திங்கள், 5 டிசம்பர், 2011

இந்தியர்களிடம் ஒரு கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்

புதுடில்லி: "இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும். இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம்.
கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்தின் தேவையானது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 23 சதவீதம் குறைந்திருந்தாலும், டன் அளவில், தங்கத்தை அதிகளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. பணத்தின் மதிப்பு குறைவதற்கு, தங்கத்தின் நுகர்வு அதிகரிப்பதும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தங்கம் தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் சப்ளையான தங்கத்தில், 92 சதவீதம் இறக்குமதி மூலமே சரி செய்யப்பட்டது. மீதி மட்டுமே இதர வகைகளில் வந்தது. இவ்வாறு, மேக்குவாரி கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக