சனி, 24 டிசம்பர், 2011

பாஸ்போர்ட் முடக்கம்: உதயகுமார் குழு வெளிநாடு தப்ப முடியாது

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பாஸ்போர்ட்களை முடக்க, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குழுவை சேர்ந்தோர், கடைசி கட்டத்தில் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க, அவர்களது பாஸ்போர்ட்களை முடக்கும் பணியில், மத்திய அரசும், நெல்லை மாவட்ட போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து, ரகசிய விசாரணை நடத்தும் மத்திய அதிகாரிகள் கூறுகையில், "" உதயக்குமார் மற்றும் அவர்களது குழுவினரின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து, முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. போராட்டம் முடிவுக்கு வரும் போது, அவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக, தகவல் உள்ளது,'' என்றார்.

மேலும், ""அவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குகள் உள்ளதால், அவர்களது பாஸ்போர்ட்டுக்கு, தடையில்லா சான்று கிடைக்காது. அணு உலை எதிர்ப்பாளர்களின் பாஸ்போர்ட்களை முடக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். இது தொடர்பாக, நெல்லை மாவட்ட போலீசாரும், உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,'' என்றார். நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""கிட்டத்தட்ட, 100க்கும் அதிகமான வழக்குகள் உள்ளதால், சட்டப்படி கோர்ட்டில் ஆஜராகாமல் அணு உலை எதிர்ப்பாளர்கள், வெளிநாடு செல்ல முடியாது. வழக்குகளால் தானாகவே, அவர்களது பாஸ்போர்ட் முடங்கி விட்டது,'' என்றார்.
புதிய பாஸ்போர்ட்களுக்கும் தடை! கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலர், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்து உள்ள நிலையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விண்ணப்பங்களும், உளவுத் துறை போலீசாருக்கு வருகின்றன. அவற்றிற்கு, தடையில்லா சான்று தர மறுத்து உள்ளூர் போலீசார், கடிதம் அனுப்பி வருகின்றனர். இதனால், இந்த வழக்குகள் முடியும் வரை, போராட்டத்தில் தொடர்பு உடையவர்கள் யாரும் பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக