செவ்வாய், 20 டிசம்பர், 2011

33 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!

Voyager


-ஏ.கே.கான்

இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.
பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது.
இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றிடத்துக்கு 'கனம்' எங்கிருந்து வருகிறது?. அயனி நிலைக்குத் தள்ளப்பட்ட (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் சப் அடாமிக் பார்ட்டிகிள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ள விஷயங்கள்.

இந்தப் பகுதிக்குள் தான் இப்போது நுழைந்துள்ளது வாயேஜர்-1 விண்கலம். ஏவப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பகுதியை அடைந்துள்ளது வாயேஜர்-1, இதனோடு சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1997ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை எட்டிப் பார்த்துவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது அண்டவெளியை அடைந்துள்ளன.

இதில் வாயேஜர்-1 இன்றைய தேதியில் பூமியிலிருந்து 17,000 கோடி கி.மீ. தூரம் பயணித்துவிட்டது. (இது கடக்கும் தூரத்தை உடனுக்குடன் அறிய). இன்னொரு பாதையில் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள வாயேஜர்-2 சுமார் 14,000 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்துவிட்டது.
அதாவது, இவை இரண்டுமே ஒரு நொடிக்கு 5 கி.மீ. தூரம் என்ற வேகத்தில் பறந்து கொண்டுள்ளன.

இந்த இரு விண்கலங்களுமே இன்னும் பூமிக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளன என்பது தான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.

இந்த 33 ஆண்டுகளில் இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலையைக் கண்டுபிடித்தன, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தன, நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்களைக் கண்டுபிடித்தன, நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வதைக் கண்டுபிடித்தன.

மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.

மேலும் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அனைத்தும் பல்வேறு சிறிய வளையங்களால் ஆனவை என்பதும், இதில் 'எப்' என்ற வளையத்தை இரு சிறிய துணைக் கோள்கள் கட்டுப்படுத்துவதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.

மேலும் சனி கிரகத்தின் இந்த வளையங்களில் அலைகள் இருப்பதும், இந்த கிரகத்தின் நிலவுகளால் தான் இந்த அதிர்வு-அலைகள் உருவாவதையும் இந்த விண்கலங்கள் கண்டுபிடித்தன. இதை வைத்து அந்த வளையங்களின் எடையையும் கூட நாஸாவால் கணக்கிட முடிந்தது.

வழியில் வேற்றுகிரகவாசிகள் யாராவது இந்த விண்கலங்களைக் காண நேர்ந்தால், பூமியைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு சொல்லும் வகையில், இந்த விண்கலத்தில் மனிதர்களின் படங்கள், பூமியின் படங்கள், சூறாவளி-கடல் அலைகளின் சத்தம், பறவைகளின் ஓசை, இசை என பலவகைப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன!.

1990ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் கடைசி கோளான புளுட்டோவைக் கடந்த இந்த விண்கலங்கள், இந்த மாத துவக்கத்தில் "heliosheath" என்ற நமது சூரியனின் கதிர்வீச்சுகள் தொடும் அதிகபட்ச தூரத்தை எட்டியுள்ளன. இந்தப் பகுதியைத் தாண்டிவிட்டால், சூரிய கதிர்வீச்சுக்கள் கூட இருக்காது, அதாவது நமது சூரியனின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டிவிட்டதாக அர்த்தம்.

இந்த விண்கலங்கள் இன்னும் 2,96,000 வருடங்களுக்கு சேதமடையாமல் பயணித்தால் தான் வானிலேயே மிக பிரகாசமான நட்சத்திரமான சிரியசிலிந்து (Sirius) 37 டிரில்லியன் கி.மீ. தூரத்தை இவை அடைய முடியும்.

இப்போது புரிகிறதா.. இந்த அண்டவெளி எப்படி விரிந்து கிடக்கிறது என்று!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக