சனி, 31 டிசம்பர், 2011

தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: கருணாநிதிக்கு உம்மன் சாண்டி கடிதம்

திருவனந்தபுரம், டிச.30: கேரள மாநிலத்தில் வாழும் தமிழர்களும், அவர்தம் சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை அவர் தமிழக முன்னாள் முதல்வரும், திமுத தலைவருமான மு.கருணாநிதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய கருணாநிதி, கேரளத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே உம்மன் சாண்டி கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். துரதிருஷ்டவசமாக கேரளத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் சில சக்திகளால் தமிழகத்தில் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மாநிலக் காவல் துறைக்கு கண்டிப்பான உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கேரளத்தவர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து குறிப்பிட்ட சாண்டி, பொறுப்புள்ள அரசியல் தலைவர் என்ற வகையில் தனது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி அதுபோன்ற சம்பவங்களை கருணாநிதி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.முல்லைப் பெரியாறு குறித்து கருத்துத் தெரிவித்த அவர், புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கேரள மாநிலத்தின் நிலைபாட்டில் மாற்றம் இல்லை என்றும், புதிய அணை கட்டப்பட்ட பின்னும் தமிழகத்துக்குத் தேவையான நீர் தரப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக