வெள்ளி, 30 டிசம்பர், 2011

பாரதிராஜா – கலைஞரா? தேவரா?


பாரதிராஜாவை திறமையான இயக்குநர் இல்லை என்பது போல் போன தங்கம் இதழில் நீங்கள் குறிப்பிட்டது ரொம்ப அதிகம்.
-என். மலைச்சாமி, திருப்பூர்.
‘திறமையான இயக்குநர் இல்லை’ என்று நான் குறிப்பிடவில்லை.
தமிழின் மிக அழகியலான, நேர்த்தியான முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படத்தின் நாயகன் எளிய சப்பானி. படத்தில் யாருக்கும் ஜாதிய அடையாளம் இல்லை. கிழக்கே போகும் ரயிலில் சவரத் தொழிலாளிதான் நாயகன். இவைகளை எல்லாம் பாரதிராஜா என்கிற கலைஞன் எடுத்த படங்கள்.
முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே இவைகள் எல்லாம் பாரதிராஜா என்கிற தேவர் எடுத்த படங்கள். முதல் மரியாதை திரைக்கதையும், காட்சி அமைப்பும் நவீனமாக, அழகியலோடு இருந்தாலும் அதன் ஜாதி உணர்வு இயக்குநரின் கலை நேர்த்தியை ஒரு குறுகிய வட்டத்தினுள் சொருகி விட்டது.
முதல் மரியாதையில், வடிவுக்கரசி சிவாஜிக்கு எதிராக தன் உறவினர்களை (தேவர்) அழைத்து விருந்து வைப்பார். உறவினர்கள் சிவாஜியை இழிவாக பேசும்போது, அருவாளை உருவி, ‘நான் தேவன்டா..’ என்று ஜாதி வீரம் பேசுவார். அப்போ விருந்து சாப்பிடுறவங்க யாரு சீனாக்காரய்களா?
ஒரு தலித் பெண்ணை கொலை செய்தது தன் ஜாதிக்காரனே என்று தெரிந்தும் அவனுக்கு தண்டனை வாங்கித் தந்த நீதிமான் என்று சிவாஜி கதாபாத்திரத்தை தலித் தோழன் அடையாளத்திற்குள் திணிக்க முயன்றாலும், தன் காலில் குத்திய முள்ளைக் கூட குனிந்து எடுக்காமல், ‘செங்கோடா..’ என்று  ஒரு  தாழ்த்தப்பட்டவரை அழைத்து, அந்த முள்ளை எடுப்பது போன்ற காட்சியில் தலித் விரோதமும், ஜாதி திமிரும்தான் வெளிப்பட்டது.
பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்க வந்த வேதம் புதிது, பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவமான சுயஜாதி அபிமானத்தை சுற்றி வந்து மீண்டும் பார்ப்பனியத்தின் கால்களிலேயே விழுந்தது. அதனால்தான் வயது முதிர்ந்த அந்த பாலு தேவர், பார்ப்பன சிறுவன் முன் பரிதாபமாக கை கட்டி நின்றார்.
பாரதிராஜா திறமையானவர்தான். தமிழ் சினிமாவின் வடிவத்தையே தலைகீழாக மாற்றிய மகா கலைஞன்தான். ஆனால்…
அவர் பெரிய இயக்குநராக பிரபலமாவதற்கு முன் கலைஞனாக இருந்தார். பிரபலமான பிறகு தேவராகிவிட்டார். ஆனாலும், அவர் இயக்குர் ஆனதற்கு. அவடைய ஜாதி உணர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்.
ஆம், ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிய எஸ்.பி. பாலசுப்பிரணியம் தெலுங்கர். அவரை உதவியாளராக சேர்த்துக் கொண்ட புட்டண்ணா ஒரு கன்னடர். அவரின் முதல் பட தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு தேவர் இல்லை.
பாரதிராஜாவை மிகப் பெரிய இயக்குநராக கொண்டாடுகிற தமிழர்களில் தேவர் ஜாதி அல்லாதவர்களே மிக மிக மிக அதிகம். ஆனால், அவர் படமோ தேவர் ஜாதி தமிழர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.
இது என்ன நியாயம்?
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக