ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சபரிமலையில் பயங்கரம் நடந்த பின்னும் சுறுசுறுப்பில்லை பாதுகாப்பு பக்தர்கள் பொறுப்பு

சபரிமலை: இந்தியாவில் உள்ள மிக முக்கிய புனித தலங்களில் சபரிமலையும் ஒன்று. சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக இருந்தாலும் கோயில் அமைந்திருக்கும் இடம் முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மண்டல, மகர விளக்கு காலங்களில் பக்தர்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் 6 நாட்கள் நடை திறந்திருக்கும். ஆனால் மண்டல, மகர விளக்கு காலங்களில் தான் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
மண்டல காலங்களில் 41 நாட்களும், மகர விளக்கு காலங்களில் 20 நாட்களும் கோயில் நடை திறந்திருக்கும். மொத்தம் 61 நாட்களில் குறைந்தது 3 கோடி பக்தர்கள் சபரிமலை வந்து செல்வதாக கூறப்படுகிறது. மண்டல, மகர விளக்கு காலங்களில் மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு குறைந்தது ஸி300 கோடி வருமானம் கிடைக்கிறது. கேரள அரசுக்கு கிடைக்கும் வருமானம் ஸி1000 கோடியைத் தாண்டும். ஆனால் இந்த வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் கூட சபரிமலைக்கு தேவசம் போர்டோ, கேரள அரசோ செலவழிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை.

சபரிமலை கோயிலுக்கு செல்ல ஏராளமான வழிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும் புல்மேடு பாதை வழியாக செல்வதையே விரும்புகின்றனர். புல்மேட்டின் ஒரு பகுதியில் இருந்து பார்த்தால் சபரிமலை கோயிலும், இன்னொரு பகுதியில் இருந்து பார்த்தால் மகரஜோதியும் மிக தெளிவாக தெரியும். இதனால் தான் ஐயப்ப பக்தர்கள் மகர ஜோதியை தரிசிப்பதற்காக புல்மேட்டுக்கு அதிகமாக செல்கின்றனர்.

கடந்த ஜனவரி 14ம் தேதி தான் இந்தியாவையே உலுக்கிய அந்த கோர சம்பவம் நடந்தது. வழக்கமாக மாலை 6.30 மணிக்குள் மகர ஜோதி தெரிந்துவிடும். ஆனால் அன்று இரவு 7 மணிக்கு பின்னர் தான் ஜோதி தெரிந்தது. ஜோதியை தரிசிப்பதற்காக புல்மேடு பகுதியில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர்.ஜோதி தெரிந்தவுடன் லட்சக்கணக்கான பக்தர்களும் ஒரே சமயத்தில் தங்களது ஊர்களுக்கு செல்லும் ஆர்வத்தில் வேகமாக திரும்பினர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் பரிதாபமாக இறந்தனர். எப்படி? எதனால்? இந்த நெரிசல் ஏற்பட்டது என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

விபத்து ஏற்பட்ட ஒரு சில மாதங்களில் கேரள அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிகரன் நாயர் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. இந்த விசாரணைக் கமிஷன் கடந்த மாதம் ஒரு இடைக்கால அறிக்கையை கேரள அரசிடம் தாக்கல் செய்தது. அதில் வருங்காலத்தில் புல்மேடு பகுதியில் நெரிசல் மூலம் விபத்து ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், நெரிசல் ஏற்படாமல் இருக்க 30 அறிவுரைகள் தெரிவிக்கப் பட்டிருந்தன. அதில் முக்கியமானவைகள்: பக்தர்கள் செல்லும் வழியில் வனத்துறை எந்த வாகனங்களையும் அனுமதிக்கக் கூடாது. வழியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தான் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது. வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம் என்பதால் புல்மேடு பகுதியில் போதிய வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதியில் மின்சார இணைப்பு கொடுக்க முடியாது என்பதால் ஜெனரேட்டர் மூலம் இயங்கும் ராட்சத ‘அஸ்கா‘ விளக்குகளை பயன்படுத்த வேண்டும். தற்காலிக செல்போன் டவர் அமைக்க வேண்டும்.

பக்தர்கள் செல்லும் வழியில் கடைகள் அமைக்க அனுமதியளிக்க கூடாது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். உப்புப்பாறை, எருமேலி, பீருமேடு, குமுளி, வண்டிப்பெரியாறு, சத்திரம், வள்ளக்கடவு, பருந்தும்பாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் போலீஸ் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கவேண்டும். விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல புல்மேட்டிலும், சபரிமலையிலும் ஹெலிபேட் அமைக்க வேண்டும். மகர விளக்கு நெருங்கும் நேரத்தில் இரவிலும் பஸ் போக்குவரத்து நடத்த வனத்துறை அனுமதியளிக்க வேண்டும். இப்படி போகிறது நீதிபதி ஹரிகரன் நாயர் கமிஷனில் கூறப்பட்ட அறிவுரைகள்.

இதன்படி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து அறிவதற்காக கேரள போக்குவரத்து துறை மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் வி.எஸ்.சிவகுமார், கேரள டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ், தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் ஆகியோரை அணுகிய போது கிடைத்த தகவல்கள்: அமைச்சர் வி.எஸ்.சிவகுமார்:  புல்மேட்டில் மீண்டும் நெரிசல் மூலம் விபத்து ஏற்படாமல் இருக்க நீதிபதி ஹரிகரன் நாயர் கமிஷன் தெரிவித்துள்ள அறிவுரைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. ஹெலிபேட் அமைப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. வனத்துறை அனுமதி உட்பட சில சிக்கல்கள் இருப்பதால் இப்போதைக்கு ஹெலிபேட் அமைக்க முடியாது.

தேவசம் போர்டு தலை வர் ராஜகோபாலன் நாயர்: புல்மேடு பகுதி முழுவதும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால். அங்கு தேவசம் போர்டால் எந்த வசதிகளையும் ஏற்படுத்த முடியாது. சத்திரம் பகுதியில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தவும், ஓய்வெடுப்பதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ்: புல்மேடு பகுதி பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலய பகுதியாகும். இதனால் பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் போல புல்மேட்டில் எந்த வசதியும் ஏற்படுத்த முடியாது. கடந்த முறை வனத்துறை பக்தர்களிடம் டிக்கெட் மூலம்  பணம் வசூலித்தது. இதனால் ஏராளமான வாகனங்களும் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் செல்லும் வழியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் வழி மிகவும் குறுகலானது. இந்த குறுகிய பாதை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே சமயத்தில் சென்றபோது தான் நெரிசல் ஏற்பட்டது.

இம்முறை கோழிக்கானம், சத்திரம் ஆகிய இடங்கள் வழியாக உப்புப்பாறை மற்றும் புல்மேட்டுக்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. கடந்த முறை 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இம்முறை கூடுதலாக 200 பேர் வரவழைக்கப்படுவார்கள் என்று கூறினார்.நீதிபதி ஹரிகரன் நாயர் கமிஷன் கூறியுள்ளபடி புல்மேட்டில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து வசதிகளும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியுள்ள போதிலும் நேற்று வரை குறிப்பிட்டு சொல்லும்படி எந்த பணிகளும் நடைபெறவில்லை. சமீபத்தில் வரவழைக்கப்பட்டுள்ள 50 ராட்சத ‘அஸ்கா‘ விளக்குகள் தவிர வேறு எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.
மகர விளக்கு பூஜை இம்முறை ஜனவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அதிகபட்சமாக இன்னும் 40 நாட்கள் தான் உள்ளன. அதற்குள் அனைத்து வசதிகளும் செய்யப்படுமா என்பது கேள்விக்குறி தான்.
கேரள அரசுத் தரப்பில் தெரிவித்துள்ள தகவல்களின்படி புல்மேடு பகுதியில் பக்தர்களுக்கு கூடுதலாக வசதிகள் எதுவும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது. எனவே மகர ஜோதி தரிசிக்க இங்கு வரும் பக்தர்கள் இதைப் புரிந்து கொண்டு கவனமாக இருக்காவிட்டால் இன்னும் ஒரு விபத்து நடக்க காரணமாகிவிடும்  என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக