ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தனுஷின் கொலவெறிப் பாடல் மாணவர்களைக் கெடுத்து விடும்-கவலையில் ஆசிரியர்கள், பள்ளிகள்!

தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.
இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.

கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.

இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக