்ற பதவிக்குச் செல்லும் பாதையை சுலபமாக அமைத்துக் கொடுத்துவிடும்.
நேற்று திடீரென டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்ற ஸ்டாலின், “எங்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, டி.ஜி.பி.யை சந்திக்க வந்தேன். அவர் இல்லாததால், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். புகார் அளிக்கப்பட்டுள்ள சொத்துக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உதயநிதியின் திரைப்பட நிறுவனத்துக்காக வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட இடத்தில், என் மகளும், மருமகனும் குடியிருந்து வருகின்றனர்” என்று விளக்கம் கொடுத்து, அது பக்காவாக மீடியாக்களில் பிளாஷ் ஆகுமாறு செய்திருக்கிறார்.
வரிசையாக நடந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கைது விவகாரங்களை ஓரிரு வரிகளில் நியூஸ் போடும் பிற மாநில பத்திரிகைகள்கூட, ஸ்டாலின் அதிரடியை பெரியளவில் கவர் பண்ணியிருப்பதைக் கவனியுங்கள்!
அவர் இதே விளக்கத்தை வீட்டில் இருந்து கொடுத்திருந்தாலோ, அல்லது கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படும்போது கொடுத்திருந்தாலோ அதற்கு இந்தளவு மீடியா பிளாஷ் கிடைத்திருக்காது. தானே வலிய கைதாகப் போனதுதான் பிளாஷ்-பாயின்ட். அதில் சொல்பவை எல்லாமே சைக்காலஜிக்கலாக மக்கள் மத்தியில் எடுபடும்!
ஸ்டாலின் விவகாரம் இப்படி பேக்-ஃபயர் பண்ணும் என்பதை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா செய்தாரா, அல்லது, கிடைத்த சான்ஸை ஸ்டாலின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பதுதான் கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக