செவ்வாய், 27 டிசம்பர், 2011

ஈழத் தமிழர்கள் பலருக்கு பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை?


 http://mathimaran.wordpress.com/
தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இந்திய தேசியத்தை எதிர்ப்பதை விட திராவிடத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?
-ரவிச்சந்திரன், வெண்ணிறைபந்தல்.
தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் பலர் காங்கிரஸ் மனோபாவம் நிறைந்தவர்களாகவும்; காந்தி, காமராஜ், ராஜாஜி, கருப்பையா மூப்பனார் போன்று இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த தலைவர்களை தங்கள் வழி காட்டிகளாக கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த காங்கிரஸ் மனோபாவம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்களைவிட ஆபத்தானவர்கள்.
இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்களில் பலர், பார்ப்பனிய ஆதரவு, சுயஜாதி வெறி, தலித் விரோதம், இந்திய தேசியம் பேசிய ஜாதித் தலைவர்களை முன்னிறுத்துவது, பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை புறக்கணிப்பது, திராவிட இயக்க எதிர்ப்பு, இட ஒதுக்கிடு எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு, பால்தாக்ரே, மோடி, வேதாந்தி போன்ற இந்து மதவெறியர்களை ஆதரிப்பது இதுதான் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் பேரில் முன்னிலைப்படுத்துகிற அரசியல்.
அதனால்தான், இன்று தமிழ்த் தேசியவாதிகளின் மத்தியில், ஜாதி ஒழிப்பு குறித்தும், பெரியார், அம்பேத்கர் குறித்தும் பேசுவதே தமிழர்களை பிரிப்பதற்கான சதி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பலருக்கு பிரபாகரனைத் தவிர; இந்து மதத்தையும், ஜாதியையும் எதிர்க்கும் பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை என்பதும் தமிழ்த் தேசியவாதிகளின் இந்த மனோபாவத்துக்கு ஒரு சிறப்புக் காரணம்.

மறந்தும்; இந்துமதம், பார்ப்பனர்கள் குறித்து எப்போதும் வாய் திறக்காத ஒரே திராவிட இயக்கத் தலைவர் வைகோதான். வேதாந்தி, சேது பாலம் பிரச்சினை வந்தபோதும்கூட அவர் இந்து மதத்திற்கு எதிராக வாய் திறந்ததே இல்லை. பா.ஜ.க போன்ற மதவாத கட்சிகளோடு கூட்டு வைப்பதும், வாஜ்பாய் போன்றவர்களோடு நெருக்கமாக இருப்பதிலும் பெருமை கொள்பவர்தான் இந்த வைகோ. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற காரணத்திற்காகவும் திராவிட இயக்கத்தின் கைதேர்ந்த சந்தர்ப்பவாதியான, வைகோவை மட்டும் ஆதரிக்கிறார்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.
அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்றவர் வைகோ. அவர் ‘விசா’ கொடுத்தால், வெளி நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களிடம் இருந்து சிறப்பு அழைப்பு கிடைக்கும். உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சென்று வரலாம் என்ற ஆர்வத்தில்தான் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் வைகோவை ஆதரிக்கிறார்கள்.
அதுபோக, முத்துராமலிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று ஒவ்வொரு ஆண்டும் அவரை வானுயுரப் புகழ்ந்து வீர முழக்கம் செய்கிற ஒரே தலைவர் வைகோதான். அவரை ஆதரிக்கிற முற்போக்காளர்கள் அதை ஒரு குற்றமாக கருதுவதே இல்லை.
தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இந்திய தேசியத்தை சரியாக எதிர்த்தால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்க வேண்டும். இந்தியா என்கிற ஒரு நாடே தேவையில்லை, என்பதோடு மிக குறிப்பாக தனித் தமிழ்நாடு கோரிக்கையைதான் மாற்றாக, தீவிரமாக முன்மொழிய வேண்டும்.
ஆனால், இவைகளை செய்தால், காலத்துக்கும் உள்ளபோய் களி திங்க வேண்டியதுதான்.
அதனால்தான் தமிழ் உணர்வு என்பதை ஈழ ஆதரவோடு நிறுத்திக் கொண்டு. இந்திய தேசிய எதிர்ப்புக்கு பதில், திராவிட இயக்க அல்லது பெரியார் எதிர்ப்பாக ‘வின்னர்’ பட வடிவேலுபோல் சீறுகிறார்கள்.
ஒரு தலைவருக்கு ஜாதிய பின்னணி இருந்தால் அவரை விமர்சிக்க பயப்படுவார்கள். அதுபோலவே, யாரிடம் ஜனநாயகத் தன்மை இருக்கிறதோ அந்தத் தலைவர்களைத் தான் விமர்சிக்கவும் முடியும். அது பெரியாரிடம் ஏராளமாக இருக்கிறது. பெரியாரை அவதூறு செய்தால் எந்த ஜாதிக்காரனும் அருவா தூக்கிட்டு வரமாட்டான் என்பது மட்டுமல்ல, மகிழ்ச்சியடைவான். குறிப்பிட்ட ஜாதிக்கார்களின் ஓட்டோ, ஆதரவோ, தனிப்பட்ட முறையிலான லாபமோ பாதிக்கப்படாது. மாறாக அதிகரிக்கும்.
ஜாதி செல்வாக்கு இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கப்படுகிற ஓரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. அதே காரணத்திற்காகவே, அவரை அவதூறும் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்தக் காலத்திலேயே முற்போக்காளர்களிடம் ரவுடித் தனம் காட்டுகிற ஜாதிய உணர்வாளர்கள், அந்தக் காலத்தில் பெரியாரை தாக்கியும் இருக்கிறார்கள்.
பெரியார் எதிர்ப்பாளர்களின் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ள வரலாற்றின் இந்த சாட்சி உதவியாக இருக்கும்; 1956 பிப்ரவரி 20 ல் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ஒட்டி தமிழகத்திற்கு ஆதரவாக நடக்கவிருந்த பொதுவேலை நிறுத்தத்தில் திராவிடர் கழகம், திமுக, ஷெட்யூல் காஸ்ட் பெடரேஷன், தமிழரசுக் கழகம், கம்யுனிஸ்ட் கட்சி போன்றவை கலந்து கொள்வதாக அறிவித்தன.
‘பந்த நடத்தினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள்’ என்று போராட்டக் காரர்களை மிரட்டினார் முதல்வர் காமராஜர். இன்றுகூட ‘தேவிகுளம், பீர்மேடு பகுதி நம்மிடம் இருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்சினையே வராது’ என்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். அதை கேரளாவிற்கு தாரை வார்த்ததில் காமராஜருக்கு அதிக பங்கு உண்டு.
ஆனால், தமிழ்த் தேசியவாதிகள் இன்றுவரை பெரியாரை, திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறார்களே தவிர, காமராஜரை ஒன்றும் சொல்வதில்லை. காரணம், காமராஜரை விமர்சித்தால் நாடார் ஜாதி உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும் அல்லது ஆதரவை இழக்க வேண்டிவரும். குறிப்பாக, நாடார்களால் நடதப்படுகிற பத்திரிகைகளால், புறக்கணிப்படுவோமோ என்கிற அச்சம் கூடுதலானது.
ஏனென்றால், காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க, கம்யுனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசியம், ‘முற்போக்காளர்கள்’, பத்திரிகையாளர்கள், வியாபாரிகள் இப்படி எல்லாக் கட்சிகளிலும், துறைகளிலும் இருக்கிற நாடார் ஜாதி உணர்வாளர்களின் Icon காமராஜர்.
தீவிர நாடார் ஜாதி உணர்வாளர்கள் மத்தியில், ‘காமராஜரை தோற்கடித்தவர்கள்’ என்கிற காரணமும் திமுக எதிர்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அண்ணாதுரை மரணத்திற்கு பின், கலைஞரின் தலைமை காரணமாக முதலியார்கள், கலைஞரின் மேல் கொலைவெறியோடு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நெடுஞ்செழியனைப்போல் அதிமுகவை ஆதரித்தார்கள். இன்றும் திராவிட இயக்க எதிர்ப்பு என்று பெயரில் கருணாநிதி எதிர்ப்பையும். ஜெயலலிதா ஆதரவையும் தங்களின் தமிழ் உணர்வாக வெளிப்படுத்துகிறார்கள்.
ஆக, திராவிட இயக்க எதிர்ப்பு என்ற பெயரில் பெரியாரையும் விமர்சிப்பவர்கள், பச்சையான ஜாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் பெரியாரை கடுமையாக திட்டிவிட்டு, மாற்றாக தன்ஜாதித் தலைவர்களை பரிந்துரைக்கிறார்கள்.
பெரியாரை தங்களின் அமைப்பின் சார்பாக அதிகாரப் பூர்வமாக பொதுக்கூட்டங்களில், பத்திரிகைகளில் பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருந்தார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு அவதூறு செய்பவர்களுக்கு, ‘தில்’ இருந்தால், அவர்கள் சார்ந்திருக்கிற அமைப்பு ரீதியாக அவர்களின் பத்திரிக்கையிலோ அல்லது அதிகாரப் பூர்மாகவோ, தமிழ்த் தேசியத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இருந்த முத்துராமலிங்க தேவரை, ராமதாசை விமர்சிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். மாட்டார்கள்.
குறைந்தபட்சம் அவர்களை இவர்கள் ஆதரிக்காமல் இருந்தாலே, அதுவே பெரிய துணிச்சலான செயல்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக