வெள்ளி, 23 டிசம்பர், 2011

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் மதமாற்றம் தீர்வே அல்ல

அன்வர் பாலசிங்கம் எழுதி கலங்கைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தக் கதையை நேற்று இரவு படித்து முடித்தேன். சிறிய புத்தகம். தொண்ணூற்றி சொச்சம் பக்கங்கள்.
கதை எழுதும் வடிவம் அவருக்குச் சிக்கவில்லை. மொழிக்குழப்பம், நீண்ட, தேவையில்லாத வசனங்கள் பல இடங்களில். இந்தச் சின்னப் புத்தகத்திலுமே அலுப்பூட்டக்கூடியமாதிரி மீண்டும் மீண்டும் வரும் பேட்டர்ன்.
எனவே அதில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துப் பார்ப்போம். கதை ஒரு முக்கியமான சமூக நிகழ்வை முன்வைத்து அதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.1981-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தேவர் சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து எதிர்கொண்டுவந்த பல பள்ளர் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. அதைத்தான் கதைக்களனாக எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர். அவருமே அப்படி மதம் மாறி அந்தச் சமூகத்தில் வாழும் ஒருவரோ என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்றோ, இல்லை என்றோ புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
கதையில் மீனாட்சிபுரம், காமாட்சிபுரம் என்ற பெயரில் வருகிறது.
இஸ்லாத்துக்கு மதம் மாறியபிறகும் சாதிப் பிரிவினை அப்படியே உள்ளது என்றும், “நவ் முஸ்லிம்கள்” என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றும் 40 வயதைக் கடந்தபின்னும் அவர்களுடைய பெண்களுக்குத் திருமணம் ஆவதில்லை, ஏனெனில் அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை என்றும், இதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியில் சில வயதான, திருமணமாகாத பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஒரு பிரச்னையைக் கதை முன்வைக்கிறது.
மதம் மாற பள்ளர்கள் முடிவெடுத்ததும் ஓடிவந்து அவர்களை வரவேற்று உதவிய மைய நீரோட்ட முஸ்லிம் சமூகம், மற்றபடி அவர்களுடன் கொண்டுகொடுத்து உறவு வைத்துக்கொள்வதில்லை என்றும் இரட்டைக் குவளைமுறை அவர்களுக்கு எதிராக பிற முஸ்லிம்களாலேயே கைகொள்ளப்படுகிறது என்றும், அத்துட்ன ‘பிரியாணிக்காக மதம் மாறினார்கள்’ என்ற இழிச்சொல்லும் வேறு இந்துக்களிடமிருந்து வருகிறது என்றும் ஆசிரியர் சொல்கிறார். அப்படி இருக்கும்போது மதம் மாறுவதன் அர்த்தம் என்ன? Between a rock and a hard place என்பார்களே, அதுபோன்ற நிலைமை இவர்களுக்கு. கிராமச் சமூகத்தில் ஆதிக்க இந்துச் சாதிகளால் துன்பம். இதெல்லாம் போய்விடும் என்று மதம் மாறினாலோ, உள்ளதும் போச்சுடா என்ற நிலைமை. ஒரு பக்கம், பெற்றுவந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் கிடையாது. கட்டிக்கொள்ளப் பையன்கள் கிடைக்கமாட்டார்கள். பிற “பாரம்பரிய” முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படாத சூழல். இழிசாதி என்ற பட்டப்பெயருடன், இப்போது பிரியாணிக்கு மதம் மாறினவன் என்ற இழிசொல்லும் சேர்ந்துகொள்கிறது. இத்துடன் ரகசிய போலீஸ் வேறு வந்து, சவூதி அரேபியா போனாயா, யார் உன்னை அங்கே அழைத்தது, யார் இந்த ட்ரிப்புக்கு ஃபைனான்ஸ், அங்கே என்ன செய்தாய் என்று ‘தீவிரவாதியோ?’ என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.

40 வயதாகியும் மணம் ஆகவில்லையே என்பதைவிட அதனால் தன் தந்தை தினம் தினம் மனமுடைந்து சாகிறாரே என்ற வருத்தத்தால் உயிர் மாய்த்துக்கொண்ட கருப்பாயியாக இருந்து நூர்ஜஹானாக மாறிய பெண் எழுதிவைக்கும் நீண்ட தற்கொலைக் கடிதத்திலிருந்து தொடங்கும் கதை, இறுதி வரியில், அந்த மக்கள் தாம் மாறிய முஸ்லிம் சமுதாயத்திலேயே தொடர்ந்து இருப்பார்களா அல்லது மீண்டும் மதத்தை மாற்றிக்கொள்ளப்போகிறார்களா என்ற சந்தேகத்துடன் முடிக்கிறது.
“எ ...மம்முது பள்ளிக்கு வாரியாத்தா என்று சொன்னதும் மொத்த ஜமாத்தும் அவரைப் பின் தொடர்ந்ததா? இல்லை அங்கேயே நின்றுவிட்டதா?”
இந்தக் கதை கேட்கும் கேள்விகள் ஏராளம். தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்றும் தொடரும் சாதிய அடக்குமுறை. முக்கியமாக தேவர் - பள்ளர் சிக்கல். அதிலிருந்து வெளியேற முடியாத இறுக்கமான சூழல். மதமாற்றம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுதல். ஆனால் அது தீர்வே அல்ல என்பது முப்பதாண்டுகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்படுதல். இப்போது என்னதான் செய்வது?

என்னதான் செய்வது?

***

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்: நாவல், அன்வர் பாலசிங்கம், கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம், செங்கோட்டை, திருநெல்வேலி.
புதுக் காலணித் தெரு, கலங்காத கண்டி, பூலான்குடியிருப்பு அஞ்சல், செங்கோட்டை தாலுகா, திருநெல்வேலி 627813, தொலைபேசி எண்கள் 94458-01247 begin_of_the_skype_highlighting            94458-01247      end_of_the_skype_highlighting, 97914-98999 begin_of_the_skype_highlighting            97914-98999      end_of_the_skype_highlighting, பக்கங்கள் 102, விலை ரூ. 100.

2 கருத்துகள்:

  1. தங்களின் விமர்சனம் படித்தேன். புத்தகத்தை அறிமுகம் செய்துள்ள விதம் அருமை.வாழ்த்துக்கள்! , புத்தகம் இப்போது டிஸ்கவரி புக் பேலஸ்-ல் கிடைக்கிறது. தொடர்புக்கு- 9940446650

    பதிலளிநீக்கு
  2. http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27556-2014-12-22-05-41-53

    கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் ஆசிரியருடன் நேருக்கு நேர், கள ஆய்வுகளின் தொகுப்பு

    பதிலளிநீக்கு