வியாழன், 22 டிசம்பர், 2011

கறிமாடுகள் கிடைக்காமல் கேரள வியாபாரிகள் திணறல்

ஈரோடு: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தடைபட்டுள்ள நிலையில் தற்போது கறிமாடுகள் கிடைக்காமலும் கேரளா வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகை கறிக்கோழி, மாடு இல்லாத பண்டிகையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையம் சந்தையில் ஒவ்வொரு புதன்கிழமையும் அடிமாட்டு சந்தையும், வியாழனன்று கறவை மாடுகளுக்கான சந்தையும் நடைபெறுவது வாடிக்கை.
நேற்றைய தினம் ம.தி.மு.கவினர் மற்றும் தமிழக மக்கள் கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களில் சாலை மறியல் செய்த காரணத்தால், கேரளாவுக்கு லாரிகள் எதுவும் செல்லவில்லை.இதை முன்கூட்டியே தெரிந்திருந்த தமிழக மாட்டு வியாபாரிகள் யாரும் நேற்று நடந்த அடிமாட்டு சந்தைக்கு மாடுகளையும், எருமைகளையும் விற்பனைக்கு கொண்டுவரவில்லை.

வாகனங்கள் கிடைக்கவில்லை

சந்தைக்கு கொண்டுவரும் அடிமாடு மற்றும் எருமைகளில் பெரும்பகுதி இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வரும் சனிக்கிழமையன்று கிருஸ்துமஸ் பண்டிகை வருவதால் அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாக மாட்டு இறைச்சி அதிகமாக தேவைப்படும் என்பதால் ஈரோடு சந்தைக்கு அதிகமான கேரளா மாட்டு வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அளவுக்கு மாடுகளும் வரவில்லை. வந்திருந்த மாடுகளையும் வாங்கி கொண்டு செல்ல வாகன வசதியில்லாமலும் திணறித் தான் போனார்கள் கேரள வியாபாரிகள்.

கிருஸ்துமஸ் கறி கிடையாது

நான்கு, ஐந்து வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு லாரிக்கு 25 மாடுகள் வரையில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால், இந்த வருடம் கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினத்துக்கு தேவையான ஆடு, மாடு, கோழி இறைச்சிகள் கேரளாவில் கிடைக்காது என்று தெரிவித்தனர்.

ஏற்கனவே காய்கறிகள் கிடைக்காமல் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய் வரை கேரளாவில் விற்பனையாகிறது. இந்த நிலையில் மாட்டுக்கறியின் விலை ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் கேரள வியாபாரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக