புதன், 7 டிசம்பர், 2011

உயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா?

Raja

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜாமீன் கோராமல் இருப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை அவரது வழக்கறிஞர் சுகில் குமார் மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, மூத்த தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கனிமொழி, சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி மற்றும் 5 தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் உள்பட 12 பேர் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
ராசா, தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளான சித்தார்த் பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மட்டுமே சிறையில் உள்ளனர். இதில் சந்தோலியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதை டெல்லி உயர் நீதிமன்றம் இதில் தானாகவே தலையிட்டு ஜாமீனை நிறுத்தி வைத்தது. ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த ஜாமீன் உறுதி செய்யப்படுமா என்பது நாளை டெல்லி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்தது.

இந்த வழக்கில் கைதான 14 பேரில் இதுவரை ஜாமீன் மனுவே தாக்கல் செய்யாதது ராசா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால், பாதுகாப்புக்காகத் தான் அவர் ஜாமீனே கோரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை அவரது வழக்கறிஞர் சுகில்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், நானும் கூட இந்தக் கதைகளைக் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தச் செய்திகளில் உண்மையில்லை, அது வெறும் புரளி தான்.

அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து அடுத்து ராசா மனு தாக்கல் செய்வார்.

ராசா, பெகுரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வெவ்வேறானவை. என்றாலும் அவரது ஜாமீன் மனு மீது என்ன தீர்ப்பு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதுவரை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு ராசாவுக்கு எந்த யோசனையும் நான் தர மாட்டேன் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக