திங்கள், 26 டிசம்பர், 2011

பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி

திருவள்ளூர்: சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி சுற்றுலாத் தலமாகும். அபாயகரமான ஏரியும் கூட. இருப்பினும் பலரும் இங்கு சுற்றுலா சவாரியாக படகு சவாரி செய்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று ஒரு படகு சுற்றுலா வந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில் 25க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் படகு பாரம் தாங்க முடியாமல், ஏரியின் நடுவில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கிய பலரும் உயிருக்காக போராடினர். அதில் 22 பேர் உயிரிழந்து விட்டனர்.
இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
படகில் பயணித்தவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்நதவர்கள் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா இரங்கல்
பழவேற்காடு படகு விபத்து குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் பி.வி.ரமணா, மூர்த்தி ஆகியோரையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக