வெள்ளி, 23 டிசம்பர், 2011

மார்கழி சங்கீத சீசன் ஒரு பார்வை




இந்த மார்கழி கச்சேரி வருடந்தோறும் சென்னையில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் இது ‘இசை விழா’ என்று சொல்ல முடியாது. இசைக்கு சாதி,மதம் ஏன் மொழி கூட கிடையாது. ஆனால் இவை ஒரு குறிப்பிட்ட ‘சமுதாய விழா’ போலத்தானே இருக்கிறது…? பாடுவதும் அவாதான், கச்சேரிக்கு பணம் செலவு செய்வதும் அவாதான், கேட்டு ரசிப்பதும் அவாதான். வெகுஜனங்களும் ரசிக்கும்படி இதை ஏன் எளிமையாக்கவில்லை..? நான் கேட்பது குத்துப்பாட்டை அல்ல. கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பாடல்கள். (இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரை இசைப் பாடல்கள் கூட தவறில்லை)
அபூர்வமாக பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி பாடல்கள் சில பாடி, ‘தமிழ் கீர்த்தனைகளும்’ பாடுகிறோம் என கணக்கு காட்டும் வேலைதான் நடக்கிறது.

வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் “பாட்டுக்கே” இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். “கேட்பர்களையே” கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும்.

டிசெம்பர் இருபதன்று நடுப்பகலில் அகதெமியில் ”பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையில் அமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ன மோஹன், ராம்குமார் மோஹன்) ஆஹிரியில் மாயம்மா என்றபடி நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.
சீஸனில் அரிதாக (ஒரே முறை?) வரும் பூபாளம் ஆலாபனையில், பிரதர்ஸ் சில மேற்கத்திய ஒத்திசைவு சாத்தியங்களைப் புகுத்தினர். ஒருவர் ஆலாபனை செய்து முடிக்கும் தருவாயில் அடுத்தவர் இடைபுகுந்து மேல் ஸ்தாயிலோ, கவுண்டர்பாயிண்ட் எனப்படும் எதிர்புள்ளியிலுள்ள ஸ்வரத்திலிருந்தோ தொடங்கி பாடுவது. பொதுவாக கர்நாடக சங்கீதத்தில் இவ்வகையில் பிரஸ்தாபம் கிடையாது. அவ்வப்போது நாகஸ்வரக் கச்சேரிகளில் தொட்டுகாட்டுவர். கணீர் தொண்டையுடன் வளமான குரலில் பாடுகையில் கேட்கும்படியே இருந்தது.
வயலின் பரூர் பாணி. எம்எஸ்ஜியின் தந்தை பரூர் சுந்தரேச ஐயர் கட்டுமானித்தது. இளம் வித்வான் திலீப் ஆலாபனையில் கோர்வையாய் கவனமுடன் ஆரோஹன அவரோஹன ஸ்வரங்களை பிரித்தும் கூட்டியும் வேகமாய் வாசித்ததில், இன்று பூபாளம் ஓரளவே தட்டுப்பட்டது.
கரஹரபிரியா கச்சேரி பிரதான ராகம். ராம நீ சமானமெவரு மெயின் உருப்பிடி. ஆலாபனை கட்டுமானத்திலும், உதவும் மூக்கிலும், ராம்குமார் மோஹன் செம்மங்குடியை நினைவுபடுத்துகிறார். பலுகு பலுகு என்று எதிர்பார்த்த இடத்தில் தொடங்கிய நிரவலில் நல்ல வேகம். ஆரவாரமான க்ளைமாக்ஸ் இன்னமும் கைகூடவில்லை. ஆனால் ஸ்வரங்கள் கரஹரபிரியாவாய் பிரவகித்தது. குறைப்பிலும் ஸ்தாயி வேறுபாடுகளுடன் குரல்களை பரிமாரிக்கொண்டார்கள்.
பிரதர்ஸ் அமர்க்களமாய் பலுகு பலுகு விற்கு ஒரு பொருத்தம் வைத்து ஸ்வரங்களை முடிக்க, மிருதங்கம் தனியில் விறுவிறுத்து, அதே பொருத்தத்தை வைத்து முடித்தது பிரமாதம். கர்ரா ஸ்ரீநிவாஸ ராவ் ஆந்திரா மிருதங்கம். வாசிப்பும், மிருதங்க நாதமும், கமலாகர் ராவ் பாணியில்.
அடுத்த மத்தியான கச்சேரி இரட்டை வீணை. இன்றளவில் கல்கத்தாவில் ஒரு முத்துஸ்வாமி தீக்‌ஷதர் கீர்தனைகளஞ்சியமான இசைப்பள்ளி இருக்கிறது. தீக்‌ஷதரின் நேரடி சிஷ்யர்களில் தொடங்கும் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. தனிக் கட்டுரை வேண்டும். இன்றைய வீணை வித்வான்கள் ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் இப்பள்ளியைச்சார்ந்தவர்கள். பேகடாவில் வல்லபநாயகவில் தொடங்கி, ஸ்ரீரஞ்சனியில் பூவினிதாஸுடனே, காசிராமக்ரியாவில் விஸாலாக்‌ஷி என்று வெயிட்டான அயிட்டங்கள்.
ராக ஆலாபனை தொடக்கப் பிடி (ப்ரத்யேக மெலடி) கரஹரபிரியாவை நினைவூட்டினாலும், விரிவாக்கம் ஸ்ரீரஞ்சனியே. பூவினிதாஸுடனே கீர்த்தனையை அணுகியமுறை, அக்கீர்தனையை பல காலப்பிரமாணங்களிலும் நிர்வகித்து பிராபல்யமடையச்செய்த ராம்நாட் கிருஷ்ணன் மெச்சும்படியானது. வீணைகளிடையே ஸ்வரப் பரிமாற்றங்களுக்குப்பிறகு காசிராமக்கிரியா ராக ஆலாபனை.
அடுத்து காம்போஜியில் தீக்‌ஷதரின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே. திஸ்ர ஏக தாளம் (எளிமையாய் சொன்னால், மூன்று மூன்று கூறுகளாய், த்ருதங்களாய், ஒரு காலப்பிரமாணத்தில், ஸ்பீடில், தட்டிக்கொண்டே போவது). கீர்த்தனை அதன் சங்கதிகளுடன் தெரிந்து அரங்கில் கேட்டவர்களுக்கு வீணையில் வாசித்தவிதத்தின் உழைப்பும் நேர்த்தியும் பிடிபட்டிருக்கும். ஸ்ரீ என்று பாடுவதற்குள்ளேயே காம்போதி ஜூஸ் அழுத்தி, அழுத்தி பிழியப்பட்டு ஓடும்.
”மன்மதனோட கோடி தபா அழகாக்கிர லார்டு சுப்ரமணியரை கும்பிட்டுகரேன்” என்பதன் செவ்வியல் பொருளுறையும் ”ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே நமஸ்தே; மனஸிஜ கோடி கோடி லாவன்யாய தீன சரண்யாய” என்ற பல்லவியை மூன்று காலங்களிலும் திஸ்ரத்திலும் இரண்டு வீணையிலும் ஒத்திசைந்து வாசித்து அமர்க்களப்படுத்தினர்.
வழக்கமான ”வாசவாதி சகல தேவ” வரியில் நிரவல் செய்து அதைப் பலவகைகளில் காம்போதி ஸ்வரங்களால் இட்டு நிரப்பு (நிரவி), நீட்டி மடித்து, விரட்டி, திரட்டி, மிளிரச்செய்து பதியவைத்து ஆனந்திக்கவைத்தனர்.
இளைபாற பசுபதிபிரியாவில் முத்தையாபாகவதரின் சரவனபவாவை துரித காலப்பிரமாணத்தில் வாசித்தனர். நான் கேட்டவரையில் இக்கிருதியின் உச்சவெளிப்பாடு சேஷகோபாலனுடையதே (அறிந்திராதவருக்கு: இவர் முத்தையா பாகவதரின் சிஷ்யர் சங்கரசிவத்தின் சிஷ்யர்). சமீபத்தில் இரண்டு வருடம் முன்பு அகதெமியில் மண்டா சுதா ராணி வயலினில் நர்மதா (பரூர் பாணி) துணையுடன் இக்கிருதியை விறுவிறுப்பாக நிர்வகித்தார்.
அடுத்து ராகம் தானம் பல்லவியில் தோடி. பிரத்யேக ஸ்ருதித் தந்திகளுடனான வீணையின் சுநாதத்திலும், தேர்ந்த வாசிப்பிலும் தானம் கேட்டு அனுபவ பரவசிக்க அகதெமியின் சூழல் அலாதி.
வேலவனே நினது பதமே | தரவேணும் மயில்நடன || என்று எளிமையான ஆதிதாள திஸ்ர நடை பல்லவி. பாடிக்குறிப்பிடுமுன் ஒலிகுறைத்து படுத்திய மைக், நன்”மைக்”கில்லை.
வீணை கச்சேரி முழுவதுமே ஒருவித எலக்ட்ரானிக் பஸ். ஆதார சட்ஜத்திலிருந்து சற்றே தூக்கலான ஸ்வரத்தில் ஒலித்து, கேட்கும் சௌக்கியத்தை குலைத்தபடி.
செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் காண்டீனில் ஈயில்லாமல் ஈயப்பட; இச்சீசனில் அகதெமி காபி ஜோர். காண்டீன் அக்கபோர்கள், உடையலங்காரங்கள் என வெகுஜன வாராந்திரிகளில் சங்கீத விமர்சனம் வரும், மேலும் படித்துக்கொள்ளுங்கள்.
மாலை பிரதான கச்சேரிகளில் முதலாவது விஜய் சிவாவினுடையது. விஜய் சிவா ராஹுல் டிராவிட் போல. மிஸ்டர் ரிளையபிள். என்று கேட்டாலும் கன்சிஸ்டென்ட்டாக ஒரு தரத்திற்கு மேல் கச்சேரி செய்வார். டோட்டல் பெயிலியர் என்றும் கிடையாது. பாஸ் மார்க்கிற்கு மேல் எவ்வளவு என்பது அன்றைய தினத்தை பொறுத்தது. இன்று மதிப்பெண் அதிகமில்லை.
நின்னுஜூச்சி என்று சௌராஷ்ட்ரத்தில் விறுவிறுவென தொடங்கி மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கத்திலும் அநிருத் ஆத்ரேயா கஞ்சீராவிலும் உடன் கணகணக்க, அடுத்து வந்த கமாஸ் ராகத்திலமைந்த சுஜன ஜீவனா ராமாவையும் அவ்வகை காலப்பிரமாணத்திலேயே பாடினார். கமாசு கமாசு கமாசு என்று சொல்லிகொண்டிருந்தால் சுகமா சுகமா என்று ஒலிக்கும். அப்படியான ராகத்தில் சுகுணபூஷனராய் ராமர் சற்று மெதுவான காலப்பிரமாணத்தில் நிதானமாய், சுஜனமாய் ஜீவித்திருக்கலாம்.
சிவாவின் கல்யாணி ஆலாபனை மல்லிகைப்பூ போல இருந்தது எனலாம். ஆனால் முன் சீஸன்களில் வேறு பிரபல பாடகர்களின் சாருகேசிக்கு அவ்வகை உதவாத உவமைகளை பிரபல விமர்சகர்கள் எழுதிவிட்டனர். அதனால் ஆலாபனை பிரமாதம் என்போம்; முடிக்கையில் ராகபாவத்தில் ஒட்டாத சில ஸ்தாயி தாவல்களை தவிர்த்திருந்தால் ஏ-க்ளாஸ் கல்யாணி என்றிருக்கலாம்.
தள்ளி நின்னு நெரநம்மிநானுவெனவே கிருதி, விஜய் சிவாவின் கல்பித சங்கீத பிரதாமான குருகுல பயிற்சியில், பரிமளித்தது. கல்பன சங்கீத ஸ்வரங்கள் சற்று ஆயாசம்.
அடுத்து சம்பூர்ண மேள ராக மானவதியில் முன்சென்ற கீர்த்தனைகளின் காலப்பிரமாணத்திலேயே எவரித்தோ நீ தில்பதே ராமா என்று தியாகையரின் ஏகைகராக கிருதி. நேரம் கடந்தால் வெளியே போக்குவரத்து அதிகரித்து ஊடாடி வீடுசேர தாமதமாகிவிடும் என்கிற சாக்கில், பக்கத்து சீட்டினரின் முட்டிகளை மடக்கச்சொல்லி பக்கவாட்டில் ஊர்ந்து, விட்டேன் ஜூட்.
கொசுறாக சங்கீத வம்பு: அகதெமி உட்பட சபாக்களில் தினச்சம்பளத்திற்கு தம்பூரா கலைஞர்களை அமர்த்துகிறார்கள். இரண்டு நாள் முன் ஒப்பந்தமாகியிருந்த வயதான தம்பூரா கலைஞரை தன் எலக்ட்ரானிக் தம்பூராவே போதும் என்று மெயின் ஸ்லாட் நாரீமணி ஒதுக்கிவிட்டாளாம். நான் பாட்டுக்கு மேடையில் ஓரத்திலமர்ந்து மீட்டிவிட்டு ஒரு ஆயிரம் ரூபாய் பார்த்தால் இவருக்கு என்னவாம் என்று அங்கலாய்த்தார். அகதெமிக்கு வெளியே.
- அருண் நரசிம்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக