வியாழன், 8 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடியவர்களை விடுதலை செய்ய வேண்டும்: த.தே.பொது.க.



அட்டூழியம் செய்யும் மலையாளிகள் மீது கேரளத்தில் ஒரு வழக்கும் கிடையாதுதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால் தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து 7.12.2011 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி துண்டறிக்கை கொடுத்துப் பரப்புரை இயக்கம் நடத்தியது.
இதையொட்டி சென்னை, ஓசூர், கோவை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் சொத்துக்கு சேதம் உண்டாக்குதல், சட்ட விரோதமாகக் கூடுதல், இரு சமூகப் பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், காயம் உண்டாக்குதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

இப்போராட்டம் குறித்து மக்கள் தொலைக்காட்சி செய்தியாளருக்கு தஞ்சையில் நேர்காணல் கொடுத்தபோது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ. பால்ராசு ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அத்துடன் தஞ்சையில் 4 மலையாளிகள் கடையைச் சேதப்படுத்தியதாக த.தே.பொ.க. தோழர்களை வீடுகளில் சென்று தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தில் ஆலுக்காஸ் நகை மாளிகை முன் மலையாளிகளை  வெளியேறக் கோரிய தோழர்கள் மீது 147,148,153,324,3(1), தனியார் சொத்துக்குச் சேதம் உண்டாக்கியது ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச் சுடர் உட்பட 5 தோழர்களைக் கைது செய்துள்ளனர்.
கோவையில் ஆலுக்காஸ், கஸானா ஆகிய கடைகளின் முன் கோரிக்கையை வலியுறுத்தித் துண்டறிக்கை கொடுத்த த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் பா. சங்கர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
ஓசூரில் ஆலுக்காஸ் நகைமாளிகை முன் பரப்புரை செய்த த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து உட்பட 11 தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்து வைத்துள்ளனர்.
சென்னையில் ஆலுக்காஸ் நகைமாளிகை முன் பரப்புரை செய்த த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி உட்பட 6 தோழர்களைக் கைது செய்து வைத்துள்ளனர்.
கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற அப்பாவித் தமிழ் பக்தர்களை மலையாளிகள் தாக்கி காயப்படுத்தினர்.  தமிழர்களின் கடைகளைச் சூறையாடினர். தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்துகளுக்குச் சேதம் உண்டாக்கினர்.  தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.  அன்றாடக் கூலி வேலைக்குச் சென்ற பெண்கள் உள்ளிட்ட 500 தமிழர்களைச் சிறைபிடித்து வைத்தனர்.  அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறைகளை ஏவி அட்டூழியம் செய்யும் மலையாளிகள் மீது கேரளத்தில் ஒரு வழக்கும் கிடையாது.  தமிழ்நாட்டில் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பரப்புரை இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது கடுமையான தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பது மலையாளிகளின் இனவெறிக்கு தமிழக அரசே ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. தமிழக முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதி தமிழ் மக்களுக்கு எதிராகக் கேரளத்தில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்கக் கோரினார். கேரள மக்களுக்கும் இணக்கமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை.
கேரள மக்களிடம் தமிழர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டும் நடவடிக்கைகளில் அங்குள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிரமாக உள்ளன.  கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபானியும் கேரள அரசு அமைத்துள்ள முல்லைப்  பெரியாறு அணை வல்லுநர் குழுவின் தலைவர் பொறியாளர் பரமேஸ்வரன் நாயரும் கேரள உயர் நீதிமன்றத்தில், முல்லைப்  பெரியாறு அணை உடையும் ஆபத்து இல்லை என்றும், ஒரு வேளை அவ்வணை உடைந்தால் அந்த வெள்ள நீரை இடுக்கி மற்றும் சிறுதோணி அணைகள் தாங்கிக் கொள்ளும் என்றும், அதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறினார்கள்.  அதன்பிறகு முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் (சி.பி.எம்.) தமிழக அரசு மலையாள அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்துள்ளது என்றும், யார் யாருக்குக் கையூட்டு கொடுத்தோம் என்பதைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.  மேலும் அவர் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி உண்ணாப் போராட்டமும் நடத்துகிறார்.
கேரள ஆளுங்கட்சி முதன்மை எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக அணையை உடைக்கவும், தமிழ் மக்களைத் தாக்கவும் மலையாளிகளைத் தூண்டி வருகிறார்கள்.  அத்துடன் தமிழக அரசை இழிவுபடுத்தும் வகையில் கேரள அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்ததாகப் பொய் கூறுகிறார்கள்.
இந்நிலையில் தமிழகக் காவல் துறையினர் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பரப்புரைப் போராட்டம் நடத்திய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மீது மிகவும் கடுமையான தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு அவர்களைச் சிறையில் அடைப்பது எந்த வகையிலும் ஞாயம் இல்லை.
எனவே தமிழக அரசு த.தே.பொ.க. தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக